விஜயின் கரூர் கூட்டத்தில் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்த நாள் முதல் எழுத நினைத்த என் சொந்த அனுபவம் இது.
1984 ல் இந்திரா காந்தி கொல்லப்பட்டு ராஜீவ் காந்தி பிரதமராகிறார். தன் தாயின் மரணத்தால் உருவான அனுதாபத்தை அறுவடை செய்ய மக்களவையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்கிறார்.
அத்தேர்தலுக்காக நாடெங்கிலும் பிரச்சாரம் செய்கிறார். அப்போது நாங்கள் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் இருந்தோம். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கான பிரச்சாரத்திற்காக நெய்வேலி வருகிறார். முதல் நாள் மாலையில்தான் ஆட்டோவில் அறிவிப்பு செய்கிறார்கள்.
மதுரையில் படித்துக் கொண்டிருந்தாலும் ஐந்தாவது செமஸ்டர் தேர்வுகள் முடிந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தேன்.
ராஜீவ் காந்தி கூட்டத்திற்கு புறப்பட்டேன். ராஜீவ் காந்தி மீது பெரிய நாட்டம் எல்லாம் ஒன்றும் கிடையாது. அந்த காலகட்டத்தில் பிடித்த தலைவர் ராமகிருஷ்ண ஹெக்டேதான். இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங் ( நான் பார்த்த போது அவர் பிரதமர் இல்லை) ஆகிய மூன்று பிரதமர்களை பார்த்துள்ளேன். அந்த பட்டியலில் ஒன்று கூடுவதை வைத்து கல்லூரியில் பீற்றிக் கொள்வதுதான் நோக்கம்.
மந்தாரகுப்பம் சுரேஷ்குமார் பேலஸ் தியேட்டர் (பெயர் சரியாக நினைவில் இல்லை, சந்தோஷ்குமார் பேலஸாகக் கூட இருந்திருக்கலாம்) பக்கத்தில் கூட்டம் என்று சொன்னார்கள். சைக்கிளில் போனால் அங்கே கூட்டம் நடப்பதற்கான எந்த சுவடும் இல்லை. இன்னும் கொஞ்ச தூரம் போனால் கூட்டம் நடக்கும் இடம் வரும் என்றார்கள்.
காலை பத்தரை மணி இருக்கும். மிகக் கடுமையான வெய்யில். சைக்கிளை மிதிக்கிறேன், மிதிக்கிறேன், மிதித்துக் கொண்டே இருக்கிறேன். வானில் ஹெலிகாப்டர் செல்லும் சப்தம். சைக்கிளை மிதிக்கும் வேகம் அதிகரிக்கிறது.
கிட்டத்தட்ட ஏழெட்டு கிலோ மீட்டர் சென்ற பின்பு கூட்டம் நடக்கும் இடம் வந்தது. அந்த ஹெலிகாப்டரில் வந்தது ராஜீவ் காந்தி இல்லை. அந்த பொட்டல் மைதானம் சென்றதும் சைக்கிளை நிறுத்தி விட்டு அப்படியே கட்டாந்தரையில் சுருண்டேன். படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. தொண்டை தாகத்தில் வரண்டது. ஆனாலும் எழுந்திருக்க முடியவில்லை. ஒரு பத்து நிமிடங்கள் சோர்வில் படுத்துக் கொண்டே இருந்தேன்.
அதன் பிறகு எழுந்து பார்த்தால் பக்கத்தில் ஒரு தண்ணீர் தொட்டி இருந்தது. கைகளில் தண்ணீரை பிடித்து குடித்தேன். கொஞ்சம் தெம்பு வந்தது. நீண்ட நேரம் காக்க வைக்காமல் ராஜீவ் காந்தியும் வந்து விட்டார். அவருடைய பேச்சு அவ்வளவு சுகமில்லை. தமிழாக்கம் செய்த ப.சிதம்பரம் தன் சொந்த சரக்கையும் சேர்த்து சமாளித்தார் என்பது வேறு கதை.
மீண்டும் அதே வெய்யிலில் சைக்கிளை மிதித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். அப்படியே ஒரு பெஞ்சில் படுத்தேன். மதியம் சாப்பிடக் கூட எழுந்திருக்கவில்லை. மாலையில் உடல் கேஸ் அடுப்பு போல கொதித்தது. மந்தாரக்குப்பத்தில் உள்ள மருத்துவரிடம் இரண்டு மூன்று நாள் சென்றும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அவர் என்.எல்.சி பொது மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லி விட்டார்.
அங்கே டைபாய்டு என்று கண்டறிந்து உள் நோயாளியாக சேர்ந்து ஒரு வாரம் இருந்தேன். கடைசி செமஸ்டரில் இப்படியாகி விட்டதே என்று என் அப்பா திட்டினாரே தவிர, எதற்காக ராஜீவ் காந்தி கூட்டத்திற்கு போனாய் என்று அவர் திட்டவேயில்லை. இந்திரா காந்தி, எம்,ஜி.ஆர், கலைஞர், மொரார்ஜி தேசாய், சோ ஆகியோருடைய கூட்டங்களுக்கு 1977 ல் அழைத்துச் சென்றவரே அவர்தானே. அரசியலை பின்பற்றத் தொடங்கியது அந்த காலகட்டத்திலிருந்தேதான்.
அதனால்தான் , அந்த நாற்பத்தி எட்டு வருட அனுபவத்திலிருந்து சொல்ல முடிகிறது. த.வெ,க போன்ற பொறுப்பற்ற கட்சி எதுவுமில்லை.
👍
ReplyDelete