உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியளித்தது. கரூர் வழக்கைச் சொல்லவில்லை. இது வேறு வழக்கு.
ஹாசினி என்ற ஒரு சிறுமியை பாலியன் வன் கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்பவனுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.
அந்த சம்பவம் நிகழ்ந்த காலகட்டம் நினைவில் உள்ளது. தமிழ்நாட்டு மக்களை அதிரச் செய்த சம்பவம் அது. சி.சி டி வி காட்சிகள் மூலமாக அதே அடுக்கு மாளிகைக்குடியிருப்பில் இருந்த தஷ்வந்த்தான் குற்றவாளி என தெரிந்து கைது செய்யப்பட்டு விட்டான்.
பிணையில் வெளிவந்தவன் தன்னுடைய அம்மாவை கொன்று விட்டு தலைமறைவாகி விட்டான். பின் அவனை மும்பையில் கைது செய்தார்கள்.
மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து தூக்கு தண்டனை கொடுத்தது. உயர் நீதிமன்றம் அதனை உறுதிப்படுத்தியது.
இப்போது அந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.
போதுமான ஆதாரங்களை அரசு தரப்பு அளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது.
தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த உச்ச நீதிமன்றத்துக்கு ஆதாரங்கள் போதாது என்றால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்தது? உயர் நீதிமன்றம் உறுதி செய்தது?
மாவட்ட நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் உச்ச நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டதா?
அப்படி அளிக்கப்படவில்லையென்றால் அது யார் குற்றம்?
ஒரு வேளை அந்த ஆதாரங்கள் சரியில்லை என்றால் அதை நம்பி தூக்கு தண்டனை கொடுத்த மாவட்ட நீதிமன்றமும் உறுதி செய்த உயர் நீதிமன்றமும் தவறிழைத்ததா? அது யார் குற்றம்?
அம்மாவை கொன்ற வழக்கில் அப்பா பிறழ் சாட்சியானதால் அந்த வழக்கிலிருந்து அவர் தப்பித்து விட்டார். அது போல பிறழ் சாட்சிகள் யாராவது இந்த வழக்கிலும் உண்டா?
தஷ்வந்த் குற்றவாளி இல்லையென்றால் ஹாசினிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு யார் காரணம்? அந்த கொடூரத்தை நிகழ்த்திய குற்றவாளி யார்?
பிகு: எழுதி நாலு நாள் ஆன பதிவுதான். இன்னும் கொஞ்சம் பழைய பதிவுகள் கூட இருக்கிறது. அவையும் வரும். . .
No comments:
Post a Comment