Tuesday, May 1, 2018

அரே...அரே...அரே...எர்ர ஜன்டா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சாமுவேல்ராஜ் எழுதிய உணர்ச்சிமிக்க கட்டுரையை இம் மேநன்னாளில் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
“அரே...அரே...அரே...எர்ர ஜன்டா”

கேட்போரைக் கட்டிபோடும் உச்ச ஸ்தாயியில் பாடிக்கொண்டே இருக்கிறார்கள். சுந்தரத் தெலுங்கு என கேள்விப்பட்டிருக்கிறோம். செந்தனலை அப்படியே உள்வாங்கிக் கொண்டதாக ஆவேசத் தெலுங்கு நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. நாற்காலிகளின் விளிம்பிற்கு நம்மையறியாமல் நகர்ந்து கொள்கிறோம். நரம்புகள் முறுக்கேறிக் கொள்கின்றன. அவர்களின் குரல் மட்டுமா, மொத்த உடலின் அசைவு களும் அதிர்கின்றன. யுத்தக்களத்தில் ஆரோகணித்து பாய்ந்தோடிவரும் போர்ப்புரவி போல் பாடலின் ஊடே கலைஞர்கள் கைகளில் எர்ர ஜன்டாக்கள் சுற்றிச் சுழல்கின்றன.ஹைதராபாத் நகர் சிவப்பு வண்ணத்தால் நிறைந்திருந்தது. சுவர்களில் எழுத்துக்கள், சாலையில் தோரணங்கள், சந்திப்புகளில் வட்ட, வட்டமாய் விளம்பரப் பதாகைகள் என காண்போரை கவர்ந்திழுத்து விதவிதமாய் செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தன.சிவப்பு ஆடை அணிந்திருந்த ஆண், பெண் தோழர்களின் அன்பில் கரைந்து அரங்கத்தை அடைந்தோம். இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் படைத்தளபதியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 22 வது மாநாடு அரங்கம் அது.ஒவ்வொன்றும் மிகுந்த கவனத்துடனும், கலையம்சத்துடனும் செய்யப்பட்டிருந்தன.

வைரம்பாய்ச்சி நிற்கிறது...
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் விவசாயிகளும், நிலமற்ற ஏழைகளும் நடத்திய தெலுங்கானா ஆயுதப் போராட்டம் இந்திய உழைக்கும் மக்களின் வரலாற்றில் வைரம் பாய்ச்சி நிற்கிறது. 1946 ‍ முதல் 1951 வரை நடைபெற்ற மகத்தான மக்கள் போராட்டம் அது. 16 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவிற்குள் 3 ஆயிரம் கிராமங்களில் சுமார் 30 லட்சம் விவசாய மக்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஐந்து ஆண்டுகள் நடத்திய மாபெரும் எழுச்சியே தெலுங்கானாவின் வீரவரலாறு. நல்கொண்டா, வாரங்கால், கம்மம் ஆகிய மூன்று மாவட்டங்களில் நிலங்கள் மீட்கப்பட்டு ஏழை விவசாயிகளுக்கு சொந்தமாக்கப்பட்டது.முதலில் ஹைதராபாத் நிஜாமின் ரஜாக்கர்கள் போலீஸ், பின் இந்திய அரசின் போலீஸ், ராணுவம் - இவை அனைத்தையும் நிலவுரிமைக்காக எம் மக்கள் எதிர்த்துப் போராடினார்கள். 

உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டிய விடுதலை இந்தியாவின் ராணுவம், கொடுங்கோலன் நிஜாமோடு நின்றது. எர்ர ஜன்டாக்கள் அதன் நேசிப்பிற்குறிய மக்களின் உதிரத்தால் மேலும் சிவந்தன.விவசாய சீர்திருத்தங்கள், குறைந்த பட்சக்கூலி, குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் இவற்றை யெல்லாம் அரைகுறையாகவாவது அரசாங்கம் மேற்கொள்ள எர்ர ஜன்டா புதல்வர்களின் உயிர் ஈகையே காரணம் என்பதை எந்நாளும் மறவோம். மகத்தான தலைவர் பி.சுந்தரய்யாவின் தலைமையில் நடைபெற்ற தெலுங்கானா வீர காவியத்தின் அடையாளமாக இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் வீரத்தாய் தோழர் மல்லு சுவராஜ்யம், விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே, அகில இந்திய மாநாட்டின் எர்ர ஜன்டாவை ஏற்றி வைத்தார்.

உன்னதத் தகப்பன்

அருகிலேயே மிகக்கம்பீரமாக வடிவமைக்கப் பட்டிருந்த வீரத்தியாகிகளின் நினைவுச் சின்னத்திற்கு கண்கள் கசிய, இதயம் வலிக்க வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு. ஆயிரமாயிரம் எமது மேற்குவங்கத் தோழர்கள், மம்தா அரசின் எதேச்சதிகாரத்திற்கு எதிரான போர்க்களத்தில் உயிர் துறந்திருக்கிறார்கள். இப்போது திரிபுராவிலும், எப்போதும் கேரள மண்ணிலும் எமது தோழர்கள் மதவெறியர்களால் படுகொலை செய்யப்படுகிறார்கள். எந்த மக்களுக்காக கம்யூனிஸ்ட்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை அந்த மக்களே ஒரு வேளை அறியாதிருந்திருக்கலாம். 

இரயில் கதை ஒன்று நினைவிற்கு வருகிறது. நள்ளிரவுநேரத்தில் பயணிகள் ரயில் ஒன்று மிக வேகமாக வந்துகொண்டிருக்கிறது. அடுத்த தண்டவாளத்தில் ரயிலை மாற்றி அனுப்ப வேண்டிய ரயில்வே ஊழியர் அதற்கானஇடத்தில் அமர்ந்திருக்கிறார். ரயில் வந்து கொண்டிருக் கிறது. அதன் வெளிச்சத்தில் எதிர்த்திசையை பார்த்தவர் அதிர்ந்து போகிறார். அருகிலிருக்கும் வீட்டில் இருந்தஅவரது எட்டு வயது மகன் தண்டவாளத்தில் அப்பாவைத்தேடி வந்து கொண்டிருக்கிறான். எந்த தண்டவாளத்தில் ரயிலை மாற்றி அனுப்ப வேண்டுமோ, அதில் தான் அவன்வந்து கொண்டிருக்கிறான். இவர் கத்தி, கதறி சைகை செய்தது எதுவும் அவனுக்கு விளங்கவில்லை. இதோ ரயில் நெருங்கிவிட்டது. அவருக்கு முன்பு இரண்டு தேர்வுகள்தான் இருக்கிறது. ஒன்று மகனைக் காப்பாற்ற ரயில் தண்டவாளத்தை மாற்றாமல் விட்டு விடுவது. அவ்வாறுசெய்தால் அடுத்த சில நிமிடங்களில் அதே தண்ட வாளத்தில் எதிர்த்திசையில் வந்து கொண்டிருக்கும் மற்றொரு பயணிகள் ரயிலோடு மோதி நூற்றுக் கணக்கான பயணிகள் உயிர் இழக்க நேரிடலாம்.இரண்டு, ரயில் பயணிகளைப் பாதுகாக்க மகனைப்பலியிடுவது. ஒரு கணம் தயங்கியவர் தலையை தாழ்த்தியபடியே தண்டவாளத்தை மாற்றி ரயிலை பத்திரமாக அனுப்புகிறார். ரயில் வேகமாக கடக்கிறது. இதோ கண்முன்னால் மகன் தூக்கி வீசப்படுகிறான். அப்பா என்ற அவனது அலறல் அவருக்கு மட்டுமல்ல,ரயிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் எவருக்குமே கேட்கவில்லை. அங்கே நிகழ்த்தப்பட்ட தியாகத்தை அறியாமலே அவர்கள் கடந்து போனார்கள்.என்றாலும் இருள் நீங்கி, உறக்கம் கலைந்து விழிக்கத்தானே போகிறார்கள். அப்போது அந்த ஈகை யாளனை - புதல்வனைப் பலியிட்டு, தங்கள் உயிரைக் காத்தவனை பயணிகள் அறிவார்கள், அவர்களது வரலாற்றில் அந்த உன்னதத் தகப்பன் எப்போதும் வாழ்வான்.

மீண்டும் உயிர்த்தெழச் செய்யும் 

இவ்வாறே நாடெங்கிலும் மக்களுக்காக, எர்ர ஜன்டாவின் உருவமாக நின்று உயிர்த்தியாகம் செய்திட்ட எமதருமைத் தோழர்களே, இலட்சியங்களை ஈடேற்றும் போர்க்களத்தில் உங்களுக்கு நேர்ந்தது எங்களில் எவருக்கும் எப்போதும் நிகழலாம் என்றாலும் எர்ர ஜன்டாக்களை எவராலும் ஒழித்திட முடியாது என மனம் உறுதியேற்றுக் கொண்டது.

தியாகிகள் குறித்து பாப்லோ நெருடா சொல்வார் :
“இந்த உடல்களை
அந்தக் கொலைகாரர்கள்
எங்கே புதைத்திருக்கிறார்களென்று
யாருக்கும் தெரியாது
ஆனால் இந்த உடல்கள்
பூமிக்குள்ளிருந்து எழும்
கொட்டிய குருதியை மீட்டெடுத்து
மக்களை மீண்டும் உயிர்த்தெழச் செய்யும்”.

மாநாடு துவங்குகிறது.காலமெல்லாம் இந்திய வெகுஜனங்களை சுரண்டிக் கொளுத்த முதலாளித்துவ சாத்தான் இப்போதுமதவெறி பிசாசின் மீதேரி தினம் தினம் இரத்தம் குடித்துக் கொண்டிருக்கிறது. சிறுபான்மையினர், தலித்துக்கள், பெண்கள் இலக்கு வைத்து தாக்கப்படுகின்றனர். பழமையின் மீது உயிர்கொண்டுள்ள பாஜக அதிகாரத்திற்கு வந்த வினாடியில் இருந்து சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்கிற இந்திய அரசின் கோட்பாட்டின் மீது தாக்குதல் நடைபெறுகிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இந்தியத் துணைக் கண்டம் எதிர்கொண்டுள்ள பிரத்யேகமான மேற்கண்ட பிரச்சனையே கம்யூனிஸ்ட் பேரியக்கம் நடத்தி முடித்துள்ள உள்கட்சி விவாதத்தின் சாராம்சம்.

வர்க்க எதிரிகளின் கூக்குரல்

முழுமையான, தீர்க்கமான முடிவுகளை நோக்கிய விவாதம் என்பது கம்யூனிஸ்ட்களுக்கே உரிய ஜனநாயக நடைமுறை. அரசியல் உறுதிப்பாடு. ஆனால் அந்த விவாதத்தையே கூட விளங்கிக்கொள்ள முடியாமல் அல்லது பொறுத்துக் கொள்ள முடியாமல், கட்சியின் தலைமையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், ஹைதராபாத்தில் பலப்பரீட்சை நடக்கப் போவதாகவும், சி.பி.ஐ.எம் நொறுங்கப் போவதாகவும் வர்க்க எதிரிகள் ஏறக்குறைய கூத்தாடி மகிழ்ந்தார்கள். சோவியத் பின்னடைவின் போது இத்தோடு ஒழிந்தார்கள் என்றார்கள்; மேற்குவங்க தேர்தல்தோல்வியின் போதும் பெருங்கூச்சல் போட்டுப் பார்த்தார்கள். 

சோவியத் பின்னடைவுக்கு பிறகு, ரஷ்யாவில் மீண்டும் சோசலிசம் வருமா என்ற பத்திரிகை யாளர்களின் கேள்விக்கு தோழர் இஎம்எஸ் இவ்வாறு பதில் அளித்தார். “ரஷ்யாவில் மட்டுமல்ல அமெரிக்கா விலும் ஒருநாள் சோசலிசம் வரும்” மேற்குவங்கத்தில் 2016 சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் பெற்ற வாக்குகள் 2 கோடியே 42 லட்சம் எனில் கம்யூனிஸ்ட்கள் பெற்றது 2 கோடியே 13 லட்சம். வெறும் 30 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம் என்பதைஊடகப் புலிகள் கவனமாக மறந்துவிடுகிறார்கள். அதுபோன்றுதான் இப்போதும் அவர்களே வசனம் எழுதி, அவர்களே இயக்கி அவர்களே ரசித்துக் கொண்டார்கள். ஏற்றங்கள், இறக்கங்கள், வளைவுகள், தடுப்புகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு கம்யூனிஸம் என்கிற பெருநதி எல்லோரையும் தழுவியபடி பாய்த்தோடிக்கொண்டே இருக்கிறது. இதற்கு எவரும் விதிவிலக்காக இருக்க முடியாது. இதோ இத்தாலிய பிஷப் இவ்வாறு பேசுகிறார்: “நான் ரொட்டிகளை கொடுக்கும் போது மக்கள் என்னை புனிதர் என்றார்கள், எல்லோருக்கும் ஏன் ரொட்டி கிடைப்பதில்லை என்று கேட்டேன், உடனே என்னை கம்யூனிஸ்ட் என்கிறார்கள்.”

பாய்ந்தோடும் பெருநதி

22வது மாநாட்டின் நிறைவில், இந்தியாவின் கம்யூனிசபெருநதி முன்னிலும் வலுப்பெற்று பாய்ந்தோடத் துவங்கியுள்ளது. தொலைக்காட்சிகளில் போராட்டக் காட்சிகளை பார்க்கிறோம், செய்திதாள்களில் போராட்டப் புகைப்படங்களை பார்க்கிறோம். மக்கள் போராடினார்கள் என்றே செய்திகள் சொல்லப்படுகிறது. ஆனால் போராடுகிற மக்கள் கையில் ஏந்தியுள்ள செங்கொடிகளை அவர்களால் மறைக்க முடியவில்லை. நீங்கள் எந்தப் பெயரை சொல்லக்கூடாது என மிகக் கவனமாக மறைக்கிறீகளோ, அந்த கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் செங்கொடியைத் தான் போராட்டத் தளங்களில் மக்கள் தங்களின் அடையாளமாக, கேடயமாக கையில் ஏந்துகிறார்கள். மேற்கு வங்கத்தின் ஒரு கம்யூனிஸ்ட் சகோதரி இவ்வாறு சொல்கிறார்; “இப்போது மம்தா அரசின்சகிப்பின்மையால் நாங்கள் வீட்டைவிட்டு துரத்தப்பட்டிருக்கிறோம். இது போல முன்னரும் நடந்துள்ளது. இதுமேற்குவங்கத்தில் இடது முன்னணி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால். அப்போது நான் சிறுபிள்ளையாக இருந்தேன். எங்கள் வீட்டில் இருந்தால் என்ன? குண்டர்களால் துரத்தப்பட்டு வீதியில் இருந்தால் என்ன? நாங்கள் அனாதைகள் அல்ல; ஏனெனில் எப்போதும் எங்களோடு ஒரு செங்கொடி இருக்கும். முன்னர் எனது அப்பாவின் கையில் இருந்த எர்ர ஜன்டா, இப்போது என் கையில்”.

இதோ மாநாடு நிறைவு பெற்றுத் திரும்பிவிட்டோம். குடிநீருக்காக எம்மக்கள் காலிக் குடங்களோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடுகிறவர்களின் கைகளில் பார்! சுட்டெரிக்கும் வெயிலோடு போட்டி போட்டுக் கொண்டு பிராகாசிக்கும் எர்ர ஜன்டாக்கள்... 

அரே... அரே... அரே... எர்ரஜன்டா!

கட்டுரையாளர்: மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்

3 comments:

 1. அரே... அரே... அரே... எர்ரஜன்டா!

  எந்த வேதத்தில் இந்த ஸ்லோகம் வருது சார்

  அன்சாரி

  ReplyDelete
  Replies
  1. முதல் வாக்கியத்தை ஒழுங்கா படிக்கவும்.

   ஆமாம் இங்கே வந்து வீரத்தை காண்பிக்க முடியற நீங்க
   சி.வி.சண்முகத்திடம் பதுங்கி பம்முவது ஏன்?

   Delete