Friday, November 2, 2018

நம்பிக்கையின் சிலை அல்ல, வீடுகள் . . .




ஓக்கி புயல் நினைவுக்கு வருகிறதா?

புயலால் நடுக்கடலில் தவித்த மீனவர்களை கண்டுகொள்ளாத எடப்பாடி அரசும், கைவிரித்த  நிர்மலா அம்மையாரின் கப்பற்படையும் நினைவுக்கு வருகிறதா?

பெரு வெள்ளத் நிவாரணப் பணிகளின் வேகத்தைப் போலவே புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை கப்பற்படையை விரட்டி விரட்டி வேலை வாங்கி மீட்ட பிணராயி அரசின் நடவடிக்கைகளும் நினைவுக்கு வந்திருக்குமே!

தலியுத்தரா, சேரியத்துரா, வலியத் தோப்பு, கொச்சுத்தோப்பு என்ற திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள நான்கு மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களின் வீடுகள் புயலில் பாதிக்கப்படுகின்றன.  பாதிக்கப்பட்ட 192 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதலமைச்சர் தோழர் பிணராயி விஜயன் உறுதி அளிக்கிறார்.

பதினைந்து லட்சம் ரூபாய் ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வாக்குகளைப் பெற்று விட்டு அதெல்லாம் ஜும்லா என்று கைவிரித்த மோடியைப் போன்றவரா விஜயன்? 

அவர் ஒரு கம்யூனிஸ்ட்.

அதனால் சொன்னதைச் செய்தார்.



முட்டுத்தரா என்ற இடத்தில் 5 ஏக்கர் நிலத்தில் 192 வீடுகள் கேரள அரசால் கட்டப்பட்டது.  சும்மா பெயரளவு வீடுகள் கிடையாது. ஒவ்வொரு வீடும் இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட வீடுகள். தரமான முறையில் கட்டப்பட்ட வீடுகள் என்று பயனாளிகள் புகழ்கிறார்கள்.

192 வீடுகள் கட்ட செலவானது 20 கோடி ரூபாய். கூட்டுறவு சொஸைட்டி மூலம் கட்டப்பட்டதால் காண்ட்ராக்டர்  அடிக்கும் கொள்ளை, ஆட்சியாளர்களுக்கு போக வேண்டிய கமிஷன் என்று தமிழகக் கலாச்சாரங்கள் ஏதுமில்லாததன் பயன் இது.

72 கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்க வயிற்றெரிச்சலோடு இருக்கையில்  மூவாயிரம் கோடி ரூபாய் படேல் சிலை பெருத்த ஆரவாரத்தோடு திறக்கப்பட்ட அதே நாளில்தான் இந்த வீடுகளும் அமைதியான முறையில் திறப்பு விழா கண்டது. 

இந்த வீடுகளுக்கு பிரதீக்சா என்று பெயர் வைத்துள்ளார்கள். நம்பிக்கை என்பது அதன் அர்த்தமாம்.

ஆம் கேரள மாநில இடது முன்னணி அரசே நம்பிக்கையின் அடையாளம்தானே!

தோழர் பிணராயி விஜயன் – கேரளத்திற்கான நம்பிக்கை மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கும்தான் . . .

2 comments:

  1. விஜயன், விஜயன்தான். அவரை பிரதமராக முன்னிறுத்தினால் நாட்டிற்கு நல்லது. வெற்றியும் கிடைக்கும். ஆனால் உங்கள் கட்சி சொதப்பி விடும்

    ReplyDelete
  2. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பயணத்தில் தேர்தல் ஒரு பகுதி. அது மட்டுமே அல்ல. ஆனாலும் தோழர் பிணராயி விஜயனை பிரதமராக முன்னிறுத்த வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி

    ReplyDelete