என்ன வழக்கமான
அரசியல் பதிவுகளுக்குப் பதிலாக சமையல் குறிப்பா என்று ஆச்சர்யப்பட வேண்டாம். அல்லது
அரசியல் விஷயங்களுக்கு இப்படி ஒரு தலைப்பு, கடைசியில் ஏதாவது ஒரு ட்விஸ்ட் இருக்கும்
என்றும் எதிர்பார்க்க வேண்டாம். இது முழுமையான சமையல் குறிப்பு.
நானே தயாரித்த
ஒரு இனிப்பை எப்படி தயாரிப்பது என்பது பற்றிய குறிப்பு.
விஜயதசமி
விடுமுறை நாளில் செய்தது. சமையல் அறையை நாசம் செய்தால் நடப்பதே வேறு என்ற மனைவியின்
மிரட்டலுக்கு அப்படியெல்லாம் நடக்காது என்று உறுதியளித்து களம் புகுந்தேன்.
இதோ உங்களுக்கு
படங்களோடு செய்முறை குறிப்பு
தேவையான
பொருட்கள்
கெட்டி அவல் -
அரை கிலோ
தேங்காய்
துருவியது அரை மூடி
வெல்லம் அரை கிலோ
நெய் 100 கிராம்
முந்திரி 100 கிராம்
ஏலக்காய்
பொடி இரண்டு சிட்டிகை
கேசரி கலர்
பொடி ஒரு சிட்டிகை
முதலில்
வாணலியில் அவலை நன்றாக பொன் நிறம் வரும் வரை
வறுத்துக்
கொள்ளவும்.
பின்பு மிக்ஸியில்
பொடித்துக் கொள்ளவும், சற்று கரகரப்பாக இருக்க வேண்டும். மிகவும் நைஸாக இருக்கக் கூடாது.
பிறகு ஒரு
பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்
தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு பொடித்து வைத்துள்ள
அவலில் ஒரு சிட்டிகை கேசரி கலர் பொடியை சேர்த்து கொதிக்க வைத்துள்ள தண்ணீரை கொஞ்சம்
கொஞ்சமாக ஊற்றி பிசறவும். இது மிக முக்கியமான ஒன்று. கை சுடும். ஆனாலும் வேறு வழியில்லை.
கொஞ்சம் தாமதித்தாலும் கட்டி தட்டி விடும். அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் செய்யவும்.
பூ போல அவல் பொடி வந்ததும் ஒரு அரை மணி நேரம் அது அப்படியே இருக்கட்டும்.
பிறகு நெய்யில்
முந்திரி பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு வாணலியில்
சிறிதளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை பாகு வைக்கவும்.
பாகு பொங்கி
வருகையில் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து
சிறிது நேரம் நன்றாக கிளறவும்.
அதன் பின்பு
பாகில் அவல் பொடியை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் வரை நன்றாக கிளறவும்.
கொஞ்சம்
கொஞ்சமாக நெய் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு வறுத்த
முந்திரியையும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறினால் சுவையான அவல் புட்டு தயார்.
என்ன நீங்களும்
முயற்சி செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் எழுதுங்கள்.
பின் குறிப்பு
: சமையலறைக்கு எந்த சேதமும் இல்லாமல் பணி முடிந்தது.
எப்போதோ
ஒரு நாள் ஏதாவது செய்து விட்டு இப்படி பந்தா செய்கின்றீர்களே, தினம் தினம் உங்களுக்கெல்லாம்
விதம் விதமாக சமைத்துக் கொடுக்கிற நான் எத்தனை பதிவு எழுதுவது, எப்படி பந்தா செய்வது
என்ற என் மனைவியின் கேள்விக்கு ஹி ஹி என்ற அசட்டுச் சிரிப்பைத் தவிர வேறு என்ன பதில்
சொல்ல முடியும்?
ராமன் அவர்களே! அந்த அம்மையார் ருசித்து தின்பதை ஒரு போட்டோ போடக்கூடாதா? அவர்களுடைய comment என்ன? அதச்சொல்லும் முதலில்---காஸ்யபன்
ReplyDelete" எப்போதும் போல சூப்பராகவே இருந்தது " - தோழர் காஷ்யப அவர்களே, இதுதான் என் மனைவியின் கமெண்ட்
ReplyDelete