Friday, May 4, 2018

எனக்குன்னு வந்து மாட்டறாங்கய்யா




ஏ.டி.எம் செல்கையில் குடி மகன் யாரிடமாவது மாட்டிக் கொள்கிற கொடுமை மிகப் பெரிய அவஸ்தை.

அவ்வப்போது அந்த கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

போன வாரத்தில் ஒரு நாள். நான் வங்கிக் கணக்கு வைத்திருக்கிற ஐ.ஓ.பி யின் சத்துவாச்சாரி ஏ.டி.எம்மில் பணம் எடுத்து விட்டு அதை  மிகப் பெரிய சாதனையாக கருதிய தருணம் (ஆமாம், 8 நவம்பர் 2016 க்குப் பிறகு இரண்டாவது  முறையாக அந்த ஏ.டி.எம்மில் பணம் எடுத்தது சாதனைதானே!) என் பின்னே நிழலாடியது.

கதவைத் திறந்து கொண்டு சத்தமே இல்லாமல் ஒருவர் பின்னே நின்று கொண்டிருந்தார். அவசரம் அவசரமாக பணத்தை சட்டைப் பையில் திணித்துக் கொண்டேன்.

“சார் கோச்சிக்காதீங்க, ஒரு ஆறாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுங்க” என்ற அவரிடம் மெல்லியதாக டாஸ்மாக் வாசம் வீசிக் கொண்டிருந்தது.

கார்டை நுழைத்து பின் நம்பரைக் கேட்டால் ஒரு நம்பரைச் சொன்னார். ஏ.டி.எம் இயந்திரமோ அது தவறு என்றது. ஒரு நம்பர் மாத்தி சொல்லிட்டேன் என்று சொல்ல மறு முறை முயன்றால் அப்போது தவறான எண் என்றே இயந்திரம் சொன்னது. 

இந்த தடவை கரெக்டா சொல்றேன் என்ற போது “மறுபடியும் தப்பாச்சுன்னா கார்ட் ப்ளாக் ஆயிடும்.  வீட்டில எங்கயாவது எழுதி வச்சிருந்தா சரி பார்த்துட்டு அப்பறமா எடுங்க” என்று நான் கொஞ்சம் கடுப்போடு சொன்ன போது  “சரி சார். இது என் வீட்டம்மா கார்டு, அவங்களையே கேட்கிறேன்” என்று போன் செய்து விவரத்தைச் சொல்லி “ நீ சார் கிட்டயே நம்பரை சொல்லு” என்று என்னிடம் போனை கொடுத்து விட்டார்.

அவர்களோ எண்ணைச் சொல்வதற்கு முன்பாக கேட்ட முதல் கேள்வி “எவ்வளவு ரூபாய் எடுக்கச் சொன்னார்?”  ஆறாயிரம் என்று சொன்னவுடன் “அடப்பாவி, ஆயிரம் ரூபாயை சுருட்டப்பாத்தாரா? நான் ஐயாயிரம் ரூபாய்தான்  எடுக்கச் சொன்னேன்” என்று சொல்லி கணவரிடமே போனை கொடுக்கச் சொன்னார்.

சரியான பாட்டு விழுகிறது என்பதை அந்த குடிமகனின் முகபாவத்தில் இருந்தே தெரிந்தது. ஐயாயிரம் ரூபாயே எடுத்துக் கொடுங்கள் என்று சோகத்தோடு சொல்ல, அதன் பின் தான் அந்த பெண்மணி பின் நம்பரைச் சொன்னார். இப்படி வில்லங்கம் செய்வார் என்பதற்காகத்தான் சரியான எண்ணை சொல்லவில்லை போல.

என்ன ஒரு வில்லத்தனம்!!!!

நிறைய ஏ.டி.எம் கார்ட்  வச்சிருக்கவங்க எல்லாம் நிம்மதியா இருக்காங்க. ஒரே ஒரு கார்டை வச்சிக்கிட்டு நான் படற அவஸ்தை இருக்கே!!!!!

3 comments:

  1. ஹாஹாஹா எனக்கு கூட இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. என்னிடம் உதவி கேட்ட குடியரசு மகனும் பின் நம்பரை இரண்டு முறை தவறாக சொல்ல, மூன்றாவது தடவை நான் முயற்சிக்கவில்லை.

    ReplyDelete