அமைதிக்கான நோபல் விருது இந்த ஆண்டு தனக்கே தரப்படும் என்று டொனால்ட் ட்ரம்பு வாயில் உமிழ்நீர் வழிய காத்துக் கொண்டிருந்தார். ட்ரம்ப் அளவு இல்லையென்றால் கூட மோடி கூட ஒரு சபலத்தில் காத்திருந்தார். ஆனால் இவர்கள் இருவருக்கும் விருது கானல் நீராக மாறியது.
போலந்து கம்யூனிச ஆட்சிக்கு எதிராக கலவரம் செய்த "லெக் வாலேசா"
சோவியத் யூனியனை சிதைத்த "மிகையில் கோர்ப்பசேவ்"
மக்கள் சீனத்துக்கு எதிராக திபெத்தியர்களை உசுப்பேற்றிய "தலாய் லாமா"
ஆகியோரின் வரிசையில்
ட்ரம்பின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த வெனிசுலா நாட்டு மரியா கொரினா மச்சோடாவுக்கு கிடைத்துள்ளது.
கொரினா என்பது என்னவோ கொரோனா போலவே தோன்றுவது எனக்கு மட்டும்தானா என்பது வேறு விஷயம்.
மரியாவுக்கு ஏன் கொடுக்கப்பட்டுள்ளது?
வெனிசுலாவில் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடி வருவதற்காக அவர் அமைதிக்கான நோபல் பரிசை பெறுகிறாராம்.
அப்படியென்ன வெனிசுலாவில் ஜனநாயகம் பாழாகி விட்டது? இவர் போராடி அந்த ஜனநாயகத்தை பாதுகாக்க?
முதலாளித்துவ கட்டமைப்பு கொண்ட வெனிசுலாவில் சோஷலிஸ்ட் கட்சி 1998 ல் தோழர் ஹூயுகோ சாவேஸ் தலைமையில் ஆட்சி அமைக்கிறது. அதன் பின்பு வெனிசுலாவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் தேச உடமையாக்கப்படுகிறது. அதனால் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் வருகிறது.
இது பொறுக்குமா முதலாளித்துவத்திற்கு?
ஒரு கியூபாவையே சகித்துக் கொள்ள முடியாத அமெரிக்கா எப்படி இன்னொரு சோஷலிச நாட்டை ஏற்றுக் கொள்ளும்?
ஒரு கலகத்தைத் தூண்டி அதிபர் மாளிகையை கைப்பற்றியது. தோழர் சாவெஸை கைது செய்து ஒரு முதலாளியை ஜனாதிபதி என்றும் அறிவித்தார்கள்.
எல்லாம் இரண்டே நாட்கள்தான் . . .
மக்கள் வீதியில் இறங்கினார்கள். போராடினார்கள், கலகம் செய்தவர்கள் ஓடிப் போனார்கள். தோழர் சாவேஸ் மீண்டும் கம்பீரமாக ஆட்சிக்கு வந்தார். இறக்கும் வரையில் அவர்தான் ஜனாதிபதியாக இருந்தார். அவருக்கு அமெரிக்கா கொடுத்த நச்சுதான் அவரது நோய்க்குக் காரணம் என்ற சந்தேகம் இன்னும் மக்களிடம் உள்ளது.
தோழர் சாவேஸை தொடர்ந்து தோழர் நிக்கோலஸ் மதுரா ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சியை கவிழ்க்கவும் வெனிசுலா முதலாளிகள் அமெரிக்க ஆதரவோடு தொடர்ச்சியாக பல சதிகளை அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த சதிக்கூட்டத்தின் தலைவிதான் மரியா கொரோனா மச்சோடா.
மக்கள் நல சோஷலிச அரசுக்கு எதிராக சதிச்செயல்களில் ஈடுபடுவதற்கு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள ஊக்கப்பரிசுதான் அமைதிக்கான நோபல் பரிசு, அதனை அழிவுக்கான நோபல் பரிசு என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete