Tuesday, May 15, 2018

லிப்டில் தவித்த அந்த நொடிகள் . . .

கடந்த திங்களன்று கொல்கத்தா நோக்கி புறப்பட்டேன்.

கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு மணிக்கு இறங்கினாலும் பெட்டி வர கால தாமதமாகி விட்டது. சென்னையிலிருந்து கொல்கத்தா வர இரண்டு மணி நேரம். விமானத்திலிருந்து கன்வேயர் பெல்டிற்கு வர கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து நிமிடமானது. 

டாக்ஸி ஒன்றை பிடித்து எங்கள் எல்.ஐ.சி விருந்தினர் இல்லத்திற்குச் சென்றால் ஒரு மேம்பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் "Welcome to Kolkatta" என்றது. அங்கங்கே நின்று நின்று ஒரு வழியாக இரண்டு மணி நேரம் கழித்து கெஸ்ட் ஹவுஸ் சென்று விட்டேன்.

கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்ப்பட்ட அழகிய, கம்பீரமான "எஸ்பிளனேட் மேன்ஷன்" என்ற பிரம்மாண்டமான கட்டிடத்தில்தான் எங்கள் விருந்தினர் இல்லம், இரண்டாவது மாடியில் இருந்தது.



லிப்டில் ஏறி இரண்டாவது மாடிக்கான பட்டனையும் அமுக்கி இரண்டாவது மாடிக்கும் வந்து விட்டேன். பழைய கம்பிக் கதவுகளை (Collapsible Gate) க் கொண்டது அந்த லிப்ட். கதவைத் திறந்தால் கதவு திறக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது.

மேலே எரிந்த விளக்கு மின்சாரம் ஓடிக் கொண்டிருப்பதை உறுதி செய்தது. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கதவு திறக்கவே இல்லை. ஆகா, மாட்டிக் கொண்டு விட்டோம் என்று நினைக்கையில் கதவு திறக்கும் சப்தம். ஒருவர் உள்ளே நுழைந்தார்.

நான் திறக்க முயன்ற கதவல்ல. அதற்கு எதிர்ப்புறக் கதவு. 

"சர்க்கஸ் துப்பாக்கி பின்னாடியும் சுடும், முன்னாடியும் சுடும்" என்ற அபூர்வ சகோதரர்கள் வசனம் போல இரு புறமும் கதவுகள் கொண்ட லிப்ட். ஒவ்வொரு தளத்திலும் திறப்பு ஒரு பக்கத்தில் இருக்கிறது.




அதை சரியாக கவனிக்காமல் நான்தான் பல்பு வாங்கி விட்டேன்.

ஆனாலும் அந்த சில நொடிகள் பதட்டமாகத்தான் இருந்தது என்ற உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் 

அதன் பின் எல்லாம் சுகமே 

 -  பயணம் தொடரும் . . .

1 comment: