Sunday, April 9, 2017

திசை மாறிய 8 தோட்டாக்கள்




எட்டு தோட்டாக்கள் - இன்று பார்த்த படம்

புது ஆட்களின் படம், ஆனால் நன்றாக இருக்கிறதாம் என்று மகன் சொல்லி போன படம்.

துவக்கம் என்னமோ நன்றாகத்தான் இருந்தது. சப் இன்ஸ்பெக்டர் கோட்டை விட்ட துப்பாக்கியைத் தேடும் பரபரப்பான தருணங்கள். அந்த துப்பாக்கி மூலம் நிகழும் வங்கிக் கொள்ளை, ஒரு குழந்தையின் கொலை என்று டாப் கியரில்தான் செல்கிறது. 

குற்றவாளியும் போலீசும் எதிர்பாராமல் சந்திக்கும் தருணத்திற்குப் பிறகு இன்னும் வேகம் எடுக்க வேண்டும். ஆனால் இருவரும் ஹோட்டலில் பேசும் அந்த நீநீநீண்ண்ண்ட காட்சியில் சலிப்பு வந்து விடுகிறது. கொஞ்சம் போரடித்ததால் நெட்டை ஆன் செய்து போனை நோண்டிக் கொண்டே அக்கம் பக்கம் பார்த்தால் பெரும்பாலானவர்கள் அது போலவே.

தேவையற்ற இடங்களில் திணிக்கப்படும் பாட்டுக்களும் எரிச்சலையே தந்தது.

படத்தின் பலம் என்று பார்த்தால் எம்.எஸ்.பாஸ்கரின் அற்புதமான நடிப்பு. மனுஷன் நிஜமாகவே கலக்கி விட்டார். ஆனால் வங்கிக் கொள்ளைக்கு சொல்லும் காரணம்தான் அவ்வளவு வலுவாக இல்லை. நாசரின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அவர் நடிக்காவிட்டால்தான் அது செய்தி. 

கதைக் களன் நன்றாக இருந்தாலும் அதன் முக்கிய பலவீனம் கதாநாயகனும் கதாநாயகியும். 

எந்த வித முகபாவமும் இல்லாத நாயகனைப் பார்க்கையில் கதைப் படி வர வேண்டிய பரிதாப உணர்வே வர மறுக்கிறது. 

எட்டு தோட்டாக்கள் என்று பெயர் வைத்து விட்டதால் தேவையே இல்லாமல் சில கொலைகள்.

பின் குறிப்பு : காற்று வெளியிடை பார்க்கவில்லையா என்று யாரும் கேட்காதீர்கள். ரோஜாவிலேயே ஒரு தலைப்பட்சமாக எடுத்திருப்பார். பம்பாய் படத்தில் அவரின் அவசியமற்ற சமரசங்கள் பார்த்து நொந்து போய் அவரது படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. மொகபா வின் பதிவுகள் நீக்கப்படும்

      Delete