Monday, February 18, 2019

உண்மையில் "வரிகளின் அரசன்" யார்?


தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் எழுதி நேற்றைய தீக்கதிர் இதழில் பிரசுரமான கட்டுரையை பகிர்ந்து கொண்டுள்ளேன்.




வரிகளின் அரசன்
பொருளியல் அரங்கம்- க.சுவாமிநாதன்


இந்து பிசினஸ் லைன் இதழில் ( 12.02.2019) அஜய் ஸ்ரீ வஸ்தவா எழுதியுள்ள நடுப்பக்க கட்டுரை தரும் தகவல்கள் இவை. சுதந்திரச் சந்தை பற்றி 1990களில் உலக நாடுகளுக்கு டியூசன் எடுத்தவர்கள் இன்று தங்கள் சொந்த சந்தையை பாதுகாக்க ரிவர்ஸ் கியர் போடுவதை இத்தகவல்கள் நமக்கு சுட்டுகின்றன. கருத்துக்கள் மூலக் கட்டுரைக்கு வெளியே இருந்தும் இங்கே பகிரப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவை “வரி அரசன்” (TARIFF KING) என்று விமர்சித்துள்ளார். அமெரிக்க சரக்குகள் மீது அதீத இறக்குமதி வரிகளை இந்தியா போடுகிறது என்பது அவரின் குற்றச்சாட்டு. ஜனவரி 24 அன்று அவர், அமெரிக்க விஸ்கி மீது இந்தியா 150 சதவீதம் இறக்குமதி வரி போடுகிறது; ஆனால் இந்திய விஸ்கி மீது அமெரிக்கா வரி எதுவுமே போடுவதில்லை என்று சுட்டிக் காட்டினார். இதனால் அமெரிக்காவின் 800 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையை சமாளிக்க “அமெரிக்க நாட்டு பரஸ்பர வர்த்தக சட்டம்” (US-RTA) வாயிலாக தீர்வுகாண வேண்டி இருப்பதையும் அவர் கூறினார்.

எல்லாவற்றிற்கும் தலையாட்டுகிறவர் என்றாவது ஒரு நாள் அசைக்காவிட்டால் ரொம்ப கோபம் வருமல்லவா! அது போன்ற கோபம் போலிருக்கிறது டிரம்ப் க்கு... ஏனென்றால் பல நாடுகள் போடுகிற இறக்குமதி வரிகளை பார்த்தால் இந்தியா போடுவது ரொம்ப அதிகமில்லை.

இந்தியா விஸ்கி, ஒயின் மீது 150 சதவீதம், வாகனங்கள் மீது 60-75 சதவீதம், மாம்பழ ஜுஸ் மீது 40 சதவீதம், மார்பிள் மீது 40 சதவீதம் போடுகிறது. உச்ச பட்ச இறக்குமதி வரி 150 சதவீதம் தான்.

உலக வர்த்தக அமைப்பு (W.T.O) வெளியிட்டுள்ள “உலக வரி விவரங்கள் - 2018)” அறிக்கையில் பல நாடுகளின் உச்சபட்ச இறக்குமதி வரிகளின் அளவு குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பான் 736 சதவீதம். கொரியா 807 சதவீதம். ஆஸ்திரேலியா 163 சதவீதம். இந்தியாவை வரி அரசன் என்று கிண்டல் செய்கிற அமெரிக்காவில் 350 சதவீதம். இந்தியாவை விட உச்ச பட்ச வரி விகிதங்கள் அமெரிக்காவில் இரண்டே கால் மடங்குக்கு அதிகம். ஜப்பானில் கிட்டத் தட்ட 5 மடங்கு. தென் கொரியாவில் அஞ்சே கால் மடங்குக்கு அதிகம். யார் வரிகளின் அரசன்? கணக்கு உதைக்கவில்லையா?

பருப்பு முதல் செருப்பு வரை

எது எது மீதெல்லாம் அந்நாடுகள் வரி போட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். புகையிலை மீது 350 சதவீதம். கடலை மீது 163.4 சதவீதம். செருப்பு மீது 24 முதல் 48 சதவீதம். ஸ்வெட்டர் மீது 32 சதவீதம். டிரக் மீது 25 சதவீதம். கைக் கடிகாரம் மீது போடப்பட்டுள்ள பார்ட் பார்ட் ஆக வரியை பார்த்தால் தலை சுற்றும். ஜப்பான் நாடு, அரிசி, செருப்பு, பால் பொருட்கள், உணவு மீது வரிகளை தீட்டுகின்றன. எருமை கறி மீது 38.5 சதவீதம். ஷூ மீது 30 சதவீதம். தென் கொரியாவை பாருங்கள். வெள்ளப் பூண்டு மீது 360 சதவீதம். தேன் மீது 243 சதவீதம். எள் மீது 630 சதவீதம். பாதாம் 51.7 சதவீதம். ஆரஞ்சு 50 சதவீதம். சீஸ் 36 சதவீதம். ஆகவே இறக்குமதி மீதான வரி விதிப்பு உலகம் முழுவதும் உள்ளது. வரி ராணிகள், வரி இளவரசர்கள், வரி இளவரசிகள், வரி மந்திரிகள் என்று டிரம்ப் விருதுகளை அள்ளி வழங்கலாம்.

உலகமயம் உள்ளூர் லாபம்

உலக சந்தை என்று பேசினாலும் யாரும் தங்கள் கதவுகளை கண்டிசன் இல்லாமல் திறப்பதில்லை என்பதற்கு உதாரணங்கள் இவை. அவரவர் நாட்டின் சந்தையை பாதுகாப்பதில் மேலை நாடுகள் மிகத் தெளிவாக இருந்தன. இருக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளே தங்கள் சந்தைக்கு பாதிப்பு என்றாலும் திறந்து விடுகிற நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின. ஜப்பானுக்கு தனது நெல் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். அமெரிக்காவுக்கு தனது புகையிலை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். இந்தியா ஒயின் தயாரிப்பை பாதுகாக்க வேண்டியுள்ளது. டிரம்ப் எதில் அதிகமாக இந்திய வரிகள் இருக்கின்றனவோ அதை சுட்டிக் காட்டியுள்ளார். 150 சதவீதம் ஒயின் மீது என்பதால் அதை கூறுகிறார். 

ஆனால் இந்தியாவின் சராசரி வரிகள் 13.8 சதவீதம் மட்டுமே. அதுவும் தொழில் உற்பத்தி பொருட்களின் வரி சராசரி 10.7 சதவீதம் தான். இன்னும் சொல்லப் போனால் வணிக அழுத்த சராசரி -மொத்த வணிகத்தை மொத்த வரி வசூல் தொகையால் வகுத்தால் - தொழில் உற்பத்தி பொருட்களுக்கு 5.5 சதவீதம் மட்டுமே. அமெரிக்க சராசரியை விட சற்று அதிகம்தான்.டிரம்ப் இந்த சராசரியை சொல்லாமல் உச்ச பட்ச விகிதத்தை சொன்னது ஒரு “பன்ச்” க்காகவே.

மீறுவதற்கு நியாயம்

சில பொருட்கள் மீது அமெரிக்கா மற்றும் பல நாடுகள் கூடுதல் வரிகளை போடுகின்றன. ஆகவே இந்தியாவை வரிச் சுவர் அரசன் என்று அழைப்பதற்கு எந்த நியாயம் இல்லை. ஆனால் டிரம்ப் இப்படி பேசுவதற்கு காரணம் உள்ளது. இது ஒரு பிரச்சாரம். தான் கட்டவிழ்க்கிற தாக்குதலுக்கு நியாயம் கற்பிப்பது ஆகும்.1995 ல் உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா தனது வரி உரிமையை வரம்புக்கு உட்படுத்துவதாக ஏற்றுக் கொண்டது.'

ஆனால் இப்போது அதை மீற முனைகிறது. அதற்கு அமெரிக்க பரஸ்பர வர்த்தக சட்டத்தை (USA TRADE RECIPROCAL ACT) பிரயோகிக்க வேண்டும். தேச பாதுகாப்பு என்ற காரணத்தை கொண்டு வர வேண்டும். இந்த சட்டத்தை பயன்படுத்தியே உருக்கு, அலுமினியம் மீது போன ஆண்டு இறக்குமதி வரியைப் போட்டார். யாரேனும் உட்டோ தகராறு தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு போட்டால் வம்பு என்பதால் அதற்கான நீதிபதிகள் நியமனத்திற்கே கட்டையை போட்டு தாமதம் செய்தார். உட்டோ விதிகள் படி இருதரப்பு வரிகளை போட முடியாது. உட்டோ உறுப்பினர்கள் எல்லோருக்கும் ஒரே வரி விகிதமாகவே இருக்க முடியும். சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்திருந்தால் விதி விலக்கு உண்டு. அதுவும் கூட குறைவான வரி போடலாம். அதிக வரி போட முடியாது. ஆனால் இதற்கு ஒவ்வாத இரு தரப்பு வரியையே இப்போது செய்யப் பார்க்கிறது.

இந்த இரு தரப்பு சட்டத்தை பயன்படுத்தி வரியற்ற சுவர்களையும் எழுப்பலாம். ஆனால் உடல் நலம், பாதுகாப்பு போன்ற காரணங்களை நிரூபிக்க வேண்டும்.

டிரம்ப் என்ன சொல்கிறார்? ஒரே சரக்கு மீது பரஸ்பரம் போடக் கூடிய வரிகள் ஓரே அளவில் இருக்க வேண்டும். இது சாத்தியமில்லை. உதாரணமாக அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோட்டார் சைக்கிள் மீது ஒரே வரி என்றால் இந்தியாவுக்கு அதில் லாபம் ஏதுமில்லை. காரணம் அமெரிக்கா குறைவான வரி போட்டாலும் இந்தியா அதை ஏற்றுமதி செய்வதில்லை. நகைக்கு ஒரே விகிதம் எனில் இந்தியா குறைவான வரி போட்டாலும் அமெரிக்கா நகை ஏற்றுமதி செய்வதில்லை.

சாயம் போச்சு


எனவே டிரம்ப் வாதங்கள் நடப்பிற்கு சம்பந்தமில்லாதவை. குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லாதவை. கைகளை முறுக்குவதற்காக ஓங்கி எழுப்புகிற ஆணவக் குரலே. சுதந்திர சந்தை என்ற இவர்களின் கவர்ச்சிகர முழக்கங்கள் எல்லாம் சாயம் போய் வெளிறி காட்சியளிக்கின்றன.

No comments:

Post a Comment