Sunday, July 1, 2018

முட்களை அகற்றி பூஞ்சோலையாக்க . . .



68 வது ஆண்டில்  . . .

இன்று எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அறுபத்தி எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

1951 ம் ஆண்டு இதே நாளில் அன்றைய பம்பாய் நகரில் தாதரில் உள்ள துரு ஹால் என்ற அரங்கில் உதயமானது அகில இந்திய இன்சூரன்ட் ஊழியர் சங்கம்.

சில தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த சங்கங்கள், சில மாநில அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்த சங்கங்கள் அகில இந்திய அளவில் ஒரு அமைப்பு இருந்தால் மட்டுமே ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டு, பாலிசிதாரர்களின் சேமிப்பைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி முதலாளிகளோடு போராட முடியும் என்ற புரிதலோடு உருவானது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

காப்பீட்டுத்துறையை தேசியமயமாக்க வேண்டும் என்பதே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முதல் தீர்மானம். அந்த தீர்மானத்தின் மீதான போராட்டப் பயணமே "எல்.ஐ.சி" எனும் மகத்தான நிறுவனத்தின் உதயத்திற்கு வழி வகுத்தது.

அறுபத்தி ஏழு ஆண்டு கால பயணம் என்பது அவ்வளவு சுலபமானதாக என்றைக்குமே இருந்ததில்லை. 

தனியார் முதலாளிகளின் காலம் தொடங்கி இன்றைய பாஜக ஆட்சிக்காலம் வரை 

எத்தனையோ சவால்கள், 
எத்தனையோ பிரச்சினைகள், 
எத்தனையோ துரோகிகள், 
எத்தனையோ எதிரிகள்,

ஆள்பவர்களின்  சதிகள்,
நிர்வாகத்தின் அடக்குமுறைகள்

அத்தனையையும் சந்தித்து,  முறியடித்து

உறுதியோடு தன் வெற்றிப் பயணத்தை தொடரும்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

எல்.ஐ.சி நிறுவனத்தையும் 

பொதுத்துறை நிறுவனமாக பாதுகாத்து வருகிறது.

ஊழியர்களுக்கு உன்னதமான வாழ்க்கைத்தரத்தையும்
அளித்துள்ளது.

அறுபத்தி எட்டாவது ஆண்டில் அடியெடுப்பதை முன்னிட்டு எங்கள் அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் ஒரு உருதுக் கவிதையை குறிப்பிட்டிருப்பார். 

அதன் தமிழாக்கத்தை இங்கே பகிர்வது பொருத்தமாக இருக்கும்.

ஆம், உண்மைதான். நாம் இந்த
பூவுலகை பூஞ்சோலையாய் மாற்றிடவில்லை,
ஆனால் நம் பயணத்தின் பாதைகளிலிருந்த
சில முட்களையாவது குறைத்திருக்கிறோம்.

பூவுலகை பூஞ்சோலையாக மாற்றும் பயணம் மேலும் தொடரும், முன்னை விட வேகமாக,
முன்னை விட உறுதியாக.


அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வாழியவே . . . .

2 comments:

  1. Long live AIIEA WITH its wonderful goal becoming true in the forthcoming years.

    ReplyDelete