Saturday, April 13, 2019

காதல் தோல்வியாம், ஆண்மைக்குறைவாம்

ஞாபகம் வருதே     13 

காதல் தோல்வியாம், ஆண்மைக்குறைவாம்




இன்று காலை எழுந்தவுடனேயே வாட்ஸப்பில் ஒரு செய்தி வந்து விழுந்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் கர்னாடகாவில் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த பதிமூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட செய்தி அது. கடன் தொல்லை, பயிர் நாசம், உற்பத்திக்கான விலை வீழ்ச்சி ஆகியவையே அந்த தற்கொலைகளுக்கான காரணமாக இருந்தது. இதயத்தை வருத்தப்படச் செய்தி அது.

அதன் பின்பு நாளிதழில் பார்த்த செய்தி நொந்து போன இதயத்தை குத்தீட்டியால் கிழிப்பது போல அமைந்திருந்தது.

விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப் பட்ட கேள்வி ஒன்றுக்கு விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன்சிங் என்ற படுபாவி கொடுத்த பதில் அது.

காதல் தோல்விகள், வரதட்சணைப் பிரச்சினை மற்றும் ஆண்மைக் குறைவு ஆகிய பிரச்சினைகளுக்காகத்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று அந்த அற்ப மனிதன் எழுத்துபூர்வமாக விளக்கம் கொடுத்துள்ளார். விவசாயிகளுடைய பிரச்சினைகள் குறித்து எப்படிப்பட்ட புரிதல் உள்ளவர் விவசாயத்துறை அமைச்சராக இருக்கிறார் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல எப்படிப்பட்ட மனிதர்களை மோடி தனது அமைச்சர்களாக பொறுக்கி எடுத்துள்ளார் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

இந்திய விவசாயம் இன்றைக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். விவசாயத்தை விட்டு வெளியேறும் விவசாயிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விளை நிலங்கள் வீட்டு மனைகளாகவும் தரிசாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

விவசாயத்திற்கான உற்பத்திச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. விதைகள், உரம், பூச்சி மருந்து ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கின்றன. ஒன்று கடுமையான வறட்சியால் தண்ணீர் கிடைக்காது. இல்லையெனில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பயிர்கள் அழுகிப் போகும்.

இத்தனையும் தாண்டி எந்த வருடமாவது நல்ல விளைச்சல் வந்தால் அதற்கேற்ற விலை கிடைக்காது. அரசு கொள்முதல் என்பதை கடந்த கால நிகழ்வாக மாற்றப்பார்க்கிறது மோடி அரசு. குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்வதிலும் விவசாயிகளை வஞ்சித்து விட்டார்கள். 

மனைவியின் தாலியை அடமானம் வைத்து கடன் வாங்கி விவசாயம் செய்கிறவனால் அந்த தாலியை மீட்க முடியாத போது தூக்குக் கயிற்றில் தொங்கி, மனைவியின் தாலிக்கயிற்றை அறுக்கிறான். 

விவசாயிகள் என்ன அம்பானிகளா இல்லை அதானிகளா? எண்பதாயிரம் கோடி ரூபாய் கடன் நிலுவையில் இருந்தாலும் இன்னும் ஒரு ஆறாயிரம் கோடி ரூபாய் கடன் கொடுக்கச் சொல்ல இந்திய விவசாயி என்ன மோடியின் நண்பனா?



பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி கட்ட முடியாமல் நிறுவனங்களை மூடி விட்டாலும் கடற்கரை மாளிகை பின்னணியில் இருக்க கவர்ச்சியுடை அணிந்த பெண்களோடு ஒய்யாரமாய் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க இந்திய விவசாயி என்ன விஜய் மல்லய்யா போல மானங்கெட்டவனா? வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதவன் என்ற அவப்பெயரைச் சம்பாதிப்பதை விட உயிரை விடுவது மேல் என்று முடிவெடுக்கிறான்.

விவசாயிகளின் பிரச்சினைகளை மோடி அரசு தீர்க்காது. இருக்கும் நிலங்களையும் அபகரித்து அதானி, அம்பானிகளுக்கு தாரை வார்க்க துடிக்கிற அரசு விவசாயிகளை வாழ வைக்கா விட்டாலும் சரி, இழிவு படுத்தாமலாவது இருக்கலாம்.

இறந்து போகிற விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் ஐம்பது வயதுக்காரர்கள். அவர்களுக்கு காதல் தோல்வியும் ஆண்மைக் குறைவுப் பிரச்சினையும் எங்கிருந்தய்யா வருகிறது? இப்படிச் சொல்வதற்கு அந்த மனிதனுக்கு நா கூசவில்லை. 

பாஜக மந்திரி இப்படி சொல்வது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. இந்த அயோக்கியத்தனமும் ஆணவமும்தான் அவர்கள் குணம். இப்படி திமிரோடு பேசுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்களே, அந்த அதி மேதாவிகள் மீதுதான் கோபம் வருகிறது. இத்தனை அலங்கோலம் இந்த ஒரு வருடத்தில் நடப்பதைப் பார்த்தாலும் மோடி மீது விமர்சனம் வைத்தால் முகம் சுளிக்கிற சில புத்திசாலிகள் இருக்கிறார்கள். இந்த மந்திரி பேசுவதைக் கேட்ட பிறகாவது அவர்கள் திருந்தினால் சரி.

No comments:

Post a Comment