Wednesday, February 27, 2019

110 ஆண்டுகளுக்கு முன்பு


தவற விட்ட தொலைக்காட்சித் தொடர்



தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலம் அது. அழுது வடியும் ஷெனாய் பின்னணி இசையோடு “முன்ஷி ப்ரேம்சந்த் கி அமர் கஹானியான்” என்று ஹிந்தியில் ஒரு கனமான குரல் சொல்லும் போது உடனடியாக செய்கிற வேலை எழுந்து போய் தொலைக்காட்சியை அணைப்பதாகத்தான் இருக்கும். ஆமாம் அது ரிமோட் பயன்பாட்டிற்கு வராத காலம்.

நம் தமிழ் இசையமைப்பாளர்கள் சோகக் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி இருந்ததால் ஷெனாய் ஒரு அழுமூஞ்சி வாத்தியம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். குறும்பான கண்களோடு சிரித்து ரசித்து வாசிக்கும் பிஸ்மில்லாகானை ஒரு முறை கேட்ட பின்புதான் ஷெனாய் குறித்த கருத்து மாறியது.

அது போல முன்ஷி பிரேம்சந்த் கதைகள் பற்றி முன்பு தூர்தர்ஷன் உருவாக்கியிருந்த கருத்து அவரது சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில் படித்த போதுதான் மாறியது.  பல நல்ல கதைகளின் தொலைக்காட்சி வடிவத்தை தவற விட்டு விட்டோமே என்ற வருத்தமும் ஏற்பட்டது.

அந்த உணர்வைக் கொடுத்த நூலைப் பற்றியே இந்த பதிவு.

கடந்த நவம்பரில் நெல்லையில் எங்கள் சங்கத்தின் மாநில மகளிர் மாநாடு நெல்லையில் நடைபெற்ற போது வாங்கிய நூல் இது.  வாங்கிய கையோடு அன்றே பயணத்தில் படித்தும் முடித்து விட்ட நூல். ஆனால் நூல் பற்றி எழுதத்தான் நீண்ட நாட்களாகி விட்டது.

நூல்                                                :  மோட்சம்
ஆசிரியர்                                     : பிரேம்சந்த்
தமிழில்                                        : ச.வீரமணி
வெளியீடு                                    : பாரதி புத்தகாலயம்
                                                          சென்னை – 18
விலை                                            : ரூபாய் 40.00

110 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பில் உள்ளது ஐந்து சிறுகதைகள். அவை அனைத்துமே அன்றைய சமூக சூழலின் கண்ணாடியாக இருக்கிறது. சமூக அவலங்களை அம்பலப்படுத்துகிறது. மனிதர்களின் குணாம்சத்தை, போலித்தனத்தை தோலுரித்துக் காண்பிக்கிறது.

நோயுற்ற தன் குழந்தையை கடவுளின் காலடியில் கிடத்தினால் குணமாகி விடும் என்ற நம்பிக்கையோடு வருகின்ற ஒடுக்கப்பட்ட பெண் சுகியோவிற்கு பூசாரியாலும் பக்தர்களாலும் நேர்கிற இழிவும் இழப்புமே “கடவுள் இல்லம்” என்ற கதையில் விவரிக்கப்படுகிறது.

தன் மகனின் திருமணத்திற்கு நல்ல நேரம் குறித்துத் தரச் சொல்லும் வேண்டுகோளோடு அனைத்து தட்சணைப் பொருட்களோடும் பண்டிதர் வீட்டிற்கு செல்லும் துகி என்ற  ஒடுக்கப்பட்ட இனத்தைச்  சேர்ந்த தொழிலாளி ஒரு வாய் கஞ்சி கூட கொடுக்கப் படாமல் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக அத்தொழிலாளியின் சடலத்தை அப்பண்டிதர் இழுத்து வந்து தெருவில் வீசுகிற கதைதான் “மோட்சம்”

இருபதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு கொலைக் குற்றவாளியை விடுவிக்கிற நீதிபதி ராய் சாஹிப், இறக்கும் நிலையில் உள்ள மாடுகளுக்காக மாட்டுத்தீவணத்தை திருடும் தன் வீட்டு வேலைக்காரன் தாம்ரிக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனை அளித்து தன் நேர்மையை நிரூபிப்பதைச் சொல்கிறது “பண்பாளர் என்பவர் யார்?”

அனைத்துக் கதைகளையும் விளக்குவது என்பது நூலைப் படிக்கும் சுவாரஸ்யத்தை  குறைத்து விடும் என்பதால் அவற்றை தவிர்க்கிறேன். அந்த இரண்டு கதைகளும் இன்னும் சிறப்பு என்பதை மட்டும் சொல்லாமல் இருக்க முடியாது.

தன் முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை கேட்டு பிரேம்சந்த் சரத்சந்திரரை அணுகிய போது “ரவீந்திரநாத் தாகூரால் மட்டுமே இது போன்ற கதைகளை எழுத முடியும். அவர்தான் முன்னுரை எழுத முடியும். எனக்கு அந்த தகுதி கிடையாது” என்று மறுத்தாரென்றால் பிரேம்சந்தின் அருமையை உணர்ந்து கொள்ள முடியும்.

பெயர்களும் ஊர்களுமே இது மொழிபெயர்ப்பு நூல் என்று உணர்த்துகிறது. மற்றபடி நேரடியாக தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகள் என்ற உணர்வை அளிக்கும் வண்ணம் தமிழாக்கம் செய்துள்ள தோழர் ச.வீரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment