Sunday, May 5, 2013

அருவியில் குளித்தால் பைத்தியமாம்!!!!!!

இரண்டு தினங்கள் முன்பு ஈக்வடார் நாட்டில் இருந்த ஒரு
அருவியின் புகைப்படங்களை பதிவிட்டிருந்தேன். நீங்கள்
அங்கே போயிருந்தீர்களா என சிலர் கேட்டிருந்தார்கள்.
மின்ஞ்சலில் வந்ததை பதிவிட்டிருந்தேன். அப்போதுதான்
நாம் சென்று வந்த ஒரு அருவியின் படங்களை போடுவோமே
என்று தோன்றியது.

கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு எல்.டி.சி யில்
சிம்லா வரை சென்று வந்தோம். அப்போது உத்தர்கண்ட்
மாநிலம் முசௌரியில் உள்ள கெம்ப்டி அருவிக்கும் போய்
வந்தோம். 

டேராடூனிலிருந்து முசௌரி செல்வதே அவ்வளவு இனிமையாய்
இருக்கும். மலைப்பாதையில் இயற்கையின் அழகை நல்ல
குளிரோடு பார்ப்பதே ஒரு சொர்க்கம்.  முசௌரியில் பார்க்க
வேண்டிய ஒரு முக்கிய இடம் கெம்ப்டி அருவி.

மிகுந்த சிரமத்தோடு முட்டி வலிக்க, வலிக்க மலை ஏறி
வந்தால் அங்கே அருவியின் வேகம் உங்களை சிலிர்க்க
வைக்கும். அழகு உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.

அருவியைப் பார்க்கப் போனால் எல்லா சுற்றுலாப் பயணிகளும்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கூட
அருவியில் குளிக்கவில்லை. ஏதாவது தடை கிடை உண்டா
என்று விசாரித்தால் எதுவும் இல்லை, தண்ணீர் மிகவும்
சில்லென்று இருக்கும் என்பதால் யாரும் ரிஸ்க் எடுப்பதில்லை
என்றார்கள்.

நானும் என் சகலையும் களம் இறங்கினோம். நல்ல வேகத்தோடு
மிகவும் சில்லென்று  தண்ணீர் தலையில் வந்து இறங்கியது.
கூட்டத்திற்கு நடுவே நெரிசலில் கிடைக்கும் குற்றால குளியலே
சுகம் என்கிற போது தன்னந்தனியாக அத்தனை தண்ணீரும்
நமக்கு மட்டுமே என்றால் அதை விட இனிமை எதுவும் உண்டோ?

கொஞ்சம் நேரம் கழித்து அப்போது ஐந்து வயதாகியிருந்த
எனது மகனும் அருவிக்குளியலில் இணைந்து கொண்டான்.

மூன்று பேர் மட்டும் குளிப்பதை வட இந்தியர்கள் அதிசயமாய்
பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

பைத்தியக்காரர்கள் என்று கூட சிலர் சொன்னதாய் என் அண்ணன்
சொன்னார்.

பாவம்  சொர்க்கம்  கண் முன்னே இருந்தும் அதை அனுபவிக்காமல்
இருந்தவர்கள் சொல்லி விட்டு போகட்டும்.

இப்போதாவது அந்த அருவியில் வட இந்தியர்கள் குளிக்கிறார்களோ,
இல்லையோ?









 

2 comments:

  1. இந்த படங்கள் கொள்ளை அழகு.

    ReplyDelete
  2. காண வேண்டிய இடம்.

    ReplyDelete