Sunday, January 10, 2021

அவர் பட்டியலில் என் நூலும் இருக்கும்



 தோழர் ச.சுப்பாரவ், தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், எங்கள் மதுரைக் கோட்டத் தோழர், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பெருமைகளில் ஒருவர்.

முற்றுகை பற்றிய அவரது விமர்சனத்தை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

நான் நாவல் எழுதுவதற்கு அவரும் ஒரு முக்கிய காரணம். முற்றுகை வெளியீடு பற்றி 22.02.2020 அன்று எழுதிய

 வாழ்வின் உன்னத தருணமாக

என்ற பதிவில் குறிப்பிட்டதை இங்கே சொல்வது மிகவும் அவசியம்

இன்சூரன்ஸ் ஊழியர்களின் பெருமையாக இருக்கிற எழுத்தாளர் தோழர் ச.சுப்பாராவ் அவர்கள் எழுதிய  “வன புத்திரி” நாவலைப் பற்றி அவரோடு கருத்துப் பரிமாற்றம் செய்கையில் நீங்களும் கூட நாவல் எழுதலாமே என்றார். அதுதான் இந்த நூலுக்கான முதல் பொறி.

தோழர் சுப்பாராவ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். உங்கள் விமர்சனத் தராசிற்கும். 


வாசிப்பு சவால் 2021 - 3/36

முற்றுகை

வரலாற்றைப் புனைவாக்குவது மிகவும் கடினம். மிகப் பழங்கால வரலாறு என்றால் தரவுகள் கிடைப்பது, கிடைத்த தரவுகளை சரிபார்ப்பது மிகவும் சிரமமாக இருக்கும். சமீபத்திய வரலாற்றைப் புனைவாக்குவதில் வேறு விதமான சிரமம். அந்த வரலாற்றில் பங்கேற்றவர்கள் பலர் உயிரோடு இருப்பார்கள். அவர்களது நினைவுகளில் அந்த நிகழ்வு பசுமையாக இருக்கும். அதில் சிறிதளவு தவறாக எழுதிவிட்டாலும் கடும் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். இப்படிச் சிக்கலான வரலாற்றுப் புனைவை தன் முதல் நாவலாக எழுதியிருக்கிறார் வேலூர் சுரா. முற்றுகை என்ற அந்த வரலாற்றுப் புனைவில் மற்றொரு புதுமையும் உண்டு. ஒரு தொழிற்சங்கத்தின் மிக முக்கியமான போராட்ட வரலாற்றைப் புனைவாகக் கூறும் புதுமை. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் 1960களில் இயந்திரமயத்திற்கு எதிராக நடத்திய இலாக்கோ விஜில் என்ற மாபெரும் போராட்டம் பற்றிய சிறு நாவல் இது.

1960களில் பத்தாயிரம் பேரின் வேலையை தானே செய்துவிடும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை நிர்வாகம் நிறுவப்போவதை எதிர்த்து எல்.ஐ.சி ஊழியர்கள் நடத்தி வெற்றி பெற்ற போராட்டம். இன்று அதிக அளவில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் பொதுத் துறை நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக எல்.ஐ.சி. இது எப்படி நிகழ்ந்தது? இதில் எது சரி? எது தவறு? இல்லை இரண்டுமே தவறா? இல்லை இரண்டுமே சரியா? இரண்டும் சரி என்றால் எவ்வாறு அப்படி இருக்க முடியும்? 1960களில் இந்த மாபெரும் போராட்டத்தில் கலந்து கொண்ட முதிய ஊழியர் ஒருவர் இன்று தனது ஓய்வூதியம் தொடர்பாக தனது அலுவலகம் செல்லும் போது ஒவ்வொரு ஊழியர் முன்னும் ஒரு கம்ப்யூட்டர் இருப்பதைப் பார்க்கும் போது, அவர் மனதில் எழும் கேள்விகள். போராட்ட வரலாறு பின்னோக்கு உத்தியாக வருகிறது. கதையின் முடிவில் இன்சூரன்ஸ் ஊழியர்களின் தலைவராக இருந்து இந்தப் போராட்டத்தை வழிநடத்தியவரும், இன்று 98 வயதிலும் இயக்கத்தின் நிகழ்வுகளில் துடிப்போடு பங்கேற்பவருமான தோழர். சந்திரசேகர போஸ் தன் சக போராளிக்கு விடை தருகிறார்.

‘அதீத இயந்திரமயம் வேலைகளைப் பறிக்கும். தேவைக்குக் குறைவான இயந்திரமயம் தொழிலையே பாதிக்கும்,‘ ( Too much automation kills employment and Too little automation kills organization ) என்ற உலகமயப் போட்டிச் சூழலுக்கேற்ப பொதுத் துறை தொழிற்சங்கங்களின் அணுகுமுறை அமைய வேண்டியதன் அவசியத்தை மிக அழகாகப் புனைவாகக் கூறும் படைப்பு.

80 பக்க நாவல்தான் என்றாலும், புடம் போட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் தியாகம், தோழமைச் சங்கங்களை ஒருங்கிணைப்பது, நிர்வாகத்தின் கெடுபிடிகள், பழிவாங்கும் நடவடிக்கைகள் எல்லாம் பொருத்தமான இடங்களில் காட்டப்படுகின்றன. என்றாலும், இது வெறும் பிரச்சாரமாக, சங்கத்தின் சுற்றறிக்கை, மாநாட்டு அறிக்கை போன்று இல்லை. ஒரு கலைப்படைப்பாகத் தான் இருக்கிறது. நாவலில் 1960களின் கல்கத்தா, அன்று வந்த திரைப்படங்கள், சினிமாப் பாடல்கள் என்று மிக யதார்த்தமாகக் காட்டப்பட்டிருப்பதில் நாவலாசிரியரின் கள ஆய்வு வெளிப்படுகிறது.

நாவலில் பல அற்புதமான இடங்கள் இருந்தாலும், என் மனம் கவர்ந்த இடம் ஒன்றைச் சொல்லி நிறைவு செய்கிறேன். மகளிர் தோழர்களும் கலந்து கொள்ளும் கூட்டு ஆர்ப்பாட்டம். இது போன்ற ஆர்ப்பாட்டங்களில் இளைய தோழர்கள் தன் ஆள் எங்கே நிற்கிறது? என்று கண்களால் தேடுவது வழக்கம். ( இன்று எல்.ஐ.சி ஊழியரின் சராசரி வயது 52. புது பணிநியமனமே இல்லை என்பதால் இதெல்லாம் பழங்கதை. 25 – 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடந்த ஒன்று) நாயகன் ஒருதலையாகக் காதலிக்கும் பெண் ஊழியரும் ஆர்ப்பாட்டத்தில் நிற்கிறாள். நாயகனின் நண்பன் இன்று அவளிடம் உன் காதலைச் சொல்லி விடு என்று சொல்கிறான். அதற்கு நாயகன் வேண்டாம், வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். பெண்கள் ஆர்ப்பாட்டம், இயக்கம் என்று வெளியில் வருவதே பெரிய விஷயம். அந்த இடத்தில் நான் இப்படி ஏதாவது சொல்லப் போக, அவள் இயக்கங்களுக்கே வராமல் போய்விடப் போகிறாள் என்கிறான். ஊழியர்களை சங்கம் அப்படித்தான் வளர்ந்திருந்தது. இப்போதும் வளர்க்கிறது. இப்படிப்பட்ட தோழர்களை நானே பார்த்ததுண்டு. இதை சுரா நாவலில் ஒரு பொருத்தமான இடத்தில் சேர்த்திருக்கிறார்.

ஒரு இன்சூரன்ஸ் ஊழியராக இந்த நாவல் என்னை ஈர்த்தது உண்மைதான் என்றாலும், நாற்பதாண்டுகளாக விடாமல் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு வாசகன் என்ற வகையில், நான் ஒரு வெறும் வாசகனாக தள்ளி நின்று பார்த்தாலும், இந்த நாவல் அருமையானதாகவே இருக்கிறது. உண்மையில் நாவலை இரண்டு நாட்களுக்கு முன்பே படித்து முடித்து விட்டாலும், எனது விமர்சனத் தராசை எனது தொழிற்சங்க உணர்வு எந்த விதத்திலும் ஒரு பக்கமாகச் சாய்த்துவிடக் கூடாது என்று எழுதுவதைத் தள்ளி வைத்து, திரும்பத் திரும்ப நாவல் குறித்து யோசித்த பின்னர் நல்ல நாவல் தான் என்று உறுதியாக முடிவுக்கு வந்த பிறகு இதைப் பதிவு செய்கிறேன்.

எனதருமைத் தோழர் சு. ராமன் என்ற வேலூர் சுராவிற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
முற்றுகை
வேலூர் சுரா
பாரதி புத்தகாலயம் வெளியீடு
விலை ரூ80.00 பக்கம் – 80.

ஒவ்வொரு ஆண்டு முதல் நாளிலும் தான் வாசித்த நூல்களின் பட்டியலை தோழர் சுப்பாராவ் வெளியிடுவார். முக நூல் உலகில் அது மிகவும் பிரபலம். அடுத்த ஆண்டு அவருடைய பட்டியலில் என் நூலும் இடம் பெறும் என்பது ரொம்பவுமே சந்தோஷமாக இருக்கிறது. 

2 comments: