Friday, October 10, 2025

தலையில்லா விஷ்ணு சிலையும் ராஜராஜசோழன் சிலையும்

 


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு கவாய் மீது சனாதன வக்கீல் ராகேஷ் கிஷோர் காலணி வீசியதற்கு காரணம் கஜுராஹோ விஷ்ணு சிலை வழக்கில் அவர் அளித்த தீர்ப்புதான்.

மத்தியப் பிரதேசத்தின் முக்கிய தொல்லியல் தளமான, பல நூற்றாண்டுகள் பழமையான கஜுராஹோவில்  உள்ள ஒரு விஷ்ணுவின் சிலையில் தலை இல்லை. அந்த தலை யாரால் எப்போது துண்டிக்கப்பட்டது என்ற விபரங்கள் எல்லாம் இல்லை. பல நூறு ஆண்டுகளாக தலையில்லாமலே விஷ்ணு அருள் பாலித்து வருகின்றார்.

இந்த சிலையை மாற்றியமைக்க வேண்டும் என்று ஒருவர் வழக்கு தொடுக்கிறார். தொல்லியல் விதிகள் படி அது சாத்தியமில்லை என்று தலைமை நீதிபதி திரு பி.ஆர்.கவாய் வழக்கை தள்ளுபடி செய்கிறார். "என்னுடைய கைகளில் ஏதுமில்லை. நீங்கள்தான் உண்மையான பக்தர் அல்லவா! அதனால் விஷ்ணுவிடமே வேண்டிக் கொள்ளுங்களேன்" என்று குறிப்பிடுகிறார். 

இந்த தீர்ப்பின் மூலம்  திரு கவாய், சனாதன தர்மத்தை இழிவு படுத்தி விட்டார் என்று சங்கிகள் கூச்சலிட்டனர். ஒரு வெறியன் அந்த வெறுப்பை தன் காலணி மூலம் காண்பித்து விட்டான். இந்த செயலுக்கு நீதிபதியின் சமூகப் பின்னணியும் ஒரு காரணம் என்பதை முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.

இந்த பதிவின் நோக்கமே வேறு.

தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட வரலாற்றுத் தளங்களில் எந்த ஒரு சிறு மாறுதலைக் கூட அனுமதிப்பதில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டு உதாரணங்கள் இருக்கிறது என்பதை பதிவு செய்யவே இந்த பதிவு.

எழுபதுகளில் கலைஞர் முதல்வராக இருக்கையில் தஞ்சையில் ராஜராஜ சோழனுக்கு சிலை உருவாக்கி அதனை பெரிய கோவிலுக்குள் அமைக்க விரும்பினார். ஆனால் தொல்லியல் துறையோ பெரிய கோயிலுக்குள் புதிய கட்டுமானம் எதையும் அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டது. கோயிலைக் கட்டிய ராஜராஜனாவது மண்ணாவது என்று பிடிவாதமாக இருந்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை தலையிடச் சொன்னார். ஆனால் ஒன்றும் கதைக்காகவில்லை. 

கோயிலைக் கட்டும் தொழிலாளர்கள், கோயில் கட்டுமானப் பணி முடிந்து கும்பாபிஷேகமும் முடிந்த பின் எப்படி கருவரைக்கு வெளியே தள்ளப் படுவானோ (முந்தைய காலங்களில் கோயில் மதில்களுக்கு வெளியே) அது போன்றதொரு நிலைதான் ராஜராஜசோழன் சிலைக்கும் ஏற்பட்டது.

தொல்லியல்துறை விதிகள் காரணமாக பெரிய கோயில் மதில்களுக்கு வெளியே சிவகங்கைப் பூங்காவுக்கு முன்பே நின்று கொண்டிருக்கிறார் ராஜராஜசோழன்.

வேலூர் கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மூலவரான ஜலகண்டேஸ்வரர் லிங்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கோட்டைக்கு வெளியே சத்துவாச்சாரி பகுதியில் ஒரு சிறிய பிள்ளையார் கோயிலில் வைக்கப்பட்டிருந்தது. அதனால் அங்கே வழிபாடு நடக்கவில்லை. "சாமி இல்லாத கோயில்" என்ற புகழ் வேலூருக்கு அதனால்தான் வந்தது.

அதே போல் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக சிறிய மசூதி ஒன்றும் இருந்தது. அங்கேயும் வழிபாட்டை பிரிட்டிஷ் ஆட்சி தடை செய்திருந்தது. 

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே வழிபாடு நடத்த அனுமதி வேண்டும் என்று இந்துக்கள், இஸ்லாமியர்கள் இரு தரப்பும் கேட்டும் கூட பிரிட்டிஷ் தொல்லியல் துறை அனுமதிக்கவில்லை. விடுதலைக்குப் பின்பு இந்திய தொல்லியல்துறையும் அதே நிலையை எடுத்தது. 

1981 ல் அன்றைய வேலூர் மாவட்ட ஆட்சியாளர் கங்கப்பா ஒத்துழைப்போடு சிலர் ஜலகண்டேஸ்வரர் லிங்கத்தை ரகசியமாக நிர்மாணித்தார்கள். அப்போது முதல் அங்கே வழிபாடு தொடங்கியது. பாபர் மசூதியை இடிப்பதற்கான பயிற்சியாக இந்த ரகசிய நடவடிக்கை அமைந்திருந்தது என்று கூட ஒரு கூட்டத்தில் கேட்ட நினைவு இருக்கிறது.

கோயில் போல மசூதியிலும் வழிபாடு அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. 

2007 ஆ 2008 ஆ என்று நினைவில் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பிரம்மாண்டமான தர்ணா போராட்டத்தை வேலூரில் நடத்தியது. மதுரை மக்களவை உறுப்பினராக இருந்த தோழர் பி.மோகன் அதிலே கலந்து கொண்டார். அவர் மக்களவையிலும் இந்த பிரச்சினையை எழுப்பினார். மதுரை எம்.பி க்கு வேலூரில் என்ன வேலை என்று அடுத்த வாரமே வேலூர் சத்துவாச்சாரியில் கூட்டம் போட்டு பேச சென்னையிலிருந்து ராம.கோபாலனை அழைத்திருந்தார்கள்.

மக்களவையில் பிரச்சினை எழுப்பப்பட்டாலும் தீர்வு வரவில்லை. தொல்லியல்துறை தன் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்து விட்டது. 

தலையில்லா விஷ்ணு சிலை விஷயத்திலும் தொல்லியல் துறை மாறாது என்பது அதன் விதிகளில் உள்ளது.  அதனால்தான் தீர்ப்பு அந்த அடிப்படையில் அமைந்தது.

மாற்றத்திற்கு வாய்ப்பில்லாத நெகிழ்வுத்தன்மை இல்லாதது தொல்லியல்துறை விதிகள். சனாதனமும் அதுதான்.

ஆகவே தீர்ப்புக்கு எதிராக இவர்கள் பொங்க வேண்டியது சனாதனத்திற்கு எதிராகத்தான். . . 




1 comment:

  1. மிகவும் அருமையான பதிவு தோழர். நல்ல தகவல்கள்

    ReplyDelete