Sunday, March 29, 2020

மோடிக்கும் மோகிகளுக்கும் வலி புரியாது . . .

மோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவிக்கிற எந்த ஒரு முடிவும் இந்நாட்டு மக்களுக்கு துயரத்தைத் தவிர வேறெதையும் தருவதில்லை என்பதே  தொடர்ச்சியான அனுபவமாக இருக்கிறது. 

ஜனவரி மாதம் முதலே கொரோனா குறித்த நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கினோம் என்று மத்தியரசு இன்று கூசாமல் பொய் சொல்லியுள்ளது. 

21 நாட்கள் ஊரடங்கு என்பது இன்றைய அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடனடியாக மோடிக்கு எழுதிய கடிதத்தில் "21 நாட்கள் மக்கள் உயிரோடு வாழ வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

எந்த வித முன் யோசனையோ முன் ஏற்பாடோ இல்லாமல் அமலாக்கிய ஊரடங்கு உத்தரவு புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் நோக்கி துரத்திக் கொண்டிருக்கிறது. 

புகைப்படங்களும் கீழே உள்ள ஒரு கருத்துப்படங்களும் மிகுந்த வலி தருபவை. எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதனின் பதிவும் கீழே உள்ளது. வலியை அதிகப்படுத்துகிறது அப்பதிவில் உள்ள உண்மை. 

இதெல்லாம் மோடிக்கோ, மோடியை மோகிப்போருக்கோ புரியப் போவதில்லை. ஏனென்றால் அவர்கள் பொய்களிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

வலி மிகுந்த காட்சிகளை தொலைக்காட்சிகளிலும் எத்தனை நாள் நாம் மௌனமாக கடந்து போகப் போகிறோம்!

அறிவிலாதார் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் இந்த அவலம் தொடரும் என்பதை உரக்கச் சொல்ல வேண்டாமா? இந்த நேரத்தில் அரசியலா என்ற கேள்வி எழலாம்.

இப்போது உண்மையைப் பேசாமல் வேறெப்போது பேசுவது!






*நனையும் இமைகள்...*
*நடுங்கும் இதயம்...*
**********************************

*க.சுவாமிநாதன்*

"நான் கான்பூருக்கு போக வேண்டும். ரயில்கள் இல்லை. ஏதாவது ஒரு வண்டியை பிடித்து ஊருக்கு பக்கத்திலாவது போய் விட முடியாதா என்று தவித்து நிற்கிறேன். எப்படியோ இன்னும் சில நாட்களில் சாகப் போகிறேன். இங்கேயே நான் தங்கினால் பசியிலேயே செத்து விடுவேன். போகிற வழியில் நோய் தொற்றினாலும் பரவாயில்லை. சொந்த மண்ணிலாவது போய் செத்துப் போகலாம்"

இது மனிஷ் குமார் என்கிற நொய்டா அருகில் உள்ள கஸ்னாவின் ஜவுளி ஆலையில் வேலை பார்த்து வந்த புலம் பெயர் தொழிலாளி. நாடு தழுவிய ஊரடங்கால் இப்போது ஒரு வாரமாக ஆலை மூடிக் கிடக்கிறது. 

இப்படி குரல்கள் லட்ச கணக்கில், கோடிக் கணக்கில் நாடு முழுவதும் கேட்கின்றன.

*சாலையெங்கும் ஓலங்கள்* 

டெல்லி யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள "ஜீரோ பாயிண்ட்" நேற்று புலம் பெயர் தொழிலாளர்களின் கடலாக இருந்ததென்பது வேதனையான காட்சி. "தனித்திரு" என்ற ஊரடங்கு உத்தரவு, மனித உயிர் காக்க விதிக்கப்பட்ட அரச கட்டளைகளின் நோக்கம் அங்கு "தோல்வி அடைந்திருக்கிறது". இது பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் வார்த்தைகள். 

யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் கௌதம் புத்தா நகர்- ஆக்ரா சந்திப்புதான் உத்தரப் பிரதேச எல்லை. அங்குதான் நேற்று பல்லாயிரக் கணக்கில் மக்கள் திரண்டு இருக்கிறார்கள். உத்தரப்பிரதேச அரசு 200 வாகனங்களை ஏற்பாடு செய்வதாக செய்திருந்த அறிவிப்பை கேட்டு வந்தவர்கள் அவர்கள். ஒவ்வொரு வாகனம் வந்த போதும் ஓடி ஓடி மோதி மோதி இடம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இடித்து உட்கார்கிற நிற்கிற அவலங்கள் அரங்கேறியுள்ளன. 

அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதை இருக்கிறது. எழுத்தாளர்கள் அல்ல அவர்கள். கற்பனைகள் வறண்டு போன இதயங்கள் அவர்களுடையது. கேட்பவர்களுக்கு எந்த செய்தியும் அவர்களிடம் இல்லை. இருந்தாலும் அவர்கள் வார்த்தைகளுக்கு இணையான இலக்கியம் ஏதும் இருக்க முடியாது. 

"நான் சிறிய அளவில் தொழில் செய்யும் ஒரு மொத்த பழ வியாபாரி.  எல்லா பழங்களும் அழுகிவிட்டன. வைப்பதற்கு இடமில்லை. பதத்தோடு பாதுகாக்க ஐஸ் சப்ளை செய்ய ஆளில்லை. இங்கு இருந்தால் பசியோடு வாட வேண்டும். இல்லாவிட்டால் பிச்சை எடுக்க வேண்டும். சொந்த ஊருக்கு போய் விடுவதே நல்லது என்று காத்திருக்கிறேன்".

இப்படி வாகனங்களை எதிர்பார்க்காமல் 200, 300 கி.மீ நடந்து கொண்டிருப்பவர்கள் பல்லாயிரம் பேர். கைகளில் குழந்தைகளோடு, ஊரில் இருந்து வருகிற செல் அழைப்புகளுக்கு பதில் சொன்னவாறு, பல நூறு மைல்கள் வந்தும் வாயிற்கும் வயிற்றுக்கும் அல்லாடி சம்பாதித்த சொத்துக்களான அழுக்குப் பைகளோடு... சாலைகளில் இரவும் பகலும் இவர்களின் கால்கள். 

*நினைப்பவர்கள் யார்?*

இவர்கள் கண்களில் நீர் வற்றி விட்டது. புன்னகை மறைந்து விட்டது. வழியில் பழங்களை, சிறு சிறு உணவு பொட்டலங்களை தருகிற நல்லுள்ளங்களுக்கு நன்றி சொல்லக் கூட தோன்றாத விரக்தியோடு நடக்கிறார்கள். கடக்கிற மைல் கற்கள் கூட அவர்கள் கண்களில் படுவதில்லை. வீசியெறியப்பட்ட குப்பை போல மனிதம் வீதியெங்கும் சிதறிக் கிடக்கிறது. 

தேசிய நெடுஞ்சாலை எண் 8 லும் இதே காட்சி. அது டெல்லியையும், ஜெய்ப்பூரையும் இணைக்கிற சாலை. அதன் இரு மருங்கிலும் ஜனத் திரள். 

"நாங்கள் கட்டிடத் தொழிலாளர்கள். குரு கிராமில் உள்ள டி.எல்.எப் கட்டம் 2 ல் இருந்து நடக்க துவங்கினோம். எங்கள் ஊர் ராஜஸ்தான் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள சவாய் ஆகும். 550 கி.மீ தூரம்"

இது நர்சிங் லால் என்கிற கட்டிடத் தொழிலாளியின் பகிர்வு. "நான் இனிமேல் ஓட்டு போடவே மாட்டேன்" என்று கோபப்படுகிறார். இவர்கள் நம்பிக்கையையெல்லாம் இந்த தேசம் எப்படி மீட்டு எடுப்பது! 

எதிர் திசையில் நடப்பவர்கள் கண்ணோஜ் நோக்கி நடந்து செல்கிறார்கள். 443 கி.மீ. இன்னும் பல பேர் எங்கே போகிறார்கள் தெரியுமா? அயோத்தி. அவர்கள் ராஜஸ்தான் பிவாடி நகரில் கட்டிட வேலைக்கு வந்தவர்கள். இப்போது அவர்கள் கைகளுக்கும், அடுக்க வேண்டிய செங்கல்களுக்கும் வேலை இல்லை. கட்டுவதற்கு ஏதுமில்லை. என்ன சொல்வது? அரசியல் பேசுவதற்கு இது நேரமில்லை என்பது நடுத்தர வர்க்க மனோ நிலை. அரசியல் இல்லாமல் எது இருக்கிறது! எது மிச்சம் இருக்கிறது...

பகல் காட்சிகளை விட இரவு காட்சிகள் மிக மோசமானவை. நடந்து போகிறவர்கள் என்ணிக்கை பல மடங்குகள். பரிதாபாத் சாலையில் கூட்டம் கூட்டமாய்...

ஊரில் இருக்கிற அம்மாவிடம் இருந்து செல் அழைப்பு.

"அம்மா உனக்கு தெரியாதா என்ன நிலைமை என்று.... ஏன் திரும்ப திரும்ப கேட்கிறாய்... வந்து கொண்டிருக்கிறேன். நான் எங்கே போய் விட முடியும். நம்பு. வீட்டிற்கு வந்து விடுவேன்" 

அம்மாவிடம் பேசும் போதுதான் வார்த்தைகளில் உயிர், உணர்ச்சி இருக்கும் போலிருக்கிறது! இயலாமையால் எழும் மெல்லிய கோபத்துடன் கூட...

இன்றைய (மார்ச் 29, 2020) இந்து ஆங்கில நாளிதழின் 7 ஆம் பக்கம் விவரிக்கிற செய்திகள் இவை. புகைப்படங்கள் நிலைமையின் கடுமையை உணர்த்துகின்றன. டெல்லி மட்டுமல்ல. நவி மும்பை, சண்டிகர், லக்னோ போன்ற நகரங்களிலும் இதே காட்சிகள். 

இவை எல்லாம் நமது கண்களில் கசிவை ஏற்படுத்தலாம். ஆனால் கிரன் என்கிற புலம் பெயர் தொழிலாளி எழுப்புகிற கேள்விதான் முக்கியம். அது நமது இதயத்தை கிழிக்கிறது. கிழிக்க வேண்டும்.  

"யார் எங்களைப் பற்றி நினைக்கிறார்கள்? இதயத்தின் ஓரத்திலாவது எங்களை பற்றி கவலைப் பட சிறு இடம் வைத்திருக்கலாமே!"

என்ன பதில் நம்மிடம் உள்ளது?

*கடந்து போகக் கூடாது*

பெரும் பெரும் துயரங்கள் ஏற்படுத்தும் சோகங்கள் நம்மை அப்போதைக்கு அலைக் கழித்தாலும் பின்னர் மறந்து போய் விடுகின்றன. ஓர் பெருந் துயர் வரும் போதுதான் பொருளாதாரத்தில் அரசின் தலையீடு, வருமான திரட்டலில் உள்ள பாரபட்சம், மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கான முறைமையின் (Delivery Mechanism) பலவீனம், உடல் நல கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, விழிப்புணர்வு பற்றியெல்லாம் ஆழமாக கவலைப்படுகிறோம். மாற்று பற்றி யோசிக்கிறோம். ஆனால் ஒரே இரவில் சரி செய்ய இயலாதே என்று திகைத்து நிற்கிறோம். நீண்ட காலத் தீர்வுகள் சாதாரண காலங்களில் மனதில் ஒட்டுவதில்லை. ஒட்டுகிற காலத்தின் நெருக்கடி, இருப்பதற்குள் என்ன செய்வது என்று முடக்கி விடுகிறது. சாதாரண மக்கள் "கொரோனா" உருவாக்குகிற பாதுகாப்பற்ற உணர்வை அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் அனுபவித்து வருவதன் வெளிப்பாடே இந்த கோடிக் கணக்கானோரின் நீண்ட நெடிய நடை. 

13 கோடி பேர் புலம் பெயர் தொழிலாளர்களாக சொந்த ஊரை விட்டு, சொந்த உறவுகளை விட்டு பல நூறு கி.மீ தூரம் பணி புரிகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் பேர் இப்படி மாநிலம் மாநிலம் விட்டு அத்தக் கூலிகளாய் நகர்கிறார்கள். இவர்களுக்கு பணிப் பாதுகாப்பு உண்டா? உண்ண, உறங்க, குளிக்க, காலைக் கடன் கழிக்க ஏதேனும் ஏற்பாடுகள் உண்டா? டெல்லி அடுக்குமாடி தொழிலகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி திணறி பொசுங்கி இறந்தவர்கள் இவர்களே. இந்த பொருளாதார வைரஸ் பற்றி சமூகத்தில் விவாதமாவது உண்டா? அரசு அறிவிக்கிற நிவாரணங்களை பெறுவதற்கான ரேஷன் அட்டைகளாவது உண்டா? 

கேரள இடது முன்னணி அரசு இவர்களுக்கு வைத்துள்ள பெயர் " விருந்தாளி தொழிலாளர்". (Guest workers). அவர்களுக்கு வீடுகள் கட்டி தந்துள்ளது. அடையாள அட்டைகள் தந்துள்ளது. இடதுசாரிகளின் இத்தகைய மாற்று அணுகுமுறையாவது மற்ற மாநிலங்களின் மனச் சாட்சியை அசைத்துள்ளனவா? மத்திய மாநில அரசுகளே உடனடி நிவாரணம், உயிர் பாதுகாப்பு ஏற்பாடுகள் இவர்களை எட்டட்டும்! எதிர்காலம் உங்கள் பொருளாதாரப்  பாதையை மாற்றட்டும்! என்ற குரல் கேட்க வேண்டாமா!

அதுவரையில் இவர்களுக்கு என்ன சொல்வது! நடக்கட்டும். கால்கள் நோக நடக்கட்டும். கை குழந்தைகள் சுமக்கிற தாய்மார்கள் கண் சொருகாமல் பத்திரமாய் நடக்கட்டும். இடைவெளி விட்டு இடைவெளி விட்டு நடந்து செல்லுங்கள்.  கொரோனா தொற்றி விடாமல் கவனமாக இருங்கள். யாராவது கீழே விழுந்தால் தொட்டுத் தூக்கி விட்டு தண்ணீர் கிடைத்தால் கை கழுவுங்கள். சோப்பு இருந்தால் போட்டு கழுவுங்கள்.
எப்படியாவது வீடுகளை போய் சேருங்கள். 
அம்மாவின், இணையரின், உறவுகளின் முகமாவது ஆறுதலைத் தரட்டும்.  குற்ற உணர்வோடு கூனிக் குறுகியே சொல்கிறோம். எங்கள் நல்லெண்ணங்கள் மட்டும் உங்களுக்கு உதவி விடாதே! இந்த வார்த்தைகளை தவிர வேறு எதையும் நமபிக்கையுடன் சொல்ல முடிகிறதா?

*ஒரு வார்த்தை உண்டு. நீங்கள் இன்று நடக்கிறீர்கள். நாங்கள் இந்த துயரை, வலியை, கசப்பான உண்மையை எந்திர கதியாய் எதிர்வினை இல்லாமல் வரும் காலத்தில் கடந்து விட மாட்டோம் என்பதே.*

No comments:

Post a Comment