Thursday, November 29, 2018

Sorry கவர்னர் சார்!

பாஜகவிற்கு எதிரான ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையை ஆளுனர் கலைத்தார் என்று பதிவிட்டிருந்தேன்.

பாஜக அளித்த நிர்ப்பந்தத்தினை முறியடிக்கவே ஆளுனர் சட்டப்பேரவையை கலைத்தார் என்று இன்றைய தீக்கதிர் செய்தி கூறுகிறது.

இவ்வளவு நல்லவரா சார் நீங்கள்! 

தவறாக புரிந்து கொண்டமைக்கு வருந்துகிறேன்.

உங்களை பதவியிலிருந்து நிச்சயம் தூக்கி விடுவார்கள். அதற்கு வாழ்த்துக்கள்.





ஸ்ரீநகர், நவ.28-காஷ்மீர் சட்டப்பேரவையை கலைத்ததற்காக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்,அரசியல் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார்.இந்நிலையில், பாஜக தலைவர் சஜ்ஜத் லோனாவை முதல்வராக்குமாறு மத்திய அரசிடமிருந்து நெருக்கடி வந்ததாலேயே பேரவையைக் கலைத்தேன் என்று மாலிக் கூறியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு - காஷ்மீரில், மெகபூபாவின் மக்கள்ஜனநாயகக் கட்சியை உடைத்து, குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வந்தது. இதையறிந்த மெகபூபா, காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசை அமைக்க முடிவு செய்து, ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு கடிதம் அனுப்பினார். ஆனால், சட்டப்பேரவையையே கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டார். இது கண்டனத்திற்கு உள்ளானது. 

இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் பல்கலைக்கழகத்தில் பேசிய சத்யபால் மாலிக், காஷ்மீர் பாஜக தலைவர் சஜ்ஜத் லோனாவுக்கு, முதல்வராக பதவிப் பிரமாணம் செய்துவைக்குமாறு, மத்திய அரசு கூறியதாகவும் அதனை மறுத்துத்தான் பேரவையை கலைத்ததாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

“சஜ்ஜத் லோனேவை முதல்வராக்கியிருந்தால், நேர்மையற்ற மனிதராக வரலாற்றில் இடம்பெற்றிருப்பேன்” என்று கூறியஅவர், “ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப் பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துபடி, பேரவையைக் கலைப்பதற்கு முன்பு, குடியரசுத் தலைவரிடமோ, நாடாளுமன்றத்திடமோ, ஆளுநர் முன் அனுமதி பெற வேண்டியதில்லை” என்றும் அதிரடி காட்டினார்.

 இது தற்போது பாஜக தலைவர்களை அதிர்ச்சிக்கு உள் ளாக்கி இருக்கிறது.அதேநேரம், முன்பு ஆளுநரை விமர்சித்த மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் தற்போது ஆளுநரின் பேச்சுக்காக பாராட்டியுள்ளனர்.

“தில்லியில் இருந்து வரும் உத்தரவை ஆளுநர் பின்பற்ற மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. முன்னெப்போதும் இல்லாத இந்த நடவடிக்கை மாநிலத்தில் ஜனநாயகத்தைக் கொடுத்துள்ளது” என்று மெகபூபா கூறியுள்ளார்

.“குதிரை பேரம், பணம் ஆகியவற்றின் மூலம் பாஜக ஆட்சி உருவாக இருந்த நிலையில், அதைத் தடுத்து நிறுத்தியதற்காக ஆளுநருக்கு வாழ்த்துக்கள்” என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment