Monday, April 1, 2019

மாண்புமிகு "இரும்பு ஆண்மணி"

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய கதை இது.

புனைவுக் கதையான இதனை "பேஸ்மெண்ட் வீக்கான 56 இஞ்ச் மார்பர் யாருடனாவது ஒப்பிட்டுக் கொண்டால் அதற்கு கம்பெனி  பொறுப்பல்ல.

இரும்பு ஆண்மணி போல் இங்கே இருப்பவர்கள் இறுதி முடிவு எடுப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் நாம்தான் அவர்களை வாக்களித்து அரசியல் களத்திலிருந்து விரட்டி அடிக்க வேண்டும். 

மாண்புமிகு இரும்பு ஆண்மணி
– ஆதவன் தீட்சண்யா

வருடத்தின் கடைசிநாள். முடியப்போகும் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் என்று எதையெதையோ தொலைக்காட்சிகள் தொகுத்து கொட்டிக்கொண்டிருந்தன. வரவிருக்கும் புத்தாண்டை வரவேற்கும் விதமான சிறப்பு நிகழ்ச்சிகளும் களைகட்டியிருந்தன. பிரபலமான நடிகநடிகையரும் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களாக ஒரு காலக்கணக்கை வைத்துக் கொண்டு அது முடிந்ததாகவும் தொடங்குவதாகவும் கொண்டாடுவதைப் பார்க்க எனக்கு அபத்தமாக இருந்தது. தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு வெளியே போய்வரலாம் என்று கிளம்பும் போதுதான் ‘இன்னும் சற்று நேரத்தில் தொலைக்காட்சிகளில் தோன்றி நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றவிருக்கிறார்’ என்கிற ‘‘பிரேக்கிங் நியூஸ்’’ திரையில் மின்னத் தொடங்கியது. 

லிபரல்பாளையம் பிரதமர்களிலேயே மாண்புமிகு இரும்பு ஆண்மணி மிகவும் வித்தியாசமானவர். அதற்கு காரணம் அவரை வளர்த்தெடுத்த ராஷ்ட்டிரீய சர்வநாஸ்தி சபை. அலங்காரமான பெயரை வைத்துக்கொண்டு நாட்டை நாஸ்தியாக்கும் போலித்தனத்திற்கு பதிலாக, நாட்டை நாஸ்தியாக்கத் தான் போகிறோம் என்பதை பெயரிலேயே உணர்த்திவிடும் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டி அச்சபையை மக்கள் மிருகபலத்தோடு வெற்றிபெறச் செய்திருந்தார்கள். மிருகபலம் கொண்ட ஓர் ஆட்சி மனிதத்தன்மையோடு நடக்காது என்கிற உலகறிந்த உண்மையை லிபரல்பாளையத்திலும் மெய்ப்பிக்கப் பொருத்தமானவர் என்பதால் சபை அவரை பிரதமராக்கியது. 

முடிவுகள் எடுப்பதில் உறுதியாகவும், முடிவுகளை செயல்படுத்துவதில் அதை விட உறுதியாகவும் இருக்கக்கூடியவர் என்பதை எடுத்தயெடுப்பில் பொளேரென உணர்த்தும் விதமாக அவருக்கு இரும்பு மனிதர் என்கிற பட்டத்தை சூட்டுவதே சபையினரின் விருப்பமாயிருந்தது. ஆனால் அந்தப்பட்டம் ஏற்கனவே அண்டை நாடான இந்தியாவில் வல்லபாய் படேல் என்கிற தலைவரை குறிக்கின்றபடியால் வேறோரு பொருத்தமான பட்டப்பெயரை உருவாக்குவதில் அவர்கள் தீவிரமாக முனைந்திருந்தார்கள். அவரது பட்டாப்பட்டி டவுசரின் அளவான 86 இன்ச் என்பதை மையப்படுத்தி ‘அகன்ற இடுப்பன்’ என்கிற பெயரும்கூட பரிசீலனைக்கு வந்தது. ஆனால் இறுதிப்படுத்தப்பட்டதென்னவோ ‘இரும்பு ஆண்மணி’. 

பிரிட்டனின் மார்கரெட் தாட்சர், இந்தியாவின் இந்திரா காந்தி, குனிஞ்சாங்குப்பத்தில் முதல்வராயிருக்கும் போதே மர்ம மரணமடைந்த முதல்வர் ஒருவர் ஆகியோர் இரும்புப் பெண்மணி என்றழைக்கப்பட்ட மரபை அடியொட்டி எங்கள் பிரதமர் ‘மாண்புமிகு இரும்பு ஆண்மணி’ ஆனார். அப்போதிருந்து உலகத்தின் ஒரேயொரு இரும்பு ஆண்மணி எங்கள் பிரதமர் மட்டுமே. இரட்டை அர்த்தத்தில் கேலியாக சித்தரிக்கும் பல கதைகள் உருவாவதற்கான கெடுவாய்ப்பை எண்ணி வேறு யாரும் இரும்பு ஆண்மணி என்கிற பெயரை வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பது இவ்விடத்தில் தேவையற்றதோர் உண்மை. எப்படியாயினும்  அவருக்கே அவரது உண்மையான பெயர் நினைவிலில்லாமல் போனது.   

இரும்பு ஆண்மணி என்கிற பெயரில் உள்ள உறுதித்தன்மை அவரது நடப்பில் இல்லாமல் போனதை நாடு வெகுசீக்கிரத்திலேயே கண்டுகொண்டது. சற்றே சூடேற்றி தேவைப்பட்ட விதத்தில் பலராலும் வளைக்கப்பட முடிந்தவராகியதன் மூலம் அவர் இரும்பு என்பதற்கு அவக்கேடான புதிய அர்த்தத்தை பெற்றுத் தந்திருந்தார். தனது சுயரூபம் அம்பலப்படுவதை சமாளிப்பதற்காக இரும்பு ஆண்மணி அவ்வப்போது இவ்வாறு தொலைக்காட்சிகளில் தோன்றி உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பொதுவாக அவர் ஆற்றும் உரையை மக்கள் மிக கவனமாக காதைப் பொத்திக் கொண்டு கேட்டு ரசித்தார்கள். 

அவரது பேச்சைவிடவும் அங்கசேஷ்டைகளும் முகபாவங்களும் ரசிக்கும்படியாய் இருப்பதும் இதற்கொரு காரணம். மேடையிலிருந்து இறக்கிவிடப்பட்டதொரு நடிகர் உளவியல் சிக்கலுக்கு ஆளாகி எப்போதும் நடித்துக்காட்டியபடியே இருப்பது போன்றதோர் உணர்வை அவரது அங்கசேஷ்டைகளும் முகபாவங்களும் ஏற்படுத்தின. இப்படியான ஏற்பாடுகள் பலமாக இருந்தாலும், அவரது உரையில் பெரும்பாலும் உப்புச்சப்பில்லாத விசயங்களே இடம் பெற்றன. புதிதாக வாங்கிய துணிமணிகளை நாட்டுமக்களிடையே போட்டுக்காட்டி அபிப்பிராயம் கேட்பதுபோல அபத்தமாகவும்கூட ஆகிவிடுவதுண்டு. ஆகவே என்னத்த பேசி விடப்போகிறார் என்கிற அசிரத்தையோடும் இன்றைக்கு எவ்வளவு கேலிக்குரிய விதமாக தோன்றப்போகிறாரோ என்கிற குறுகுறுப்புடனும்தான் நான் உட்பட பலரும் அந்த ‘பிரேக்கிங் நியூஸ்’ அறிவிப்பை பார்த்துக்கொண்டிருந்தோம். 

திரைப்படத்தில் கதாநாயகனை முதன்முதலாக காட்டும்போது ஒலிக்கும் பின்னணி இசையையும் ஒளிக்கோலங்களையும் நினைவூட்டும் விதமான காட்சியமைப்புக்கிடையே பிரதமர் மாண்புமிகு இரும்பு ஆண்மணி திரையில் தோன்றினார். எல்லாவற்றையும் எய்திவிட்டதற்கு பின்னான ஒருவகை நிறைவும் துறவும் கலந்த மனநிலைக்கு இசைவாக இருந்தது அவரது முகப்பொலிவு. எவ்வித உரைக்குறிப்புமின்றி நெடுநேரம் பேசும் வழக்கத்தையுடைய அவர் இன்றைக்கு கையிலே ஓர் அறிக்கையை வைத்திருந்தார்.

 ‘மகிழ்ச்சிமிக்க புதிய லிபரல்பாளையம் புத்தாண்டில் பிறக்கும் என்று ஏற்கனவே நாட்டுமக்களுக்கு கொடுத்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதில் நான் இரும்பைப்போல உறுதியாயிருக்கிறேன். அதன்பொருட்டு நான் இந்தக் கணமே பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறேன். நன்றி. வணக்கம்...’ அறிக்கையை வாசித்து முடித்ததும் மண்டியிட்டு தரையை முத்தமிட்ட அவர் சரேலென அரங்கை விட்டு வெளியேறிய நிலையில் தொலைக்காட்சியின் திரை வெறுமையில் உறைந்தது. 

*

இரும்பு ஆண்மணி  இப்படியொரு முடிவை அறிவிப்பார் என்று தாங்களே எதிர்பார்க்கவில்லை என்று ராஷ்ட்டிரீய சர்வநாஸ்தி சபையினர் கூறிக்கொண்டாலும் அவர்களுக்கு தெரியாமல் அவர் எச்சிலைக்கூட விழுங்கமாட்டார் என்றே மக்கள் பேசிக்கொண்டார்கள். இந்தளவுக்கு விசுவாசமான அடிமையை இவ்வளவு சீக்கிரத்தில் இழந்துவிட்டோமே என்கிற துக்கத்தில் தொண்டையடைத்துப் போன தொழிலதிபர்கள் சிலர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சைகையால் பதில் சொன்னார்கள். இப்படி சாகாக்களுக்கும் சகாக்களுக்கும் தெரிவிக்காமல் இரும்பு ஆண்மணி ஏன் பதவி விலகினார், அதற்கு பிறகு எங்கே போனார் என்பது குறித்து ஆளாளுக்கு யூகத்தில் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்த வேளையில் அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த கடைசிச் செய்தி இதுதான்: பூலோகத்தில் இனி நான் பார்க்கக்கூடிய நாடோ நகரமோ எதுவுமில்லாத விரக்தியில் மேலோகம் செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம். 

கடைசி வாக்கியத்திலிருந்த அவரது வேண்டுகோளை நிறைவேற்றியே தீர்வது என்பதில் லிபரல்பாளையத்து குடிமக்களாகிய நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 


இரும்பு ஆண்மணி வந்துகொண்டிருப்பதாக ஒற்றர்கள் மூலம் கிடைத்த செய்தி கேட்டு மேலோகத்தின் கதவு அவசரமாக அடைக்கப்பட்டது. எக்காரணம் கொண்டும் அவரை உள்ளே விடுவதில்லை என்பதில் மேலோகத்தவர்கள் உறுதியாயிருந்தார்கள். இரும்பு ஆண்மணி இங்கு வந்தும் தங்களை கொல்லக்கூடும் என்கிற அச்சத்தில் அவர்கள் கதவடைத்தது சரிதான் என்றே நான் கருதுகிறேன். உங்கள் வீட்டுக்கு கதவிருக்கிறதா?

2 comments: