Saturday, June 29, 2019

ஒரே நாடு, ஒரே தேர்தல் – ஒரே பொய், ஒரே மோசடி




மக்களவைக்கும் அனைத்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்ற யோசனையை  மேலோட்டமாக பார்த்தால் செலவினத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தக் கூடிய நல்ல ஆலோசனை போல தோன்றலாம். ஆனால் மத்தியரசு முன்மொழிந்துள்ள ஆலோசனைகள் எல்லாம் அபாயகரமானவை.

துவக்க காலத்தில் மக்களவைத் தேர்தல் நடந்த போது அதோடு இணைந்துதான் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலும் நடந்து கொண்டிருந்தது. ஜனநாயக விரோதமாக சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டதுதான் மாறுபட்ட காலங்களில் தேர்தல்கள் நடக்க காரணமானது. சில மக்களவைகள் பதவிக்காலத்திற்கு முன்பே கலைக்கப்பட்டதும் இன்னொரு காரணம்.

இப்போதைய முன்மொழிவுகள் படி ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் பதவிக்காலம் முடியும் முன்பே சில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியிருக்கும். ஐந்தாண்டு காலம் செயல்பட வேண்டிய சட்டப் பேரவைகளை முன்பே கலைப்பதோ அல்லது சட்டப்பேரவைகளின் காலத்தை நீட்டிப்பதோ, இரண்டுமே சரியில்லை.

ஐந்தாண்டு காலத்திற்குள்ளாக பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஒரு சட்டப் பேரவையை கலைக்கும் சூழல் ஏற்பட்டால் உடனடியாக தேர்தல் நடத்துவதற்குப் பதிலாக மக்களவைத் தேர்தல் வரை அந்த ஆளுனரின் பொறுப்பில் ஆட்சியை ஒப்படைப்பது என்பது ஜனநாயகத்திற்கு முரணானது. அது போல மக்களவையில் பெரும்பான்மை இல்லாத போது குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமலாக்குவது என்பதும் சரியாக இருக்காது. அதிகாரக்குவியலுக்கே இது இட்டுச் செல்லும்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் 2021 ல் எடப்பாடி ஆட்சி முடிந்து விடும். மக்களவைத் தேர்தலோ 2024 ல் தான் வரும். அதுவரை எடப்பாடியின் ஆட்சி தொடரலாம் அல்லது 2024 வரை ஆளுனர் ஆட்சி அமலில் இருக்கும்.

இது அடுக்குமா? 

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தற்போதுள்ள ஆட்சியாளர்கள் ஒரே பொய்யை மக்களவைக்கும் மாநிலங்களுக்கு சொல்லவும் செய்யும் மோசடியை ஒரே நேரத்தில் செய்வதற்கும் வசதியாக இருக்கும் என்பதற்காகத்தான்.

பாஜக, அதன் கூட்டணிக்கட்சிகள் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்த முன்மொழிவை நிராகரித்துள்ளனர். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் போன்ற கட்சிகள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தையே புறக்கணிக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர், இது ஏன் ஜனநாயக விரோத நடவடிக்கை என்று விளக்கமாக ஒரு கடிதமே அளித்துள்ளார்.

தன் வறட்டுப் பிடிவாதத்தை மத்தியரசு கை விட வேண்டும். அதுதான் இந்திய ஜனநாயகத்திற்கு நல்லது.


No comments:

Post a Comment