Monday, July 23, 2018

செண்டிமென்ட் (கடைக்குட்டி) சிங்கம்





நேற்று காலைக் காட்சி சென்றிருந்தோம்.  படத்தில் வரும் சத்யராஜ் குடும்பத்து உறுப்பினர்கள் அளவு கூட தியேட்டரில் பால்கனியில் ஆட்கள் இல்லை. கீழேயும் கூடத்தான். மின் கட்டணம் கட்டக்கூட டிக்கெட் வசூல் வந்திருக்குமா என்ற கேள்வியோடுதான் படம் பார்க்க துவங்கினோம்.

படத்தின் சாதக அம்சங்கள் என்னவென்று பார்த்தால்

விவசாயியை மதிக்க வேண்டும், விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிற படம்.

அதே போலத்தான் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட படம்.

குடும்ப உறவுகள் பற்றி நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த படம். ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அற்புதமான ஒளிப்பதிவு, கார்த்திக்கின் இயல்பான நடிப்பு, சூரியின் காமெடி  ஆகியவையும் படத்திற்குப் பலம். சத்யராஜை இன்னும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

ஆணவக் கொலை செய்கின்றவனை காவல்துறையும் நீதிபதியும் மிகக் கடுமையாக நடத்துகிற , சாடுகிற காட்சிகள் நிஜத்திலும் நடந்தால் நன்றாக இருக்கும் என்று ஏங்க வைக்கிறது.

கார்த்திக்கு பெண் தர வேண்டும் என்று காத்திருந்த அக்காக்கள் கோபப்படுவதிலாவது நியாயம் உண்டு. மற்ற அக்காக்களின் கோபமெல்லாம் கதையை இழுத்துச் செல்ல செயற்கையாக உருவாக்கப்பட்டதாக இருக்கிறது.

அதே போல ஒரே பாடலில் கதாநாயகன் பணக்காரனாவது போல, க்ளைமேக்ஸில் கார்த்திக் கண்ணீர் மல்க பேச, அனைவரும் திருந்தி விடுவது அதிக பட்ச செயற்கையாக இருக்கிறது.

தியேட்டரை விட்டு வெளியே வந்த உடனேயே பாட்டெல்லாம் மறந்து போய் விடுகிறது.

சமீப காலத்தில் ஓவர் செண்டிமெண்ட், ஓவர் கண்ணீரோடு வந்த படம் இதுதான்.

அப்புறம் முக்கியமாக

சத்ரியன் படத்தில் “மாலையில் யாரோ? மனதோடு பேச” என்று பாடிய, சுந்தர காண்டத்தில் சேலையை வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போட்ட பானுபிரியாவா இது? பரிதாபம் !!!

பின் குறிப்பு : கடைசி வரியைப் பார்த்து விட்டு எங்கள் தோழர் ஆரோக்கியராஜ், "தோழர் ராமனின் விருப்பப்படி" என்று “மாலையில் யாரோ?” பாடலை வாட்ஸப் க்ரூப்பில் போடாமல் இருக்க வேண்டுமே என்ற பதட்டம் வேறு இருக்கத்தான் செய்கிறது.

No comments:

Post a Comment