Friday, February 8, 2019

ரபேல் - ஹிந்துவுக்கு என்ன பதில் மோடி?



ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக ஹிந்து நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள ஆதாரங்கள் அதிர்ச்சி ரகம். 

ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும் அன்றைய விமானப்படை துணைத்தலைவருமான எஸ்.பி.பி.சிண்ஹா, பிரதமர் அலுவலகம் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்த்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் ஒரு அலுவலகக் குறிப்பே தயார் செய்து "பிரதமர் அலுவலகம் இணையான பேச்சு வார்த்தை நடத்துவது, பேச்சுவார்த்தைக் குழுவின் முயற்சிகளை பலவீனப்படுத்தும்" என்று பதிவு செய்ய

அன்றைய பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த மோகன் குமார் என்பவர், "பிரதமர் அலுவலகம் இவ்வாறு செய்யக் கூடாது' என்று தன் கைப்படவே எழுதியுள்ளார்.

ஒரு சர்வதேச ஒப்பந்தம் உருவானால் பின்பற்ற வேண்டிய விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது என்று சொல்லும் "ஹிந்து" "வங்கிப் பிணை Bank Guarantee') கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (இவருடைய மகன் விவேக் தோவல் CAYMAN ISLANDS  என்ற கறுப்புப் பண சொர்க்க பூமியில் 8300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு வந்ததும் அது குறித்து காவிகள் வாய் திறக்கவேயில்லை என்பதும் உங்களது நினைவுக்கு) அன்றைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிகருக்கு உத்தரவிட்டதற்கான ஆவணங்களும் தங்கள் வசம் உள்ளது என்றும் சொல்கிறது.

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தைக்குழு செயல்படுகையில் அதைத்தாண்டி பிரதமர் அலுவலகம் செயல்பட்டது ஏன்?

பாதுகாப்பு அமைச்சகத்தின் கருத்தை உதாசீனம் செய்தது ஏன்?

வங்கிப் பிணை அவசியமில்லை என்று உத்தரவிட அஜித் தோவலுக்கு என்ன அதிகாரம்?

அவர் மகனுக்கு எப்படி வந்தது 8300 கோடி ரூபாய்?

இந்த கேள்விகளை ஹிந்து மட்டும் கேட்கவில்லை,
நானும் கேட்கிறேன்,
இந்நாட்டு மக்களும் கேட்பார்கள். 

பதில் சொல்லும் நேர்மை மோடிக்கு உள்ளதா?


No comments:

Post a Comment