Thursday, November 29, 2018

ஸ்டெரிலைட் - அகர்வாலுக்காக அகர்வால்



அகர்வால் + மோடி + அகர்வால்

புதுதில்லி,நவ.28-ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்று தருண் அகர்வால் தலைமையிலான குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கின்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காவல்துறையினர் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பெரும் போராட்டம் எழுந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. 

மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சீராய்வு மனுவும் தள்ளுபடியானது. இதனிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமை யிலான குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் கருத்து கேட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு தரப்பினரிடம் மனுக்களையும் பெற்றனர். அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள மாநில பசுமைத் தீர்ப்பாயத்திலும் கூட்டம் நடத்தி, அரசியல்கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுவினரிடம் கருத்துக்களைப்பெற்றனர்.

இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை தனித்தனி யாக மூடி முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது. ஆலைக்கு உரிய முறையில் நோட்டீஸ் கொடுக்காமல் மூடப்பட்டுள்ளது . ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை முறையாக அகற்றுவ தோடு, 10 நாட்களுக்கு ஒருமுறை நிலத்தடி நீரை ஆய்வு செய்ய வேண்டும். ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கலாம்” என்று பரிந்துரைத் துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வறிக்கை யை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசு உரிய பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. தருண் அகர்வால் குழுவின் அறிக்கையால் தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இறுதி முடிவு அரசிடமே உள்ளது : அமைச்சர் கடம்பூர் ராஜூ

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாமல் இருப்பதற்கான அனைத்துநடவடிக்கைகளும் தமிழக அரசு சார்பில் எடுக்கப்படும். அகர்வால் குழு அறிக்கையில் என்ன கூறினாலும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் இறுதி முடிவு தமிழக அரசிடமே உள்ளது என்றார்.\\

நிரந்தரமாக மூட சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் இயற்றுக: சிபிஎம்

சென்னை, நவ. 28-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்கள், கால்நடைகள் மீதான ஸ்டெர்லைட் ஆலையின் பல்வேறு கடுமையான பாதிப்புகளின் காரணமாக ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவா க முன்னுக்கு வந்து, பல கட்ட போராட்டங்களும், காவல்துறையின் துப்பாக்கிச் சூடும் நடந்த பின்னணியில் தான் தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

சிபிஎம் மனு

ஆலை மூடல் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தை அணுகியது. இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் சார்பில் பொதுநலன் சார் தலையீட்டு மனு (ஐவேநசஎநniபே யீநவவைiடிn) போடப்பட்டு, அது அனுமதிக்கவும் பட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு நடந்திருக்கிறதா என்று ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து எவரும் இடம் பெறக்கூடாது என்ற ஸ்டெர்லைட்டின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது பெரும் நெருடலை ஏற்படுத்தியது. இருப்பினும், பொதுநலன்சார் தலையீட்டாளர் (iவேநசஎநநேச) என்ற முறையில் இந்த உத்தரவின் நகல் அர்ச்சுனனுக்கு அளிக்கப்பட்டதை ஏற்று, ஆய்வுக்குழுவிடம் எழுத்து மூலமான விரிவான அறிக்கை கொடுத்ததோடு பல்வேறு வாதங்களும் அர்ச்சுனன் சார்பில் வழக்கறிஞர்களால் எடுத்து வைக்கப்பட்டன. ஏராளமான மக்கள் ஆலை மூடலை ஆதரித்து மனுக்கள் கொடுத்தனர்.

மத்திய அமைச்சரே ஒப்புக் கொண்டார்

ஆலை மூடலுக்குப் பிறகு, ஜூலை 2018ல் நாடாளுமன்றத்தில் நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வத், ஸ்டெர்லைட் இருக்கும் சிப்காட் வளாகத்தில் நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட பல உலோகங்களின் இருப்பு தண்ணீரில் இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார்.

வரம்பை மீறிய ஆய்வுக்குழு

தற்போது, ஆய்வுக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது தவறு, மூடுவதற்கு உரிய காரணங்கள் இல்லை என்ற ரீதியில் முடிவுகள் இடம் பெற்றுள்ளன என்று தெரிகிறது. ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு, அது மக்கள் மீது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்வது தான் குழுவின் வரம்பு. ஆனால் ஆலையை மூடியது தவறு, உரிய காரணங்கள் இல்லை என்று குழு சொல்வது, வரம்பை மீறிய செயலாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் ஆட்சேபணையைத் தெரிவிக்கிறது.

யார் ‘அவசியமற்றவர்கள்’?

இந்த அறிக்கையின் நகலை வேதாந்தா குழுமம், தமிழக அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மட்டும் அளித்தால் போதும்; டிசம்பர் 7ம் தேதிக்குள் அவர்கள் தம் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதர பொதுநலன்சார்தலையீட்டாளர்கள் அவசியமற்றவர்கள்; எனவே அறிக்கையின் நகலை அவர்களுக்கு அனுப்பவேண்டிய அவசியமில்லை என்றும் பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளதாகத் தெரிகிறது. அவசியமில்லை என்றால் தலையீட்டு மனு தாக்கல் செய்த போதே கூறியிருக்க வேண்டும். மனுவை அட்மிட் செய்ததோடு, உத்தரவுகளின் நகல்கள் உட்பட தலையீட்டாளர் என்று குறிப்பிட்டு அனுப்பிவிட்டு, வழக்கு முடியும் தருவாயில், இவர்கள் அவசியமற்றவர்கள் என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? டிசம்பர் 10 தான் அடுத்த வாய்தா என்று இருந்ததை மாற்றி, ஸ்டெர்லைட்டின் கோரிக்கையை ஏற்று பசுமைத் தீர்ப்பாயம் உடனே கூடியதும், மேற்கூறிய உத்தரவுகளைப் பிறப்பித்ததும், ஆய்வுக்குழுவின்அறிக்கையின் சில தேர்வுக் செய்யப்பட்ட பகுதிகளை மட்டும்இணைய தளத்தில் ஏற்ற ஏற்பாடு செய்ததும் போன்ற நடவடிக்கைகள் ஆட்சேபணைக்குரிய நடவடிக்கைகளாகும்.

கார்ப்பரேட் ஆதரவு மோடி அரசின் துரோகம்!

வேதாந்தா நிறுவனத்தின் நன்கொடையாளர் பட்டியலில் மத்திய ஆளும் கட்சியான பாஜக இருப்பதும்; மத்திய மாசு கட்டுப்பாட்டுக் குழு தமிழகத்துக்கு வந்து - பூட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்குள் போக முடியாத போதும், ஸ்டெர்லைட் ஆலையால் மட்டுமே மாசுபடுகிறது என்று சொல்ல இயலாது என்று அறிக்கை கொடுத்ததும்; பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நியமனம், ஆய்வுக்குழுவின் தலைவர் தருண் அகர்வால் குறித்த விமர்சனங்களும் தீர்ப்பு ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாகவே இருக்கும் என்ற அறிகுறியை ஏற்படுத்தின. தற்போது அது நடந்திருக்கிறது. 

இது பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு அணுகுமுறை இழைக்கும் பெரும் துரோகம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டுகிறது.தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழுவின் அறிக்கைக்கு கடும் ஆட்சேபணை தெரிவித்து, அதை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்; உச்சநீதிமன்றத்தையும் அணுக வேண்டும்; சட்டமன்றத்தைக் கூட்டி ஆலை மூடலுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

பரிந்துரைப்பது அவர்கள் வேலை அல்ல...

துக்குடி, நவ. 28-சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், செய்தி யாளர்களிடம் கூறியதாவது:இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தமிழக அரசு 48 ஏ பிரிவின்கீழ் ஸ்டெர்லைட் ஆலை யை மூடியது. இப்போது வேதாந்தா குழுமத்துக்கு நீதிபதி அகர்வால் தலைமையிலான கமிட்டி ஊது குழலாக செயல்படுவது போல் தோன்றுகிறது. உண்மையில் ஆய்வுக்குழுவின் வேலை என்பது ஸ்டெர்லைட் ஆலை குறித்து மக்கள்கருத்துக்களை அறிந்து அறிக்கை யாக தாக்கல் செய்வது மட்டுமே. அதனை விட்டு, ஆலை இயங்கு வது குறித்து முடிவைக் கூறுவது அதன் வேலை அல்ல. 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினருக்கும் இடையே ஸ்டெர்லைட் ஆலை குறித்த ஒரு ஒருமித்த கருத்து உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தீர்மானித்து, அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். சரியான வழிமுறைகளை பின்பற்றி அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், சிஐடியு மாநில செயலாளர் ரசல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, மாநகர செயலாளர் தா. ராஜா, மாவட்ட குழு உறுப்பினர்கள் மாரியப்பன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து, வழக்கறிஞர் சுப்பு முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

நன்றி - தீக்கதிர் 29.11.2018

2 comments:

  1. தீக்கதிர்----> theeyakathir

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா ஹாஹா
      உங்க கட்சி பேரு ஞாபகம் இருக்குல்ல?
      பார(தீய) ஜனதா கட்சி

      Delete