Wednesday, February 20, 2019

எல்லையிலே - இருப்பவர்களுக்கும் கருணை வேண்டும் . . .


தீக்கதிர் நாளிதழில் நேற்று வந்த ஒரு முக்கியமான கட்டுரை. எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டாலும் மத்திய ரிசர்வ் போலீஸிலோ அல்லது எல்லை பாதுகாப்புப் படையிலோ அல்லது கடலோரக் காவல் படையிலோ பணி செய்பவர்கள் வீரர்கள் அல்ல, அவர்கள் துணை வீரர்களாகவே மதிக்கப் படுகிறார்கள் என்ற உண்மை பலரும் அறிய வேண்டியது. 

இந்திய விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் அண்ணல் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான தோழர் கணேஷ் பல உண்மைகளை இங்கே எடுத்துரைக்கிறார்.

கொல்லப்பட்டவர்களுக்கு கிடைக்கிற கருணை, பணியில் இருப்பவர்களுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது என்பதை நீங்களும் உணர்வீர்கள். 

சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்த அவர்களுக்கு தொழிற்சங்கம் கிடையாது. 

ஒரு தொழிற்சங்கத்தின் குரலாக மக்களின் குரல்தான் ஒலிக்க வேண்டும்.  


வீரர்கள் அல்ல... துணை வீரர்கள்; 

ஓய்வூதியம் மறுக்கப்பட்ட தியாகிகள்


                                                                     - கணேஷ்


இறந்தவர்களின் குடும்பங்களைப் பாதுகாக்க நன்கொடைகள் குவிவதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற நேரங்களில் இத்தகைய செய்திகள் வருவது வாடிக்கையானவைதான். மேலோட்டமாகப் பார்த்தால் இதெல்லாம் நல்ல விஷயம்தான். குடும்பத்தலைவர் திடீரென்று இறந்துவிட்டால், குடும்பம் நிர்க்கதியாகிவிடுமே.. அவர்களை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கேள்விகளெல்லாம் நியாயமானவைதான். 

ஆனால், இந்த கருணை அடிப்படையிலான அறிவிப்புகளின் நிலை என்ன? கடந்த கால அனுபவங்களைப் பார்த்தால், பெரும்பாலானவை அறிவிப்புகளோடு நின்று விடும். கும்பகோணம் பள்ளி கொடூரத்திற்கு நிவாரணம் அறிவித்த பல முக்கிய புள்ளிகள் பின்னர் அதுபற்றிப் பேசவேயில்லை. அவர்கள் மறந்துவிட்டார்கள். மக்களும் மறந்து விட்டார்கள். எப்படி கும்பகோணம் பள்ளிக்குழந்தைகளின் அந்த மரணம் இப்போது நமக்கு வெறும் சம்பவமாக மாறி விட்டதோ, அது போல இந்த 40 பேரின் மரணங்களும் வெறும் சம்பவமாக சிலஆண்டுகளில் மாறிவிடும். 

இதைவிடப் பெரிய அடி விழுந்தால் அவ்வளவுதான். உடனே மறந்துவிடுவோம். அப்படியே, இந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வரும் என்றே வைத்துக் கொள்வோம். வீரேந்திர சேவாக்கை எப்படித் தொடர்பு கொள்வது..? அரசு அறிவித்துள்ள நிதியை யார்மூலமாக வாங்குவது..? லஞ்சம் கொடுத்தால்தான் கோப்பு நகரும் என்றால் யாருக்கு அந்தலஞ்சத்தைக் கொடுப்பது..? பிச்சைக்காசு தருவது போன்று அலைய விடுவார்கள். காசோலை தருவார்கள். இப்போது வங்கியில் போட்டுவிட வேண்டாம். நாங்கள் சொல்லும்போது போடுங்கள் என்பார்கள். குடும்பத்தலைவர் தியாகம் செய்வது ஒருபுறம். அறிவித்த பலன்களை வாங்குவதற்கு தனது நாட்களை வாரிசு தியாகம் செய்தாக வேண்டும்.

ஒரு விஷயத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இறந்தவர்கள் தேசப்பாதுகாப்புக்காக உயிர் விட்டிருக்கிறார்கள். இது சாதாரண விஷயமல்ல. இவர்கள் மேற்கொண்டுள்ள பணி அற்பமானதல்ல. இதை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள மக்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இந்தப் படுகொலை பற்றிப்பேசுகிற அனைவரும் இவர்களை "வீரர்கள்" என்றுதான் அழைக்கிறார்கள். 

ஆனால் விதிகளின்படி இவர்கள் "வீரர்கள்" அல்ல. இவர்கள் "துணை வீரர்கள்" தான் வீரர்களுக்குரிய சலுகைகள் மற்றும் பலன்களுக்கு இவர்கள் தகுதியானவர்கள் அல்ல என்று விதிகள் சொல்கின்றன.தற்போது கொல்லப்பட்ட சிஆர்பிஎப் மட்டுமல்ல, எல்லைப் பாதுகாப்புப்படை, கடலோர காவற்படை உள்ளிட்ட அனைத்து துணை ராணுவ வீரர்களின் பணிகளுக்கும், ராணுவ வீரர்களின் பணிகளுக்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. 

எதிரிகளோடு இவர்கள்தான் கூடுதல் நேரம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்றாடம் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாராவது ஒரு துணை ராணுவ வீரரின் உடல் ஒவ்வொரு நாளும்சுமக்கப்படுகிறது. இவர்களை தேசத்திற்காக உயிர்நீத்த தியாகிகள் என்று நாம் சொல்கிறோம். அதே வேளை உயிரோடு இருக்கும், தேசத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் துணை ராணுவத்தினரைப் பற்றிப் பேசுவதில்லையே..!! துணை ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் இல்லை. 

பாதுகாப்பான ஓய்வூதியத்தை எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கும், நீதிபதிகளுக்கும், அரசுஉயர் அதிகாரிகளுக்கும் தந்த அரசு, இந்த "தியாகிகள்" அதற்கு தகுதியானவர்கள் என்றுநினைத்துப் பார்க்கவில்லை. 20, 25 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தோடு வாழலாம் என்று நினைத்தால், அரசு வேலையில் இட ஒதுக்கீடு கிடையாது.

மற்றவர்களோடு போட்டி போட்டுக் கொள்ள வேண்டியதுதான். பல முறை பாடத்திட்டங்களே மாறியிருக்கும். இதில் தங்களை விட 20 வயது குறைந்தவர்களோடு போட்டி போடுவதா?பணியில் இருப்பவர்களின் நிலை படுமோசம். அண்மையில் ஒரு துணை ராணுவ வீரர் சமூக வலைத்தளத்தில் பொங்கி விட்டார். அவர் தற்போது பணியில் இல்லை. இதுதான் நிலைமை. 

ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கும் "தால்" பற்றி வீரர்கள் அடிக்கும் கிண்டல் குபீர் சிரிப்பை வரவழைக்கும். வேதனையையும் தரும். அடியிலிருந்து எடுத்தால் கூட்டு. கலக்கிஊற்றிக் கொண்டால் சாம்பார். மேலே எடுத்தால் ரசம். இதுதான் சாப்பாட்டு நிலைமை.இதைத்தான் அந்த வீரர் அம்பலப்படுத்தினார். வேலையே போய்விட்டது. 

இந்த நேரத்தில்தான் அரசைக் குறை சொல்லியும், பிற கட்சிகளைத் தாக்கியும் பல கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் பலர் இது அரசியல் பேசுவதற்கான நேரமில்லை என்கிறார்கள். துணை ராணுவ வீரர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமென்றால், அரசியல் பேசியாக வேண்டும். ஓய்வூதியப் பறிப்புக்கு அரசியல்தானே காரணமாக இருந்தது? அந்த அரசியல் பற்றிப் பேச வேண்டும். தேசப் பாதுகாப்பைத் தன் கடமையாகச் செய்யும் இவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பது அரசியல்தான். ஆகவே அரசியல் பேசியாக வேண்டும். 

யாருடைய தயவிலும் முன்னாள் துணை ராணுவ வீரரோ அல்லது அவரது குடும்பமோ வாழ வேண்டியதில்லை. கருணை அடிப்படையிலான உதவி வேண்டாம். அடிப்படை உரிமையான ஓய்வூதியத்தை வழங்குங்கள். அது ஒரு பாதுகாப்பான வருங்காலத்தை வீரர்களுக்குத் தரும். ஓய்வூதிய அரசியலைப் பேச வேண்டிய நேரமிது. இடஒதுக்கீடு அரசியலைப் பேச வேண்டிய நேரமிது. தேசத்தின் நிகழ்ச்சி நிரலில்இடம் பெற வேண்டிய ஒன்றாக இது மாற வேண்டும். 

பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லுங்கள் இந்த வீரர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்று. இன்று சொல்லாவிட்டால் எப்போது சொல்லப் போகிறோம்? இன்று கேட்காவிட்டால் அவர்களும் எப்போது கேட்கப் போகிறார்கள்?


கட்டுரையாளர்: விமானப் படை முன்னாள் வீரர்

No comments:

Post a Comment