Wednesday, May 30, 2018

யதார்த்தம் புரிகிறதா டாக்டர் கி.சாமி ?


தீக்கதிர் நாளிதழில் இன்று வந்த செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளேன். மருத்துவர் கிருஷ்ணசாமி இச்செய்தியை அறிந்திருப்பார் என்று நம்புகிறேன்.

பாஜகவின் சதிக்கு இரையாகி நாங்கள் பட்டியலினத்தவர் இல்லை என்று நீங்கள் சொல்லிக் கொண்டாலும் தீண்டாமைக் கொடுமை இன்னும் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். 

தீண்டாமைக்கொடுமைக்கு எதிரான போராட்ட களத்திலிருந்து விலகி ஓடாதீர்கள்.
பட்டியலினத்தவர் மீது சாதி ஆதிக்கச்சக்தியினர் கொடூரத் தாக்குதல்
சிவகங்கை அருகே 2 பேர் படுகொலை

சென்னை, மே 29-

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் சாதி ஆதிக்கச்சக்தியினரின் சாதி வெறித்தாக்குதலில் பட்டியலினத்தவர் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர். பி.சம்பத், பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் 50 தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்களும் சாதிஆதிக்கச் சமூகத்தின் 5 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இதில் சாதி ஆதிக்கச் சமூகத்தின் சுமன் என்பவரின் குடும்பம் மட்டும் கஞ்சாவியாபாரம் செய்து வருகிறது. இதனை எதிர்த்து அங்கு வாழும் பட்டியலின மக்கள் காவல்துறைக்கு புகார் கொடுப்பதும் , காவல்துறை இதில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் நிலையும் இருந்துள்ளது. 

இதன் காரணமாக கடந்த நான்கு வருடத்துக்கு மேலாக சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டுள்ளன.இந்நிலையில் திங்களன்று கச்சநத்தம் கிராமத்தில் திருவிழா முடிந்த நிலையில் சாதி ஆதிக்கச் சக்தியினர் வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பட்டியலினமக்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அறிவழகன் மகன் சண்முகநாதன் (39), கோனான் மகன் ஆறுமுகம் (65) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் சுகுமாறன், தனசேகர், மலைச்சாமி உள்ளிட்ட ஆறு பேர் படுகாயம்அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களும் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இக்கொடூர, கொலைவெறித் தாக்குதலை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து சாதிய ரீதியான வன் கொடுமை தாக்குதல்கள் அதிகரித்து வருவதையும், பட்டியலின மக்களை படுகொலை செய்வதையும் தமிழகஅரசு தடுத்து நிறுத்த வேண்டும். கச்சநத்தம் கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுக்கு காரணமானவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டும் . பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியும்,நிவாரணமும், அரசு வேலையும் வழங்கிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

படுகொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களை வாங்க மறுத்துஅவர்களது உறவினர்கள் 300-க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்டஆட்சியர் அலுவலகம் அருகே அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கைமாவட்டச் செயலாளர் மு.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கபூபதி, வீரையா, வீரபாண்டி,திருப்புவனம் ஒன்றிய செயலாளர் அய்யம் பாண்டி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலாளர்செல்லக்கண்ணு, சிவகங்கை மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, மதுரை மாவட்டத்துணைத் தலைவர் மீனாட்சிசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

5 பேர் நீதிமன்றத்தில் சரண்


இச்சம்பவத்தில் தொடர்புடைய5 பேர் மதுரை நீதிமன்றத்தில் செவ்வாயன்று சரணடைந்தனர்.இக்கொலை சம்பவத்தில் சுமன், அருண்குமார், ராஜேஷ், அஜய் தேவன், அக்னி ஆகிய 5 பேர் மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர்(ஜேஎம் கோர்ட் 4) கௌதமன் முன்பாக சரணடைந்தனர்.

1 comment:

  1. நம்ம கிச்சா (கிருஷ்ண்சுவாமி) பிராமணரா மாறுவதில் உனக்கென்ன காண்டு. கயில காசு இருக்கு, தோப்பு, தொறவு, சொத்து, சுகம் இருக்கு. இன்னமும் தாழ்த்தப்பட்டவன், பட்டியல்இனத்தவன், தலித், ஒடுக்கப்பட்டவன், ஹரிஜன், ஆதிதிராவிடன் என எங்களை அழைப்பதில் என்னவொரு வக்கிரம். எங்களில் ஏழையாய் இருப்பவன் பள்ளன் என்று SC சான்றிதழ் வாங்கட்டும். நடுத்தரமா இருப்பவன் தேவேந்திரகுல வேளாளன் என்று OBC சான்றிதழ் வாங்கட்டும், பணமுள்ளவன் பிரஹ்கஸ்பதிகுல ஆச்சரியான் என்று FC சான்றிதழ் வாங்கட்டும். தாசில்தார் ஜாதி சான்றிதழுல ஒரேஒரு கையெழுத்து போட்டா போதுமே.

    ReplyDelete