Wednesday, May 30, 2018

என்ன தைரியம் இருந்தா அந்த கொடியை?



ஸ்டெரிலைட் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக கொல்கத்தா பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை நிறுத்தி வைத்திருந்தேன். இப்போது அதனை தொடரலாம் என்று உள்ளேன்.

எங்கள் விருந்தினர் இல்லத்துக்கு அருகில்தான் ஈடன் கார்டன் மைதானம் உள்ளது.  நான் அங்கே இருந்த நாள் ஒன்றில்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே  ஒரு போட்டி இருந்தது.

அன்று மாலை ஏழு மணி அளவில் ஈடன் கார்டன் மைதானத்துக்குச் செல்லும் சாலை வழியாக நான் எங்கள் விருந்தினர் இல்லத்திற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தேன். கூட்டம் கூட்டமாக மைதானத்தை நோக்கி ரசிகர்கள் சென்று கொண்டிருக்க எதிர் திசையில் நடந்து செல்வதே சிரமமாக இருந்தது.

பல சாலையோர வியாபாரிகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கொடியையும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கொடியையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். விறுவிறுப்பாகவே வணிகம் நடந்து கொண்டிருந்தது. ஒரு இளைஞர் கூட்டத்திடம் ஒரு வியாபாரி, மும்பை இந்தியன்ஸ் அணி கொடியை  வேண்டுமா என்று கேட்க அவர்களுக்கு கோபம் வந்து விட்டது.

அந்த வியாபாரியிடம் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள். நான் புரிந்து கொண்ட வரை அவர்கள் கேட்டது

“எங்கே வந்து எந்த கொடியை விற்கிறாய்?  கொல்கத்தாகாரனிடம் மும்பை கொடியை வாங்கச் சொல்வதற்கு உனக்கு எவ்வளவு தைரியம்?”

அடிதடி என்று முற்றுவதற்கு முன்பாக மற்ற வியாபாரிகள் வந்து விலக்கி விட்டார்கள்.

அந்த இளைஞர்களை நினைத்தால் பாவமாக இருந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்ற அணி

கொல்கத்தா நகரத்தின் அணியும் கிடையாது,
மேற்கு வங்க மாநிலத்தின் அணியும் கிடையாது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தார்களா என்ற விபரம் எனக்கு தெரியாது.

அது ஷாருக்கானின் அணி.

அது போல மும்பை இந்தியன்ஸ் அணி முகேஷ்  அம்பானியின் அணி.

முதலாளிகளின் அணிக்காக நீங்கள் ஏனப்பா தேவையே இல்லாமல் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

பின் குறிப்பு

மேலே உள்ள படம், எங்கள் விருந்தினர் இல்லத்திலிருந்து ஈடன் கார்டன் மைதானத்தை எடுத்த படம். ஒளி விளக்குகள் மட்டும்தான் தெரிகிறது.


1 comment:

  1. நான் முந்தைய பதிவில் போட் ட கமெண்ட் காணோம்
    பயமா ...........................

    ReplyDelete