Sunday, April 15, 2018

பொட்டு வைத்தால் பென்ஷன் கிடையாதாம். . .



அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கான பென்ஷன் திட்டங்களில் பென்ஷன் பெறும் ஓய்வூதியர் இறந்து போனால் அவரது துணைவி அல்லது துணைவருக்கு குடும்ப பென்ஷன் வழங்கப்படும். 

தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்று ஒவ்வொரு ஆண்டும் பென்ஷனர்கள் அளிக்கிற சான்றிதழோடு இந்த குடும்ப பென்ஷனர்கள் "தாங்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை" என்ற சான்றிதழும் அளிக்க வேண்டும். இப்படி ஒரு விதியே கொடுமையாகத்தான்  தோன்றும். அதுவும் எழுபது, எண்பது வயது பெண்களும் கொடுப்பதும் அதற்கு நாம் சாட்சிக் கையெழுத்திடுவதும் அபத்தமாக இருக்கும். 

ஆனால் போர்ட் ட்ரஸ்ட் நிறுவனத்தில் நிகழ்ந்தது வேறு ஒரு கொடுமை!

துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பென்ஷன் பெறும் 82 வயது ஓய்வூதியர் ஒருவர் இறந்து போய் விட்டார். அவருக்கான குடும்ப பென்ஷனை பெற 75 வயதான அவரது மனைவி விண்ணப்பம் அளிக்கையில் விண்ணப்பத்தில் இணைக்கப்பட்ட புகைப்படத்தில் பொட்டு வைத்திருந்ததால் அதனை ஏற்க அந்த பென்ஷன் அதிகாரி மறுத்துள்ளார்.

கணவனை இழந்தவர்கள் பொட்டோ, பூவோ வைத்திருக்க மாட்டார்கள். எனவே பொட்டு இல்லாமல் விபூதி வைத்துள்ள இன்னொரு புகைப்படத்தோடு வந்தால்தான் பென்ஷன் என்று கறாராக பேசியிருக்கிறார். 

கணவனை இழந்தவர்கள் பொட்டு, பூ, தாலி போன்ற அடையாளங்களை அகற்ற வேண்டிய அவசியமில்லை என்ற நிலை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வருகிறது.

அந்த பெண்மணியின் உறவுகள் கூட சொல்லத் துணியாத ஒன்றை பென்ஷனை சேங்ஷன் செய்யும் அதிகாரம் உள்ளதால் ஒரு பிற்போக்குப் பேர்வழி சொல்லியுள்ளான். அவனுக்கு மேலே உள்ள அதிகாரிகளும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்றே சொல்லியுள்ளார்கள்.

குடும்ப பென்ஷன் பெறுவதற்கு ஓய்வூதியரின் இறப்புச் சான்றிதழும்  வாரிசு என்று நியமித்திருந்தால் அது மட்டுமே போதுமானது.

அதை விடுத்து இப்படி பிற்போக்குத்தனமாக நடந்து கொண்ட அந்த அதிகாரி மீது போர்ட் ட்ரஸ்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இவ்விஷயத்தில் தலையிடும் என முக நூலில் அமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் உ.வாசுகி உறுதியளித்துள்ளார்.

அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை இப்படிப்பட்ட பிற்போக்குவாதிகளுக்கு தக்க பாடமாக அமையும். 

இறுதியாக ஒன்று சொல்லிட வேண்டும்.

இப்படிப்பட்ட பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக மீண்டும் பெரியார் இங்கே வேண்டும்.


No comments:

Post a Comment