Sunday, April 21, 2019

மதம் மனிதத்தின் எதிரி


இன்று இலங்கையில் நிகழ்ந்திருக்கும் கொடூரம் மிகவும் வருத்தமளிக்கிறது.

இந்த அராஜகத்தை செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மனித குலத்தின் எதிரிகள்.

மனிதத்தின் எதிரிகள்.

ஈஸ்டர் நாளிலே தேவாலயங்களில் வைக்கப் பட்ட வெடிகுண்டுகள், மத அடிப்படைவாதத்தின் வெளிப்பாடு என்று சொல்ல பெரிய புலனாய்வு எதுவும் தேவையில்லை.

மனித குலம் தோன்றியதிலிருந்து நிகழ்ந்திருக்கிற பெரும் போர்கள், பேரழிவுச் சம்பவங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் அவற்றின் பின்னணியில் மத அடிப்படைவாதமும் மத மோதலுமே காரணமாக இருந்திருக்கிறது.

அனைத்து மதங்களும் உபதேசிப்பது அன்பைத்தான் என்றால் அங்கே அழிவுக் கருவிகளுக்கான தேவை என்ன?

யானைக்கு மதம் பிடிப்பதால் ஏற்படும் அழிவை விட
மனிதனுக்கு மதம் பிடிப்பதால் உருவாகும் அழிவு மிகவும் பெரிது. 

மனிதன் படைத்த மதம் இன்று மனித குலத்திற்கு எதிரான மிகப் பெரிய சாபமாக மாறியுள்ளது.

மதம் இன்று கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையிலான மீடியம் என்ற நிலையை தாண்டி

நிறுவனமாக,
ஆட்சியதிகாரத்தை பிடிக்கும் ஆயுதமாக,
மக்களின் மனதை மூளைச்சலவை செய்யும் கருவியாக

மாறி விட்டது.

அதனுடைய விளைவுகளைத்தான் உலகம் இன்று சந்தித்து வருகிறது.

இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தக் கூடியது.

மத நம்பிக்கையோ, மத உணர்வோ வீட்டிற்குள் மட்டும் இருந்தால் எந்த பிரச்சினையும் கிடையாது.

அது 

வீதிக்கும், அரசாட்சிக்கும் வருகின்றபோது
மத நம்பிக்கை, வெறியாக, அடிப்படைவாதமாக மாறுகிற போது
மனிதத்தின் எதிரியாகவேதான் தொடரும்.

4 comments:

  1. "நாங்கள் நிம்மதி தேடித்தான் வழிபாட்டு தலங்களுக்கு வருகிறோம், இங்கேயே இப்படி நடந்தால் நாங்கள் எங்கே போய் முறையிடுவது? " என்று குண்டுவெடிப்பில் இருந்து தப்பிய ஒரு முதியவர் தொலைக்காட்சியில் கதறினார். சம்பவம் நடந்த எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட மக்கள் "கடவுளே காப்பாற்று" என்று கடவுளை நோக்கி ஓடவில்லை. ஆக எந்த கடவுளும் நம்மை காப்பாற்ற மாட்டார் என்று மனிதனின் உள்ளுணர்வுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. இருந்தாலும் நீங்கள் சொல்வது போல இவர்கள் எல்லோரும் மதவாதிகளால் பலமாக மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    இன்று இந்தியாவில் இந்துக்களும் இலங்கையில் பவுத்தர்களும் மதம் பிடித்து அலைவதற்க்கு நிறுவனமயப்படுத்தபட்ட கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய இரு மதங்களுமே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மதத்தை நிறுவனமயப்படுத்த இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்கும் இந்த இரு மதத்தவர்களே கற்றுக் கொடுத்தார்கள்.

    தற்போது இலங்கையில், இந்தியாவிலிருந்து புதிது புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்களும் இந்து மதம் சார்ந்த நிறுவனங்களும் காளான்களை போல முளைவிட்டு கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு எந்நாளும் இல்லாத திருநாளாய் பிள்ளையார் ஊர்வலம் கூட சதுர்த்திக்கு நடத்தினார்கள். இது எங்கே போய் முடியும் என்று அச்சமாக இருக்கிறது. மோதியும் RSSம் வந்து இவர்களை காப்பாற்ற மாட்டார்கள் என்று இந்த மடையன்களுக்கு சூடுபட்டும் தெரியவில்லை. கிட்டத்தட்ட எல்லோருமே இன்று மதம் பிடித்து அலைகிறார்கள்.

    இன்று காலை சில நூறு மீட்டருக்கு அப்பாலிருந்து காதில் கேட்ட வெடிச்சத்தமும் நாள் முழுதும் தொலைக்காட்சிகளில் ஒலித்த மரண ஓலமும் தற்போது கொழும்பில் நிலவும் மயான அமைதியும் மிகுந்த மன உளைச்சலை தருகிறது. இதுபோல இன்னொரு சம்பவம் இனிமேல் நடக்க கூடாது என்று யாரை வேண்டுவது என்றுதான் தெரியவில்லை!

    ReplyDelete
  2. பிரதீபன் சரவணபவானந்தன்April 22, 2019 at 7:30 AM

    நான் இந்து
    நான் வழமையாக கொச்சிக்கடை அந்தோனியாருக்கு ஒவ்வொரு ஞாயிறுக்கும் போவேன்.
    இந்த வாரம் ஈஸ்ட்டர் என்பதால் பிறப்பால் கிறிஸ்தவர்கள் பெருமளவில் வருவார்கள் அதனால் பின்னேரம் போவோம் என்று முடிவு செய்து வீட்டில் இருந்தேன். போயிருந்தால் 270 இல் நானும் ஒருவன்.

    இதை செய்தது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு என்று ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவின் முதல் அறிக்கை கூறுகின்றது
    இந்த அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள அந்த அமைப்பின் கிளை ஆகும்

    ஆனால் தமிழ்நாட்டு அமைப்புக்கும் இந்த தாக்குதல் பற்றி தெரிந்திருக்காது

    ஸ்ரீலங்கா கிளையை சேர்ந்தவர்கள் சுயமாக திடடம் போட்டு செய்திருக்கின்றார்கள்

    சில காலத்துக்கு முதல் அரபு நாட்டு பிரதிநிதிகள் இவர்களை சந்தித்து இருக்கின்றார்கள்

    ReplyDelete
  3. பிரதீபன், எனக்கு தெரிந்தவரை நீங்கள் இங்கே சொல்வதை போல இலங்கை புலனாய்வு பிரிவு எந்த அறிக்கையையும் இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடவில்லை. இந்த செய்தியை வெளியிட்டிருப்பது INDIA TIMES. INDIA TIMES வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டியே இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
    எதுக்கோ முடிச்சி போடப்படுவது தெளிவாகவே தெரிகிறது. தமிழ்நாடு மிக மிக விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இதுவென்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பிரதீபன் சரவணபவானந்தன்April 23, 2019 at 7:11 AM

      INDIA TIMES. INDIA TIMES தான் ஆரம்பத்தில் கூறினார்கள்
      காரணம் அந்த ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்

      அதைவிட முக்கியம் அவர்களின் முதல் இலக்கு தமிழகமே

      Delete