Monday, April 9, 2018

இலக்கு முடிந்தது. இனியும் தொடரும் . . .


எனக்கு நானே நிர்ணயித்துக் கொண்ட "அறுபது முறை ரத்த தானம்" என்ற இலக்கு இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. இலக்கு முடிந்தாலும் உடல் நலன் வரை அனுமதிக்கிற வரை இப்பணியை நிச்சயம் தொடர்வேன். என்ன புதிதாக இலக்கு எதையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை!

முதல் முறை என்னை ரத்த தானம் செய்ய அழைத்துப் போன எங்கள் வேலூர் கோட்டச் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். 

அறுபது முறையும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில்தான் ரத்த தானம் செய்துள்ளேன்.  இந்திய வரலாற்றின் கறுப்பு நாளான டிசம்பர் 6, 1992 ம் நாளன்றுதான் முதல் முறை ரத்த தானம் செய்தேன். 

இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் ரத்த வங்கியில் எத்தனையோ ஊழியர்கள் மாறியுள்ளார்கள். ஆனால் மாறாமல் இருப்பது  அவர்களின் கனிவுதான் என்பதை இங்கே பதிவு செய்வது மிகவும் அவசியமாகும்.

முதல் முறை ரத்த தானம் செய்து விட்டு வீட்டுக்கு வருகையில்  அதன் நினைவாக திரு கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் கர்னாடக சங்கீத கேஸட் ஒன்று வாங்கி வந்தேன். இப்போது டேப் ரிகார்டரும் காஸெட்டுக்களும் பரணுக்கு போய் விட்டது. பாரதி புத்தகாலயம் திறந்திருந்தால் ஒரு புதிய புத்தகம் ஒன்று வாங்கி வர வேண்டும்.

ரத்த வங்கியிலிருந்து வெளி வருகையில் ஒரு மன நிறைவு இருந்தது.

வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் உருப்படியாக ஏதாவது செய்துள்ளோமா என்று திரும்பிப் பார்க்கையில் அப்படி சொல்வதற்கு நம்மிடமும் ஒன்று உள்ளது என்ற நிறைவுதான் அது. 

1 comment: