Wednesday, October 1, 2025

விஜய் - சின்னக்கவுண்டர் தீர்ப்பே சரி

 


மூன்று நாட்களுக்குப் பிறகு விஜய் வாய் திறந்தார்.

பல வருடங்களாக பேசாத குழந்தை திடீரென பேச்சு வந்து, அம்மாவைப் பார்த்து "நீ எப்போது அத்தையைப் போல் தாலி அறுப்பாய்" என்று கேட்டால் எப்படி இருக்குமோ  அது போலத்தான் அந்தாளின் பேச்சு அமைந்திருந்தது.

தன்னால் 41 பேர் இறந்து போயிருக்கிறார்கள் என்ற குற்ற உணர்வு கொஞ்சமும்  இல்லை. தன்னுடைய ரசிகர்களை தற்குறிகளாக வளர்த்துள்ளோம் என்று சிந்திக்கவே இல்லை. காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் இல்லை, சிகிச்சை அளித்தவர்களுக்கு நன்றி சொல்லவும் இல்லை. 

பின் என்ன எழவிற்கு இந்த காணொளி?

ஏற்கனவே விஜயின் களவாணிக் கூட்டாளிகள் ( வெளிப்படையாக கூட்டு வைத்தால் கூட்டுக் களவாணிகள், ரகசியமாய் கூட்டு வைத்தால் களவாணிக் கூட்டாளிகள் ) கட்டமைக்க முய்ற்சிக் கொண்டிருக்கும் சதிக் கோட்பாட்டையே காரணமாக்கி தன்னை புனிதராக்கிக் கொள்வது.

பழி வாங்க வேண்டுமென்றால் என்னிடம் வா என்று வஜனம் பேசி அனுதாபம் தேடுவது.

மோசமானவர் என்ற நிலையிலிருந்து கேவலமானவர் என்ற நிலைக்கு போய் விட்டார். இன்னும் கீழிறங்கினாலும் அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

இவர் மீது அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால்  அதையும் தன் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்.

பிறகு என்ன செய்வது?

சின்னக்கவுண்டர் படத்து கிளைமாக்ஸில் வில்லன் சர்க்கரை கவுண்டருக்கு எந்த தண்டனையும் தரப்படாமல் அவரை "நீயெல்லாம் ஒரு மனிதனா?" என்பது போல மக்கள் அருவெறுப்பாக பார்த்து புறக்கணித்துச் செல்வார்கள். அவரோ புலம்பிக் கொண்டே எல்லோர் காலையும் பிடித்து தண்டனை கொடுக்கச் சொல்வார்.

அது போல விஜய்யையும் புறக்கணிக்க வேண்டும்.

என்னைப் பார்த்து பயந்து விட்டார்கள் என்று வஜனம் பேசலாம். ஆனால்  உண்மை அவரை ஒதுக்கி வைத்து விடும்.