Tuesday, March 17, 2020

கடிதம் புரிந்ததா மோடி அவர்களே?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் மோடிக்கு எழுதிய கடிதத்தை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இதனை எனக்கு அனுப்பிய எங்கள் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி திரு பா.இசக்கிராஜன் அவர்கள் "ஒரு இடதுசாரி இலக்கியவாதியை தேர்வு செய்தமைக்கு மதுரை பெருமை கொள்கிறது"  என்று குறிப்பிட்டிருந்தார். சத்தியமான வார்த்தை இது.



அக்கடிதத்தில் மிக முக்கியமான ஒரு பத்தியை சற்று பெரிய எழுத்துக்களில் அளித்துள்ளேன். எச்.ராசா மாதிரி தற்குறிகளுக்குப் பதிலாக நல்லதொரு மொழிபெயர்ப்பாளர் மூலம் அக்கடிதத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ள மோடி முயற்சிக்க வேண்டும். 



நேற்று எனது பிறந்த நாளுக்கு எண்ணற்றத் தோழர்கள், நண்பர்கள், வாசகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றி.

மேதகு குடியரசுத்தலைவர் அவர்களும், மாண்புமிகு பிரதமர் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு வாழ்த்துகளை அனுப்பியுள்ளனர். அவர்களுக்கு எனது அன்பும் நன்றியும்.

திருச்சியில் இருந்து ஏ.மரியம் பீவி என்பவர் ஒரிரு வாரத்துக்கு முன்பு எனக்கு நன்றி சொல்லி எழுதிய கடிதமொன்றினை, எமது நாடாளுமன்ற அலுவலத்தோழர்கள் நேற்று தந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினரின் பணிக்காக எனக்கு எழுதப்பட்ட கடிதம் தான் அது. அதில் இருந்த வார்த்தைகள் அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாதவை. வலிநிறைந்த அனுபவமொன்றிலிருந்து மீள உதவியமைக்காக நிறைந்த அன்பாலும், அளவிட முடியாத நன்றியுணர்வாலும் எழுதப்பட்ட கடிதமது.

அக்கடிதத்தை படித்து முடித்த சிறிது நேரத்தில் தான் பிரதமரின் வாழ்த்து கடிதம் கைக்கு வந்தது. இரண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வந்து சேர்ந்த கடிதங்கள் தான்.

ஒரு புறம் பிரதமரின் வார்த்தையும், இன்னொருபுறம் மரியம் பீவியின் வார்த்தையையும் என் கண்களுக்கு முன்னால் இருந்தது. மரியம் பீவி தனது பிறப்புச்சான்றிதழ் கேட்டு மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகளாக இடைவிடாது முயற்சிக்கிறார். திருச்சியில் இருக்கும் அவர் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரைக்கு எண்ணற்ற முறை வந்து செல்கிறார். ஆனால் மாநகராட்சி அலுவலரோ ஏதேதோ காரணம் சொல்லி சான்றிதழ் தருவதை தவிர்க்கின்றனர். இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற சிஏஏ வுக்கு எதிரான போராட்டத்தில் நான் கலந்து கொள்வதாக விளம்பரத்தைப் பார்த்து என்னை நேரில் சந்தித்து மனுகொடுக்க வந்துள்ளார். ஆனால் அப்போராட்டத்துக்கு நான் செல்லவில்லை. அச்செய்தி அவரை மிக சோர்வடையச்செய்துள்ளது. உடன் இருந்த தோழர் ஒருவர் அந்த மனுவை எனக்கு தபாலில் அனுப்பிவைக்க சொல்லியுள்ளார். அரைமனதோடு அவர் தபாலில் எனக்கு அனுப்பிவைத்துள்ளார்.

எனது அலுவகத்துக்கு கடிதம் வந்ததும் உடன் மாநகராட்சி அலுவலருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். எனது கடிதத்தின் பேரில் மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. மரியம் பீவியை தொலைபேசியில் அழைத்து அலுவலகத்துக்கு வரச்சொல்லி பிறப்புச் சான்றிதழை கொடுத்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவித்து தான் மரியம் பீவி அவர்கள் எனக்கு இக்கடிதம் எழுதியுள்ளார்.

மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களே, ஒருவர் தான் பிறந்த சான்றிதழ் வாங்க இரண்டு ஆண்டுகள் இடைவிடாது முயற்சி செய்கிறார். அப்பொழுதும் அவருக்கு அச்சான்றிதழ் கிடைக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டுவருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தலையிட்ட பின்னரே அவருக்கு அச்சான்றிதழ் கிடைக்கிறது.

அச்சான்றித்ழைப் பெற்று தந்ததை தனது உயிருள்ளவரை மறக்கமாட்டேன் என்று உணர்வு மேலிட கூறுகிறார். என்பொருட்டும், என் நலம் வேண்டியும் இறைவனை தொழுது கண்ணீர் சொரிகிறார். அவர் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் இருப்பது பிறப்புச்சான்றிதழ் பெற இரண்டு ஆண்டுகள் அவர் அடைந்த துன்பமும், வலியும் தான். அந்தத் துன்பமே அளப்பறிய செயலை நான் செய்துள்ளதாக அவரை நம்பவைக்கிறது. இதற்கு கைமாறு செய்ய இறைவனின் ஆசியை கோருகிறது.

பிரதமர் அவர்களே, முன்பின் முகம் பார்த்தறியாத அந்த சகோதரி எனக்கு நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வத்தையும், நோய்நொடி இல்லாத வாழ்வையும் வழங்க இறைவனை மனமுருகிப் பிராத்திக்கும் அளவுக்கு நான் அவருக்கு எதுவும் செய்துவிடவில்லை. என் அலுவலகத்துக்கு வந்த ஒரு கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசு அலுவலருக்கு அனுப்பிவைத்தேன். அது மட்டுமே நான் செய்தது. இச்சிறுபணிக்கு உயிருள்ள வரைமறக்கமுடியாத நன்றியை மக்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்றால், அப்பணி செய்ய முடியாமல் அவர்களை தடுத்துக்கொண்டிருக்கும் சுவர்கள் எவ்வளவு வலிமையானதாக இருக்கும்?

மாண்புமிகு பிரதமர் அவர்களே, தனது பிறப்புச்சான்றிதழ் பெறவே இவ்வளவு துன்பப்பட வேண்டிய நிலையில் மரியம் பீவிக்களும், மாரியம்மாக்களும் இருக்கிறார்கள். நீங்களோ அவர்களுடையப் பெற்றோரின் பிறப்புச்சான்றிதழையும் சேர்த்து கேட்கிறீர்கள்.

மாண்புமிகு பிரதமர் அவர்களே, எனக்கு நீங்கள் அனுப்பிய வாழ்த்து செய்தியில் “உங்களின் வளமான பல்வேறு அனுபவங்கள் தொடர்ந்து இத்திருநாட்டின் உயர்வுக்கு உதவட்டும்” என்று குறிப்பிட்டுள்ளீர்களே, அந்த வார்த்தையுள் இருக்கும் உண்மையைப் பற்றிகேட்கிறேன். சிஏஏ வை திரும்பப்பெறுங்கள், என்பிஆர், என்ஆர்சி யை கைவிடுங்கள். உங்களின் நலனுக்காகவும், வளத்துக்காகவும் இறைவனை தொழ எண்ணிலடங்காத எளிய மக்கள் காத்திருக்கிறார்கள். இந்திய நாட்டின் உயர்வுக்கு அது பேருதவியாக இருக்கும்.

நாம் வாழ்கிற காலத்துக்கும், வகிக்கிற பொறுப்புக்கும் அர்த்தம் இருக்கிறது. அது மக்களின் துயர்நீங்க உழைப்பதும், அவர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நிலமாக இத்திருநாட்டினை மாற்றுவதும். 
இச்செயல்பாட்டில் மேலும் என்னை விசைகூட்டிக்கொள்ள இந்நாளில் கிடைக்கப்பெற்ற வாழ்த்துகள் அமைந்திருந்தன.

வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டமைக்காக மீண்டுமொரு முறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்புடன்
சு.வெங்கடேசன்
நாடாளுமன்ற உறுப்பினர்.
சி பி ஐ (எம்) மதுரை

2 comments:

  1. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது கடிதம் புரிந்ததா மோடி அவர்களே? பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    Please use page break option into your post

    ReplyDelete