Tuesday, October 28, 2025

தெரு நாய்கள் -உச்ச நீதிமன்றம் - மாநில அரசுகள்

 


"தெரு நாய்கள் பிரச்சினை தொடர்பாக நாங்கள் அளித்த வழிகாட்டுதல்களை அமலாக்கியது தொடர்பாக ஒவ்வொரு மாநில அரசும் பிரமாண வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட்டும் எட்டு வார அவகாசம் அளித்தும் மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தவிர வேறெந்த மாநிலங்களும் தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிரமாண வாக்குமூலம் அளிக்கவில்லை. டெல்லி மாநகராட்சி கொடுத்த பிரமாண வாக்குமூலம் என்பது போதுமானதல்ல. நாங்கள் மாநில அரசைத்தான் கேட்டோம்.

எனவே வரும் 03.11.2025 அன்று மேற்கு வங்கம், ஆந்திரா தவிர மற்ற அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் காலை பத்து மணிக்கு எங்கள் முன்பாக ஆஜராக வேண்டும்."

இது நேற்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் அமர்வு பிறப்பித்த உத்தரவாகும்.

ஆக இந்த உத்தரவு தெளிவுபடுத்துவது ஒரு விஷயத்தைத்தான். 

தெரு நாய்கள் கடித்து எத்தனை பேர் இறந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டாலும் அதனை எச்.ராசாவின் உயர் நீதிமன்றமாக கருதி அலட்சியப்படுத்துவோம் என்று மாநில அரசுகள் இருக்கின்றன. 

முதன் முதலில் தெருநாய்ப் பிரச்சினை வந்த போதே எழுத நினைத்தேன். ஆனால் அப்போது ஏனோ இயலவில்லை. 

இன்று நிகழ்ந்த ஒரு சம்பவம் எழுத வைக்கிறது. அது பற்றி தனியாக எழுதுகிறேன்.

தெருநாய் பிரச்சினை என்பது பல்வேறு வருடங்களாக பல்கி பெருகியுள்ளது. ஏதாவது பெரு நகரத்தில் இறப்பு நேர்கிற போது பெரிய சர்ச்சையாக வருகிறதே தவிர மற்ற சமயங்களில் பேசு பொருளாக இருப்பதில்லை.

வேலூரில் ஒவ்வொரு தெருவிலும் குறைந்த பட்சம் பத்து நாய்களுக்கு மேல் இருக்கும். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதசாரிகளும் உயிரை கையில் பிடித்த படி அச்சத்துடனே பயணிக்க வேண்டியுள்ளது. அவர்கள் துரத்துவதால் ஏற்படும் விபத்துக்களுக்கு அளவே இல்லை. சில மாதங்களுக்கு முன்பு கூட எங்கள் நிறுவன அதிகாரி ஒருவர் வண்டியில் இருந்து கீழே விழுந்து எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சில வாரங்களுக்கு முன்பாக எங்கள் வீட்டை புதுப்பித்த பொறியாளர் கூட நாய் குறுக்கே வந்ததால் ப்ரேக் போட்டு கீழே விழுந்து முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடந்து இன்னும் நடக்க முடியாமல் தவிக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் இருக்கும். நானெல்லாம் பல வருடங்களாக இரவு பத்து மணிக்கு மேல் இரு சக்கர வாகனத்தை தொடவே மாட்டேன்.

நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வது எதிர்காலத்தில் தெரு நாய்ப் பெருக்கத்தை தவிர்க்கலாம். ஆனால் இப்போது உள்ளவற்றை, அதனால் வரும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கப் போகிறோம்?

குடும்பக் கட்டுப்பாடு செய்வதால் அவற்றின் வெறித்தனமும் போவோர் வருவோரை துரத்துவதும் மாறிப் போய் விடப் போகிறதா என்ன?

முன்பு போல தெரு நாய்களை பிடித்து கொல்வது வேண்டுமானால் கொடூரமானதாக இருக்கலாம். ஆனால் அவற்றை பிடித்து தனியானதொரு இடத்தில் அடைக்கலாமே! அது செலவுதான். ஆனால் அத்தியாவசியமான செலவுதான். மக்களின் பாதுகாப்புக்கான செலவுதான். தெருநாய் புரவலர்கள் இதை எதிர்த்தால் அவர்கள் வீட்டில் வைத்து பராமரிக்கட்டும்.

தெருநாய் புரவலர்கள் தெரு நாய்களுக்கு பொது வெளியில் உணவளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் உதாசீனம் செய்யப்படுகிறது. இதனை அமலாக்கினாலே கொஞ்சம் பிரச்சினை தீரும்.

எங்கள் வீட்டு வாசலில் ஒரு ஒரவலன் இரண்டு ஐந்து ரூபாய் டைகர் பிஸ்கெட் வாங்கி அதை உடைத்து உடைத்து போட்டுக் கொண்டிருப்பான், அவனிடம் ஒரு முறை சண்டை போட்டேன். "இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா? " என்று அவன் கேட்க, "தெரு நாய்க்கு பிஸ்கெட் போட இது உங்கப்பன் வீட்டு ரோடா?" என்று திருப்பி கேட்டதற்கு பின்னே அடங்கினான். இப்போதும் அவன் சைக்கிளில் செல்லும் போது அவன் பின்னே பத்து நாய்களாவது துரத்திக் கொண்டே ஓடும். அவை ஒரு நாள் அவனை கடித்தால்தான் புத்தி வரும். இது எல்லா தெரு நாய் புரவலர்களுக்கும்தான். 

தெரு நாய்களை அரசு தெருக்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.  அதனை மாநில அரசுகள் செய்வதை உச்ச நீதிமன்றம்தான் உறுதி செய்ய வேண்டும்.


பிகு: மேலே உள்ள படம் 05.10.2025 அன்று காலை 04.47 மணிக்கு என் வீட்டு வாசலில் எடுத்தது. அன்று ஒரு வேளையாக சென்னை செல்லப் புறப்பட்டு கதவை திறக்கும் வேளையில் இத்தனை தெரு நாய்கள். கூடவே மாடுகளும்.


No comments:

Post a Comment