Sunday, April 15, 2018

திரைப்படங்களில் திருநங்கைகள்

தமிழ்த்திரைப்படங்களில் திருநங்கைகள் எப்படி காட்சிப்படுத்தப்பட்டனர் என்பதை
திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடி வருகிற செல்வி பிரியா பாபு முக நூலில் நான்கு பாகங்களாக வேதனையோடு பதிவு செய்திருந்தார். 

அதில் முதல் இரண்டு பதிவுகளை இங்கே
பகிர்ந்து கொள்கிறேன்.

நாளை மீதமுள்ள பதிவுகள்






Priya Babu
தமிழ் சினிமாவில் திருநங்கைகள்...


தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழாவிற்காக நான் எழுதிய கட்டுரையின் 4 பாகத்தில் நட்புக்களுக்காக பாகம் - 1


தனிமனித வாழ்விலும், பொதுச் சமூக கலாச்சார, பண்பாட்டு அசைவுகளிலும் ஊடகத்தின் தாக்கத்தை மறுப்பதற்கில்லை. உணவு, உடை, பழக்கவழக்கங்கள் முதல் மொழியாள்கை வரை ஊடகத்தின் குறிப்பாக சினிமாவின் ஆதிக்கம் மிக அதிகம். 
காதலுக்கு புது இலக்கணம், புது மொழி,புதிய வரையறைகள் , காதலை வெளிப்படுத்த அவ்வப்போது புதுப் புது யுத்திகள் என இளைய சமூகத்திற்க்கான தன் பங்களிப்பை ஈட்டி காதலை பிஞ்சி மனத்திலும் ஆழமாய் விதைத்தது.


நிழல்களின் பிம்பங்கள் நிஜங்களின் உருவமாக பார்க்கப்பட்ட சினிமாவால் இந்தியாவில் குறிப்பாக தென்னக மாநிலங்களில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. சினிமா காட்டும் அத்தனையும் உண்மை , சினிமா நம் வாழ்க்கைக்கு மிக அருகாமை தான் என ஆணித்தரமாக நம்பிய அப்பாவி மனங்கள் தான் இந்த மாற்றத்திற்கான காரணியாக அமைந்தது.

சில நிஜங்களை, சமூக அவலங்களை அதன் உண்மைத் தன்மையோடு அவ்வப்போது காட்சிப்படுத்தி தன் சமூக அக்கறையை வெளிக்காட்டிக் கொள்ள தவறவேயிலை சினிமா. தண்ணீர் தண்ணீர் எனவும் ,வேதம் புதிது,சிகப்பு மல்லி எனவும் அதன் பெயர்கள் நிகழ்கால தேவைகளை உணர்ந்த பெயர்களைக் கொண்டவைகளாகவே அவைகளின் பெயர்கள் கூட இருந்தன. இயந்திரம் கூட காதலிக்கும் என்பதை அறிவியலின் அற்புத கண்டுப்பிடிப்பு என காட்டி வியக்க வைத்து அதனை வெகுஜனங்கள் மனதாலேயே ஒப்புக்கொள்ள வைத்ததில் தான் சினிமாவின் வெற்றிக்கான யுக்தி அடங்கியிருந்தது.ஒரு பக்கம் சாதியின், மதத்தின் பெருமைகளை பேசிக் கொண்டே இன்னொரு பக்கம் அலைகள் ஒய்வதில்லை எனவும் வேதம் புதிதாகவும் சாதியின் மதத்தின் மற்றொரு முகத்தையும் காட்டத் தவறவில்லை.

சிவன் ,பார்வதி பிரம்ம விஷ்ணு, முருகன்,பிள்ளையார்,இயேசுபிரான், என பல மதக் கடவுகள்களை படைத்ததுடன் , ராஜராஜ சோழன், கரிகாலச் சோழன், வீரபாண்டிய கட்டபொம்மனை, நக்கீரனை, மருது சகோதரர்களை,வெள்ளையம்மாளை , மதுரை வீரனை நமக்காக உருவகப்படுத்தியது இந்த சினிமாதான் வ.உ.சிதம்பரநாரை, பாரதியை ,ஏன் காந்தியின் வாழ்வியலைக் கூட சினிமாதான் நமக்கு சொல்லிக் கொடுத்தது.

இப்படியாக பல்வேறு வரலாறுகளை, நிகழ்வுகளை,யதார்த்த வாழ்வியலை மாபெரும் மனிதர்களை காட்சிப்படுத்திய இந்த சினிமா, சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களாக இன்றும் பார்க்கப்படுகின்ற திருநங்கைகளை எவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளது என்பது மிக கவனிக்கத்தக்கது.

உடலால் வேறாகப் பிறந்து உணர்வால் வேறாக உணர்ந்து அந்த உணர்வையே தன் வாழ்வியலாக உள்வாங்கிக் கொண்டு தன்னை பெண்ணாகவே செதுக்கிக் கொண்ட திருநங்கைகளை தன் கற்பனைக்கேற்ப வளைத்தும், இழுத்தும் , ஒடித்தும் பல்வேறு வகையிலான பாத்திரங்களாக சமூகத்தின் கண்களுக்கு காட்சிப்படுத்தியது சினிமா. இவைகளில் பெரும்பான்மையிலானவைகள் நகைப்புகளுக்கு மட்டுமே தீனி இட்டன.

“கொக்கரகோழி கூவுற வேல
ராசாதி ராசா வாராண்டி பெண்ணே”

என்ற ஒருதலை ராகம் படத்தில் வரும் பாடல் மோசமான நடன அசைவுகளுடனும் , ஒவ்வாத ஒப்பனையுடனும் திருநங்கைகளை பொதுச் சமூகத்திற்க்கு அடையாளம் காட்டியது. வெகு காலத்திற்கு முன்பே இந்த இழிநிலை ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம். மறைந்த நடிகர் சுருளிராஜன் அவர்கள் சில படங்களில திருநங்கையாக வேடமிட்டு அஷ்ட கோணல்களை செய்திருப்பார். கலர் கலரான லுங்கியில் வளைந்து நெளிந்து அவர் ஆண்களை கண்டால் சிணுங்குவது, தேவையில்லாம உடலை ஆட்டி ஆட்டி நடப்பது என்பவை பொய்மையின் ஆதிக்கம் நிறைந்தவை.


1980 இயக்குனர் திரு.துரை அவர்களின் இயக்கத்தில் ஜெயசித்திரா, விஜயகுமார் நடித்த “பெண்ணுக்கு யார் காவல்”என்ற திரைப்படத்தில் சுருளிராஜன் மற்றும் அவர் கோஷ்டியினர் 

“சொல்ல வெக்கமா... இருக்கு சொக்கமா...
நைசா நைசா... என்னை கிள்ளித்தான்”

என்ற பாடலின் வரிகள், நடன அசைவுகள் உடைகள் , அபிநயங்கள் எல்லாம் திருநங்கைன்னா இப்படித்தான் இருப்பாங்க, அவர்களின் உடல்மொழியே இப்படித்தான் இருக்கும் என காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அத்துடன் மிக கவர்ச்சியான உடைகள். விரகதாபம் கொண்ட அசைவுகள் என திருநங்கைகள் எல்லாரும் இதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்ற தோற்ற மாயையை உருவாக்கி விட்டிருந்தது. நிஜத்திற்கும் நிழலிற்குமான பல்லாயிரம் காதா இடைவெளியை இப்படம் எற்ப்படுத்தியிருந்தது.கல்வி வலிமையும், சமூக பாதுகாப்பு வலிமையும் இல்லாத அந்தக் காலச் சூழலில் இதனை கண்டிப்பதற்கான ஆதரவின்மையால் மௌனமாக கடந்து விடத்தான் முடிந்தது திருநங்கைகளால்.


1985ல் கே.ரங்கராஜ் இயக்கத்தில் மோகன் , ரேவதி , லெட்சுமி நடித்து வெற்றிப்பெற்ற திரைப்படமான “உதயகீதம்” திரைப்படத்தில் இடம்பெற்ற

“மானே தேனே கட்டிப்பிடி
மாம தோல கட்டிக்கடி “
பாடலின் இடையிடையே அஷ்டகோணலுடன் வெறும் கைத்தட்டி ஆட மட்டும் திருநங்கைகளை பயன்படுத்தியிருப்பார் இயக்குனர்.


1993ல் வெளிவந்த சரத்குமார் நாயனாக நடித்திருந்த “கட்டபொம்மன்” திரைப்படத்தில் மில் வேலைக்கு ஆள் எடுக்கும் பணி நடந்துக் கொண்டிருக்கு போது ஒரு திருநங்கையும் தனக்கும் மில் வேலை வேண்டும் என கோரிக்கை வைப்பார். அதற்க்கு கவுண்டமணி “நீங்க செஞ்சிட்டா...லும்” என இழிவுப்படுத்தும் காட்சி திருநங்கையர் எந்த வேலையும் செய்யும் திறமைகளற்றவர்கள் என சொல்லாமல் சொல்லிப் போனது. இது அவ்வளவு எளிதாக கடந்து விட முடிவதில்லை. தன் கனவிற்காக ஏங்கும் திருநங்கைளுக்கு கதவடைக்கு சமூகத்தின் இன்னொமொரு முகமாகத்தான் இக் காட்சி வடிவமைக்கப்படிருக்கிறது. ஆனால் இக்காட்சியில் ஒவ்வாத உடையுடனும் , காமம் ததும்பிய குரலுடனும் திருநங்கையை காட்சிப்படுத்தியது தான் சினிமா பண்பாடாக இருந்தது.

சில மாற்றுச் சிந்தனை ,சமூகம் நோக்கம் கொண்ட இயக்குனர்களால் இச் சமூகத்தின் வாழ்வியலை திரையில் வடித்திட முடிந்தது . 1995ல் வெளி வந்த பாம்பாய் திரைப்படத்தில் கலவர பூமியில் கலகக்காரர்களிடம் உயிரின் மதிப்பு குறித்து மிக ஆவேசமாக ஒரு திருநங்கையின் வாதம் ,திருநங்கைகளின் துணிச்சலை அப்பட்டமாக காட்டியது எனலாம் . அதே கலவர பூமியில் காணாமல் போன குழந்தையை காப்பாற்றி பசியாற்றி தன் தாய்மையை வெளிப்படுத்திய விதம் , திருநங்கைகளுக்குள்ளான அன்னை மனதை அழுத்தமாக தமிழ் சினிமாவில் பதித்த காலம் எனலாம்.

ஆனால் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த “அப்பு” திரைப்படம் பிரகாஷ் அவர்களை மகாராணி என்ற பெயரில் திருநங்கை என்று சொல்லி மிக மிக அபத்தமான ஒப்பனை, செய்கைகளுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது. திருநங்கைகள், அவர்களின் உடல்மொழி, எண்ணங்கள் ஏக்கங்கள் உணராமல் வெறும் காசை மட்டுமே பிரதானமாக கொண்டு தங்கள் எண்ணத்திற்கேற்ப இச் சமூகத்தினை வடிவமைத்துக் கொள்கின்றனர். அதனை உண்மை என சமூகத்தின் முன் நிலை நிறுத்த முயல்கின்றனர்.

ஆனால் முதல் முதல் முறையாக அப்பு படத்திற்கு ஏதிரான திருநங்கைகள் குரல் ஒங்கி ஒலிக்க துவங்கியது. இந்த கடும் பயணத்தில் தமிழில் முதல் திருநங்கைகள் நாவலான “வாடாமல்லி” எழுதிய மறைந்த எழுத்தாளர் சு.சமூத்திரம் அவர்களின் பங்கு மறக்க முடியாது.

திருநங்கைகளை, அவர்களின் உணர்வுகளை மிக மிக கேவலமாக , அவர்கள் நோக்கம் காமம் மட்டுமே என தமிழ் சமூகத்திற்கு பதிய வைக்க முயன்றது “ஈரமான ரோஜாவே “என்றத் திரைப்படம், இப்படத்தில் நகைச்சுவை என்ற பெயரில் திரையரங்கிற்கு படம் பார்க்க வரும் பெண்களுக்கு பதிலாக திருநங்கைகளை ஒவ்வோரு ஆண்களுக்கும் நடுவில் அமர வைத்து அந்த திருநங்கைகள் பக்கத்தில் அமர்ந்துள்ள ஆண்களை தங்கள் காம வேட்கைக்கு வலுக்கட்டாயப்படுத்துவதாக காட்சி அமைக்கப்படிருக்கும். 

இந்த காட்சியை வெகுஜனங்களுடன் அமர்ந்து காணும் திருநங்கைகளின் மன வலியைச் சொல்லித் யாரும் அறிய வேண்டியதில்லை. திருநங்கையாய் மாறிப் போனவர்களின் குடும்பத்தாருக்கு இத்தகைய காட்சிகள் எவ்வளவு பாதிப்பை ஏற்ப்படுத்தியிருக்கும் என்பதையும் எவருக்கும் உணர்த்த வேண்டியதில்லை.


மிக மிக பிரபலாமான பாடலாக தமிழகத்தின் பட்டித் தொட்டிகளிலேள்ளாம் ஒலித்த “நாக்கு முக்கா நாக்கு முக்க” பாடல் 

விஜயகாந்த் மற்றும் ராதா நடித்த “அம்மன் கோயில் கிழக்காலே” படத்தில் 

“மூணு முடிச்சாலே முத்தால..
கேளு கேளு தங்கம் .” என்றப் பாடல்

துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் வரும் 

இன்னிசை பாடிவரும் இசை காற்றுக்கு உருவமில்லை” என்ற பாடல் 

ஜெயம் ரவி மற்றும் சதா நடித்த ஜெயம் படத்தில் இடம் பெற்ற 
“திருவிழான்னு வந்த இவ கோயில் வரமாட்ட “ பாடல்

உள்ளிட்ட பலப் பிரபலமான பாடல்களின் இடையிடையே அதீத ஒப்பனை, காம ஏக்கம் நிறைந்த பார்வை, கிளுகிளுப்பான சிணுங்கல்கள் என திருநங்கைகள் சமூகத்தினை எத்தனை இழிவுப் படுத்த முடியுமோ அத்தனை இழிவுப் படுத்தியிருப்பர்கள் இயக்குனர்கள். இந்த காட்சியமைப்புகள் எல்லாம் அறியாமை, புரிதலின்மை என ஒதுக்கிவிட முடியாது. காட்சியமைப்பு என் சுகந்திரம் என்ற அகங்காரமும் , இவர்களை கேலி செய்தால் யார் கேட்பார்கள் என்ற மமதையும் காரணமாகும் . 

ஆனால் ஏற்கனவே ஒடுக்கப்பட்டு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிக்கும் திருநங்கைகள் மனம் இந்த காட்சிகளால் என்னவெல்லாம் புண் பட்டிருக்கும் என்ற குற்ற உணர்வு சிறிதுமின்றித் தான் இவைகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன என்பதே நிதர்சனம்.

No comments:

Post a Comment