Sunday, March 29, 2020

மறுபடியும் வேணும்னு யாருய்யா கேட்டது?



பெரும்பாலான மக்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் "ராமாயணம்' தொலைக்காட்சித் தொடரை மீண்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப் போவதாக  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்தேகர் அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருக்கும் காலத்தில் மக்களை ராமர் பக்கம் திருப்புவதற்கான உத்தி என்பதைத் தவிர வேறொன்றும் இதில் இல்லை.

ராமாயணம் முதல் முறை வந்த காலத்தில் ஹிந்தி மொழி புரிகிறதோ இல்லையோ தொலைக்காட்சி முன்பாக அமர்ந்திருந்த மக்கள் உண்டு. அக்காலக்கட்டத்தில்தான் நெய்வேலி உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொலைகட்சி ஒளிபரப்பு மையங்கள் துவக்கப்பட்டு தூர்தர்ஷன் பல இல்லங்களுக்கு வந்திருந்த காலம் அது. சாலிடர், டயனோரா போன்ற  கலர் டி.விகளும் சில வீடுகளில் எட்டிப் பார்த்த காலம் அது. அதனால் ராமாயணம் பார்க்கும் எண்ணிக்கை கூடுதலாகவே இருந்தது யதார்த்தம். 

அப்போது எங்கள் நெய்வேலிக் கிளை சென்னைக் கோட்டத்தில்தான் இருந்தது. வேலூர் கோட்டம் பிரிக்கப்படவில்லை. அலுவலக வேலையாக சென்னை சென்றால் சத்தியமூர்த்தி பவனுக்கு எதிரில் உள்ள சர்மானி ஹோட்டலில் தங்குவது வழக்கம். தனிப்பட்ட முறையில் சென்றாலும் அங்கே தங்குவேன்.  பஞ்சாபிகள் நடத்தும் ஹோட்டல் அது. வட இந்தியர்கள் அதிகமாக தங்குவார்கள். 

ஹோட்டல் வரவேற்பறையில் இருக்கும் தொலைக்காட்சியை யாருமே சீண்ட மாட்டார்கள். வெளியே போய் விட்டு வருகையில் நான் மட்டும் தனியே அமர்ந்து புரிந்தும் புரியாமலும் ஏதாவது பார்த்து விட்டு வருவேன். ஆனால் இரண்டு முறை ஞாயிறு காலையில் நான் பார்த்த காட்சி ஆச்சர்யமாக இருந்தது.

விடுதியில் தங்கியிருந்த அனைவருமே தொலைக்காட்சி முன்பாக அமர்ந்து ராமாயணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாற்காலிகள் நிரம்பி தரையில் கூட அமர்ந்திருந்தார்கள். அதுவே அப்போதைய தொலைக்காட்சி பரபரப்பான சித்தார்த்த பாசுவின் "Quiz Time" நிகழ்ச்சியை பார்க்க ஈ, காக்கா இருக்காது.

ஏதோ தெரிந்த கதை, புராணம் என்பதால் இவ்வளவு ஆர்வம் என்று அப்போது நினைத்ததுண்டு. ஆனால் இந்த ராமாயணம் தொலைக்காட்சித் தொடர் பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்குத்தான் பயன்பட்டிருக்கிறது. காங்கிரஸ் அரசு ஒரு அடி முட்டாள் அரசாக இருந்துள்ளது என்பதற்கும் இது ஒரு உதாரணம். 

"கடவுளின் பெயரால்" என்ற ஆவணப்படம் மூலம் அயோத்தி ராமன் பெயரில் சங்கிகள் செய்த அராஜகத்தை ஆவணப்படமாக்கிய திரு ஆனந்த் பட்வர்தன், ராமர் கோயில் பிரச்சினையை ஊதிப் பெருக்க சங்கிகளுக்கு ராமாயணம் தொலைக்காட்சியும் உதவிகரமாக இருந்தது என்று கூறியது நினைவுக்கு வருகிறது.

"நரி செத்தாலும் அதன் கண் இரை மீதுதான்" என்று சொலவடைக்கு ஏற்ப மக்கள் ஏராளமான இன்னல்களை சந்தித்து வரும் வேளையிலும் கூட பாஜக தன் செயல் திட்டத்தில் கறாராக இருக்கிறது. ராமர் பெயரில் தன் அரசியலை தொடர பழைய தொலைக்காட்சித் தொடரை தூசி தட்டி மீண்டும் ஒளிபரப்புகிறது.

மக்களின் விருப்பப்படி என்று ஒரு டயலாக் விட்டுள்ளாரே, அங்கேதான் காவிச்சாயம் வெளுத்துப் போகிறது.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்கள் துயரத்தில் என் செய்வது என்று தவிக்கும் வேளையில் அவர்களின் முன்னுரிமை அடுத்த வேளை உணவா? அல்லது ராமாயணம் தொலைக்காட்சித் தொடரா?

அப்படி யாருய்யா கேட்டது உன்னை?

பிகு: பி.ஆர்.சோப்ரா இயக்கத்தில் வெளி வந்த மகாபாரதம் தொலைக்காட்சித் தொடரை ஒப்பிடுகையில் ராமானந்த சாகர் தயாரித்து இயக்கிய ராமாயணம் படு மொக்கை என்பதை இரண்டு தொலைக்காட்சித் தொடர்களையும் பார்த்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

பிகு 2 

நேற்றே எழுதியது. அதை பகிரும் முன் தின மலரின் ஜாதி வெறி கார்ட்டூனைப் பார்த்த காரணத்தால் முன்னுரிமை மாறி, இன்றைக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment