Friday, April 5, 2019

இந்த வருஷம் ரெண்டு ஜாஸ்தி




முதலில் போன வருடம் பிப்ரவரி மாதம் எழுதியதை படியுங்கள்.

நள்ளிரவில் நாற்பது ??????



பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு நேற்று முடிந்தது. எத்தனை மணிக்கு முடிவுகள் வெளியானாலும் அவர்களுக்கான பணியிடம் என்ன என்பதை முடிவு செய்து விடுவோம் என்று தொழிலுறவு மேலாளர் சொன்னதால் அலுவலகத்திலேயே சங்கப் பொறுப்பாளர்கள் காத்திருந்தோம். அது வழக்கமான நடைமுறைதான். பதவி உயர்வு முடிவுகள் வெளி வந்து பணியிடங்களை இறுதிப்படுத்தி அதற்கான ஆணை வெளி வந்தவுடன் வீட்டிற்கு கிளம்புகையில் இரண்டரை மணி ஆகி விட்டது. நள்ளிரவு இரண்டரை மணி. 

நம்ம ஏரியா நாய்த் தொல்லைக்காக ஆட்டோவிலேயே வீட்டிற்கு போகலாம் என்றால் கோட்ட அலுவலகக் கிளையின் செயலாளர் தோழர் கங்காதரன், "நான் உங்களை வீட்டில் விட்டு விட்டுப் போகிறேன். நாய்கள் என்ன செய்கிறது என்று பார்ப்போம்" என்று சொல்ல அவர் கொடுத்த தைரியத்தில் அவர் வண்டியின் பின் அமர்ந்து புறப்பட்டேன்.

அலுவலகத்திலிருந்து வீடு வருகிற வரை வழி எங்கும் நாய்கள் மயமே. அந்த காலத்தில் பத்து அடிக்கு ஒரு ஜெயலலிதா கட் அவுட்  இருக்கும். அந்த கட் அவுட்டிற்கு ஒரு போலீஸ் காவல் இருப்பார். அது போல பத்தடிக்கு ஒரு நாய். 

வீடு வரும் வரையில் எண்ணிக் கொண்டே இருந்தேன். சரியாக நாற்பது நாய்கள். "பாவம் களைத்துப் போய் வீடு திரும்புகிறார்கள், பிழைத்துப் போகட்டும்" என்று அமைதியாக இருந்து விட்டன.

இன்று காலை அலுவலகம் வந்ததும் தோழர் கங்காதரன் சொன்னார்.

"ஐம்பத்தி மூன்று"

நான் புரியாமல் பார்த்தேன்.

உங்கள் வீடு வரை நாற்பது. 
என் வீட்டிற்கு போகிற வரையில் ஐம்பத்தி மூன்று.

மேனகா காந்தி உள்ளிட்ட ப்ளூ க்ராஸ், பீட்டா ஆட்களை வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் நள்ளிரவில் நடக்க வைக்க வேண்டும். 




இந்த வருடமும் அதே கதைதான். பதவி உயர்வு முடிவுகள், பணியமர்த்தல் ஆணை எல்லாம் கடந்த வியாழனன்று நடந்தது. அலுவலகத்திலிருந்து புறப்பட்ட போது மணி சரியாக நள்ளிரவு 01.30. இந்த வருடமும் கோட்ட அலுவலகக் கிளைச் செயலாளர் தோழர் உ.கங்காதரனே என்னை அவரது இரு சக்கர வாகனத்தில் என்னை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுப் போனார்.

இந்த வருடம் வழியில் உள்ள நாய்களை எண்ணுவது என்று முடிவெடுத்தே புறப்பட்டோம்.

என்னுடைய வீடு வரும் வரை சாலையில் இருந்த நாய்களின் எண்ணிக்கை மொத்தம் முப்பத்தி ஒன்பது. கடந்த வருட எண்ணிக்கையான நாற்பதை விட ஒன்று கம்மி.

தோழர் கங்காதரன் வீடு போய் சேர்ந்ததும்  16 என்று  ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அவர் வீடு செல்லும் வழியில் இருந்த நாய்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் 13 ஐ விட மூன்று அதிகம்.

மொத்தத்தில் இந்த ஆண்டின் எண்ணிக்கை இரண்டு அதிகம்.

எதற்கு இந்த நாய்கள் பற்றிய புள்ளி விபரம் என்ற கேள்வி வருகிறதல்லவா?

“தனி ஒருவன்” படத்தில் ஒரு வசனம் வரும்.

“பேப்பர்ல முதல் பக்கம் ஒரு செய்தி வரும். கடைசி பக்கம் இன்னொரு செய்தி வரும். ஆராய்ஞ்சு பார்த்தால்தான் இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கறது தெரியும்”

“நகராட்சிகள் தெரு நாய்களைக் கொல்லக் கூடாது. மாறாக அவைகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்து விட வேண்டும்”  என்ற உத்தரவை வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் இறுதியில் மேனகா காந்தி பிறப்பிக்கிறார்.

அடுத்து வந்த மன்மோகன்சிங் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்கிற  சின்ன டாக்டர் நாய்க்கடிக்கான மருந்து தயாரிக்கிற லைசன்ஸை அதுவரை அதனை தயாரித்துக் கொண்டிருந்த ஒரு பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து பறித்து ஒரு தனியார் நிறுவனத்துக்கு அளிக்கிறார்.

இந்த இரண்டு செய்திகளுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா?

1 comment:

  1. ரொம்ப நாள் கழிச்சு நாய்கள் பற்றிய பதிவு

    ReplyDelete