Tuesday, April 25, 2017

அந்த நாளில் வந்ததால் . . . .23.04.2017 தேதியிட்ட வண்ணக்கதிரில் பிரசுரமான எனது சிறுகதை. உலக புத்தக தினத்தில் வெளியானது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. பொருத்தமான ஓவியத்தை உருவாக்கிய தோழர் ஸ்ரீரசாவிற்கு நன்றி சொல்லி பகிர்ந்து கொள்கிறேன்.


பாயசம்


வேலூர் சுரா

உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த முனியப்பனுக்கு வாசல் கதவை யாரோ தட்டுவது உடனடியாகக் கேட்டது. இந்த அதிகாலையில் யார் வந்திருப்பது என்ற மனதின் கேள்வியோடு விளக்கின் ஸ்விட்சைப் போட்டு பூட்டைத் திறக்க சாவியை கையிலெடுக்க, “கதவைத் தட்டும் ஒலியோடு “முனியப்பா, முனியப்பா” என்ற குரலின் அழைப்பும் இணைந்தது.

அந்த குரல் முனியப்பனின் மூத்த சகோதரன் முனுசாமியுடையது. யாருக்காவது ஏதாவது நடந்து விட்டதா? இல்லையென்றால் அண்ணன் இவ்வளவு சீக்கிரமாக எல்லாம் வீட்டை விட்டு வெளியே வர மாட்டாரே என்ற பதற்றத்தோடு கதவைத் திறந்தார்.

“ஏண்டா, இப்படி செஞ்சான்? வெளிய வரதுதான் உறுதின்னு வக்கீல் அடிச்சு சொன்னதக்கு அப்பறமும் எதுக்குடா தப்பிக்கனும்? அல்பாயுசுல போறதுக்கா மூணு மாசமா அலைஞ்சு தவிச்சோம்”

கண்களில் வழியும் நீரை கட்டுப்படுத்த முடியாமல் வாய் குளறியபடி முனுசாமி சொன்னது முதலில் முனியப்பனுக்கு புரியவில்லை. முனுசாமி உள்ளே நுழைந்து தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க

பிரேக்கிங் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது.

சேலம் சிறையிலிருந்து தப்பிய ஐந்து குற்றவாளிகளை ஏற்காடு காட்டுக்குள்ளே தமிழக காவல்துறை சுற்றி வளைத்தது. அப்போது நடந்த மோதலில் ஐந்து குற்றவாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல்துறை ஆய்வாளர் பரந்தாமன் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெட்டுக் காயங்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட ஐந்து குற்றவாளிகளில் விஜயா கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மோகன் குமாரும் ஒருவர்.

தொலைக்காட்சி சொன்னதைக் கேட்ட முனியப்பன் அப்படியே மயங்கி கீழே விழுந்தார்.

முனியப்பன் மருத்துவமனையில்தான் கண் விழித்தார். அவரது கட்டிலைச் சுற்றி உறவினர்களும் அக்கம்பக்கத்து வீட்டினரும் இருந்தார்கள். அனைவரது முகங்களும் முழுமையான துயரத்தில் தோய்ந்திருந்தது.

மோகன் ஏன் இப்படி அவசரப்பட்டான்? ஜெயில்லேந்து தப்பிக்கலமா? அனைவரது மனதிலும் இந்த கேள்விகள்தான் அலை மோதியது.

மூன்று மாதங்களுக்கு முன்பாக ரங்காபுரத்தின் ஐந்து வீதிகளையும் அரசு கலைக் கல்லூரியின் பி,காம் மாணவர்களையும் தவிர வேறு யாருக்குமே தெரியாத மோகன் குமார் இன்று தமிழகம் முழுதும் பரபரப்பாக பேசப்பட்டவன். இல்லையில்லை மிக மோசமாக திட்டப்பட்டவன். இவனை நடுத்தெருவில் தூக்கு போட வேண்டும் என்று யாரோ வாட்ஸப்பில் கொளுத்தி விட அது காட்டுத்தீயாக பரவியிருந்தது.

அப்படி என்ன குற்றம் செய்திருந்தான்?

சம்பவம் 1 ஜனவரி 13 2017 காலை ஒன்பது மணி

வேலூர் பழைய பேருந்து நிலையத்துக்கு வெளியே தனியார் பொறியியல் கல்லூரி பேருந்துக்காக மாணவிகள் காத்திருக்கின்றனர். கையில் உள்ள போனில் மூழ்கிய சிலர், பாடப்புத்தகத்தை புரட்டியபடி சிலர். எதிரில் உள்ள கோட்டையை வேடிக்கை பார்த்தபடி சிலர். வேகமாக வந்த பைக்கின் பின் சீட்டில் அமர்ந்திருந்த ஒருவன் கையில் மறைத்து வைத்திருந்த நீளமான கத்தியை ஒரு மாணவியின் நெஞ்சுப் பகுதியில் மூன்று முறை சொருகி விட்டு மீண்டும் பைக்கில் ஏறிப் போய் விட்டான். என்ன நடக்கிறது என்று யாரும் புரிந்து கொள்வதற்கு முன்பே எல்லாம் முடிந்து விட்டது. அந்த மாணவி விஜயா ரத்தக்குளத்தின் நடுவே உயிரிழந்து கிடந்தாள். கறுப்பு நிற டி.ஷர்ட் அணிந்தவன் என்பதைத் தவிர எந்த தகவலும் யாரிடமும் இல்லை. பைக்கின் நிறம் என்ன? எண் என்ன? எதையுமே யாருமே கவனிக்கவில்லை. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த காவல்துறை கண்காணிப்பு காமெரா உயிரை விட்டு பல மாதங்கள் ஆகியிருந்தது என்பது அன்றுதான் தெரிய வந்தது.

சம்பவம் 2 ஜனவரி 24, 2017 காலை எட்டரை மணி

அதே வேலூர் பழைய பேருந்து நிலையம், திருவள்ளுவர் சிலைக்கு அருகில், ஜல்லிக்கட்டுக்காக போராடக் கூடியிருந்த மாணவர்களை கலைக்க போலீஸ் தடியடி நடத்திக் கொண்டிருந்தது. காலில் அடி வாங்கிய ஒரு மாணவன் கோபத்தோடு இன்ஸ்பெக்டரைப் பார்த்து சொன்னான்.

“நாலு நாளா நல்லாத்தான் பேசிக்கிட்ட் இருந்தீங்க, நாங்க கொடுத்த சாப்பாட்டைத்தான் சாப்பிட்டீங்க, கடைசியில உங்க போலீஸ் புத்தியை காண்பிச்சிட்டீங்க”

அவன் மோகன் குமார், கறுப்பு டிஷர்ட் அணிந்த அவனை புகைப்படம் எடுக்கச்சொல்லி ஒரு கான்ஸ்டபிளுக்கு அந்த இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டதை கவனிக்காமலேயே அந்த இடத்தை விட்டு அவன் வெளியேறிக் கொண்டிருந்தான்.

சம்பவம் 3 ஜனவரி 31, 2017

மோகன் குமார் வீடு, மாலை ஆறு மணி.

இன்ஸ்பெக்டர் சின்னையாவும் இரண்டு சப் இன்ஸ்பெக்டர்களும் இன்னும் சில கான்ஸ்டபிள்களும் வீட்டை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். கதவை காலால் உதைத்துக் கொண்டு உள்ளே போய் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்த மோகன் குமாரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துக் கொண்டு வெளியே வந்தார்கள்.

“நான் என்ன சார் தப்பு செஞ்சேன்? எதுக்கு என்னை அரஸ்ட் செய்யறீங்க””

“பட்டப்பகலிலே ஒரு சின்னப் பொண்ணை கொலை செஞ்சுட்டு பெரிய வீரன் மாதிரி ஜல்லிக்கட்டுக்கு போராடறியாடா நாயே”

“சார், நீங்க சொல்றதெல்லாம் தப்பு. என் மகன் அப்படி எல்லாம் செய்யறவன் கிடையாது” என்று வழி மறித்த முனியப்பனை பிடித்து தள்ளி விட்டு

“எதுவா இருந்தாலும் கோர்ட்டில பார்த்துக்க”

என்று ஜீப்பிற்கு போன இன்ஸ்பெக்டர் சின்னையா,

மோகன் குமார் தலை முடியை கையில் இழுத்து வயிற்றில் பூட்ஸ் காலால் உதைத்து

“போலீஸ் புத்தி பத்தி சொன்னியே, லாக்கப்புக்கு வா, போலீஸ் அடி எப்படி இருக்கும்னு காமிக்கறேன்”

என்று சொல்லி இன்னும் இரண்டு அடி கொடுத்த பின்னே அவனை ஜீப்பில் ஏற்றினார்.

அடுத்த சில நிமிடங்களில்  தொலைக்காட்சிகள் பிரேக்கிங் நியூஸ் என்று அலறின.

கறுப்பு டி ஷர்ட் அணிந்த ஒருவன் பைக்கில் பின் அமர்ந்து சென்று போவது போன்ற படத்தையும் மோகன் குமாரை கையில் விலங்கு போட்டு அழைத்து வரும் காட்சியையும் போட்டு  இவன்தான் விஜயாவை கொலை செய்தவன் என்று மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள்.

இருவரும் ஒரே பேருந்தில் கல்லூரி சொல்பவவர்கள், காதலை ஏற்க மறுத்து கண்டபடி திட்டியதால் கொலை செய்து விட்டான் என்று விளக்கமும் சொன்னார்கள். மாநிலமே பரபரப்பானது. கொலையாளியைக் கண்டுபிடித்த காவல்துறைக்கு பாராட்டும் மோகன் குமாருக்கு கண்டனங்களும் குவிந்து கொண்டே இருந்தது. அவற்றுக்கு நடுவே குற்றம் சுமத்தப்பட்டவனின் குரல் அமுங்கிப் போய் விட்டது.

“பதினைந்து நாள் ஆகியும் விஜயாவை கொலை செஞ்சவங்களை ஏன் பிடிக்கலைன்னு போலீஸுக்கு பிரஷர். உண்மையான குற்றவாளியைப் பிடிக்க முடியாம அப்பாவியை மாட்டி விட்டுட்டாங்க. ஆனா அவங்க கிட்ட ஆதாரம் கிடையாது. ஆனால் மோகன் மேல கடுப்பா இருக்கற  இன்ஸ்பெக்டர், என்னவெல்லாம் ஜோடிச்சு வச்சுருக்கான்னு தெரியலை. நேர்ல பாத்த மாதிரி யாரையாவது கொண்டு வந்து நிறுத்தலாம். கொலை நடந்த நேரத்தில மோகன் எங்கே இருந்தான்னு நாம நிரூபிச்சுட்டா, அவனை வெளியே கொண்டு வந்து விடலாம்”

என்ற வக்கீலிடம்

“இது போதுமா பாருங்க”  என்று முனியப்பன் ஒரு கார்டை நீட்டினார்.

“ஆஹா, இது ஒரு நல்ல விஷயம். இது மட்டும் போதாது. இதோட தொடர்புள்ள வேற சில விஷயங்களையும் சேர்க்கனும். அதையெல்லாம் நான் பாத்துக்கறேன். போலீஸ் ஜோடிச்ச வழக்குங்கறது இப்ப நல்லாவே தெரியுது.”

என்று  முக மலர்ச்சியோடு சொன்னார் வழக்கறிஞர்.

பாஸ்ட் ட்ராக் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ஊடகங்களில் காவல்துறை சொன்ன அதே கதையை பப்ளிக் பிராசிகியூட்டரும் அளந்து விட்டார்.

மோகன் குமாரின் வழக்கறிஞர் எழுந்து தன் தரப்பு வாதங்களை முன் வைக்கத் தொடங்கினார்.

“யுவர் ஹானர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மீது காவல்துறையை திட்டியது மட்டுமே மோகன் குமார் செய்த முதல் குற்றம். அன்று அவர் கறுப்பு நிற டிஷர்ட் அணிந்திருந்தது இரண்டாவது குற்றம். அப்போது எடுத்த புகைப்படத்தை கொலை நடந்த அன்று எடுத்ததாக சித்தரித்துள்ளது போலீஸ். மேலும் கொலை நடந்த அன்று மோகன் குமார் கல்லூரிக்கு செல்லவில்லை என்பதையும் ஆதாரமாகச் சொல்கிறார் பி.பி.

“உண்மை. மோகன் குமார் அன்று கல்லூரிக்குச் செல்லவில்லைதான்” என்று அவர் சொன்னதும் நீதி மன்ற வளாகத்தில் ஒரு பரபரப்பு. அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

“மோகன் குமார் கொலை நடந்த சமயத்தில் எங்கே இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் இவை”  

என்று சிலவற்றை நீதிபதியிடம் கொடுத்தார். இரண்டு சாட்சியங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அனுமதி கேட்டார்.

“யுவர் ஹானர், எதிர்த்தரப்பு வக்கீல் அளிக்கும் ஆதாரங்களை நான் பார்வையிட வேண்டும், அதற்கு பதிலளிக்க அவகாசமும் வேண்டும்”

என்று இடை மறித்தார் பி.பி

“நாங்கள் அளித்த ஆதாரங்களை அரசு வழக்கறிஞர் தாராளமாக பார்வையிடட்டும். கொலை நடந்த  நேரத்தில் மோகன் குமார் வேலூர் மருத்துவமனையில் ரத்த தானம் செய்து கொண்டிருந்தார். அன்று எட்டரை மணியிலிருந்து பத்து மணி வரை மருத்துவ மனை ரத்த வங்கியில்தான் இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் இந்த பதிவேடுகளில் உள்ளது, கொலை நடந்ததாக சொல்லப்பட்ட நேரத்தில்தான் அவரது ரத்த அழுத்தம் சோதிக்கப் பட்டு ரத்தம் எடுக்கலாம் என்று மருத்துவர் நேரத்தோடு கையெழுத்து போட்டுள்ளார். மருத்துவமனை சி.சி காமெராவைப் பார்த்தாலும் அவர் அங்கேதான் இருந்தார் என்பது தெரியும்.”

தொடர்ந்து பேசிய வழக்கறிஞர்

“ஒரு உயிரைக் காப்பாற்ற ரத்த தானம் கொடுத்துக் கொண்டிருந்தவர், அதே நேரத்தில்  இன்னொரு உயிரை கொன்று கொண்டிருந்தார் என்று சொல்வது எவ்வளவு பெரிய முரண்பாடு. வழக்கை முடிப்பதற்காக ஒரு அப்பாவியை கொலையாளி என சித்தரிக்கிறார்கள். இத்தனை ஆதாரங்களையும் மறுக்க அவகாசம் வேண்டும் என்று பி.பி விரும்பினால் எனக்கு ஆட்சேபணையில்லை”

என்று சொல்லி அமர்ந்து விட்டார்.

பி.பி அமைதியாகவே இருந்தார். அடுத்த மாதம் ஐந்தாம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சொல்லி நீதிபதி ஒத்து வைத்து விட்டார்.

“தைரியமா இருப்பா, நிச்சயம் வெளியே வந்துடுவே”  என்று வேனில் ஏறும் மோகன் குமாரிடம் சொல்லிய முனியப்பனின் தோளை ஒரு கை தொட்டது.

திரும்பிப் பார்த்தால் அது இன்ஸ்பெக்டர் சின்னையா,

“ஆமாம், வந்துடுவான், வந்துடுவான். உன் மகனுக்கு பாயசம் செஞ்சு ஊட்டி விடு”

என்று கோபமும் நக்கலுமாக  சொல்லி விட்டு இவரது பதிலை எதிர்பாராமல் போய்க்கொண்டே இருந்தார்.

அடுத்த வாரம் தீர்ப்பு என்ற நிலையில் இப்படி ஒரு எதிர்பாராத நிகழ்வு.

“விடுதலை கிடைக்கற நேரத்தில எவனாவது ஜெயிலை உடைச்சுட்டு தப்பிப்பானா, அந்த நாலு பேர் தப்பிக்கிற போது இவனை எதுக்கு கூட்டிட்டு போகனும்? அவங்களால இவனும் இன்னிக்கு செத்துட்டான்”

என்று முனுசாமி சொல்ல

முனியப்பனுக்கோ   “வந்துடுவான்  வந்துடுவான். பாயசம் செஞ்சு ஊட்டி விடு”  என்று சொன்ன சின்னையாவின் முகம்தான் நினைவுக்கு வந்தது.

கண்களில் வடிந்த நீரை துடைக்க தோன்றாமல் முனியப்பன் சொன்னார்.

“இவனை மட்டும் தனியா கொல்லக்கூடாதுங்கறதுக்காக பாவம் அந்த பசங்க உயிரையும் சேத்தே எடுத்திருக்காங்க.”

4 comments:

 1. ...தொலைக்காட்சி யில் நேரலை பார்ப்பது போல் இருந்த்து. தமிழ்நாட்டில் இன்று நடக்க கூடிய வாய்ப்பு உண்டு. நெஞ்சை நெருடுகிறது.

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார். உங்கள் பின்னூட்டம் உற்சாகமளிக்கிறது

   Delete
 2. பாவம் ஓரிடத்தில் பழி வேறிடத்தில். இன்று கூட இதே போல் ஒரு நிகழ்வு. ஆனால் பாதிப்புக்குள்ளான நபருக்கு உதவத்தான் யாரும் வரவில்லை.

  ReplyDelete
 3. Is this story about Delhi police vs ADMK Dinakaran

  ReplyDelete