Saturday, April 22, 2017

அறிமுகத்துக்கே ஓர் அறிமுகம்



உலக புத்தக நாளை ஒட்டிய நூல் அறிமுகத்தில் முதல் அறிமுகமாக எங்கள் மதுரைக் கோட்ட தோழரும் முன்னணி எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான தோழர் ச.சுப்பாராவ் எழுதிய “இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள்” இந்த நூலோடு துவக்குவது மிகவும் பொருத்தமானது என்பதை நீங்களும் நிச்சயம் உணர்வீர்கள்.



நூல்            “இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள்?”
ஆசிரியர்         ச.சுப்பாராவ்
வெளியீடு        பாரதி புத்தகாலயம்
                 சென்னை - 18
விலை           ரூபாய் 70.00

வாசிப்பை நேசிப்போம் என்று நூலை எழுதிய தோழர் சுப்பாராவ், தனது வாசிப்பனுபவத்தை நம்முள் கடத்துகிற நூல் இது. ஆங்கில எழுத்தாளர்கள் பலரையும் அவர்களது படைப்புக்களையும் நமக்கு அறிமுகம் செய்துள்ள நூல் இது.

நோபல் பரிசுகள் வழங்கப்படுவதில் உள்ள அரசியல் குறித்த இர்விங் வாலஸின் “தி பிரைஸ்” நாவல் எழுதப்படுவதற்கான கரு எப்படி வந்தது என்பதைச் சொல்லும் முதல் கட்டுரை தொடங்கி ஒவ்வொரு கட்டுரையும் சிறப்பு.

கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு எதிர்பாராத நிகழ்வினால் அமெரிக்க ஜனாதிபதியாகும் சூழ்ல் ஏற்பட்டால் எப்படிப்பட்ட சிக்கல்கள் உருவாகும் என்பதைச் சொல்லும் “தி மேன்” நாவலை எழுத வெள்ளை மாளிகையில் இர்விங் வாலஸ் செலவழித்த பொழுதுகளைச் சொல்லும் கட்டுரை, தான் சார்ந்த மருத்துவத்துறையின் மோசடிகளை எழுதிய ராபின் குக், ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதைகளை எழுதிய ஆர்தர் கானன்டெயில் பற்றிய கட்டுரைகள் சுவாரஸ்யத்தை தூண்டுகிறது.

“தி டே ஆப் தி ஜேக்கல்” என்ற புகழ் பெற்ற நாவலை எழுதிய ப்ரெட்ரிக் போர்சித் எழுதிய “தி டாக்ஸ் ஆப் வார்” என்ற நாவலைப் பற்றிய கட்டுரை பன்னாட்டு நிறுவனங்களை அம்பலப்படுத்துகிறது. கூலிப்படை மூலமாக ஒரு சின்ன நாட்டின் அரசாங்கத்தை வீழ்த்தி தனக்கு சாதகமான ஒரு பொம்மை அரசை உருவாக்க நினைக்கும் முயற்சி கதையில் வேறு எதிர்பாராத முடிவை தருகிறது. இக்கதையைப் போலவே ஈக்வடோரியல் கயானா என்ற நாட்டின் அரசை கூலிப்படை மூலமாக வீழ்த்த ஒரு பன்னாட்டு நிறுவனம் செய்கிற முயற்சி தோற்றுப் போகிறது. இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஏற்பாடு செய்த பிரபலம் யார் என்பதை கடைசியில் பார்க்கலாம்.

உலக வரலாற்றை  சாதாரண மக்களின் பார்வையில் எழுதிய  கென் பாலேட், சிறந்த நாவல்களை எழுதினாலும் தனி மனித வாழ்க்கையில் மோசமான மனிதராக விளங்கிய ஜெப்ரி ஆர்ச்சர், தி அகனி அன்ட் எக்டசி நாவல் மூலம் மைக்கேல் ஆஞ்சல்லோ வாழ்வை எழுதிய இர்விங் ஸ்டோன் என்று நூலாசிரியர்களின் பட்டியலும் நூல்களின் பட்டியலும் விரிகிறது.

இஸ்ரேலைப் போற்றியும் பாலஸ்தீனியர்களைத் தூற்றியும் இஸ்ரேல் அரசு பணம் கொடுத்துத்தான் எழுதப்பட்டது லியான் யூரிஸ் கைவண்ணத்தில் வெளிவந்த “தி எக்ஸோடஸ் நாவல் என்ற கட்டுரை அதிர்ச்சியளிக்கிறது. வாடகை எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரையும் கூட அதிர்ச்சி ரகமே. 

இன்னும் ஏராளமான நூல்களையும் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள நூலை வாங்கிப் படியுங்கள்.

ஆங்கில புனைவு உலகத்துக்குள் சென்று வந்த நிறைவு இந்நூலை படித்தாலே உருவாகிறது. பாராட்டுக்கள் தோழர் சுப்பாராவ். பொறாமையும் கூட.   

சொல்ல மறந்து விட்டேனே. கூலிப்படை மூலம் ஈக்வடோரியல் கயானா நாட்டு ஆட்சியை கவிழ்க்க முயன்ற பிரபலம் யார் தெரியுமா? இங்கிலாந்தின் சக்தி மிக்க பிரதமராக இருந்த மார்க்கரெட் தாட்சரின் மகன் சர் மார்க் தாட்சர்.

1 comment:


  1. வாசிக்கத் தூண்டும் அறிமுகம்

    ReplyDelete