Monday, April 24, 2017

இன்னும் எதிர்பார்க்கிறோம்ஒரு களப்போராளியின் அனுபவம்நூல்                 “பிறிதொரு பொழுதில்”
ஆசிரியர்             எஸ்.ஜி.ரமேஷ்பாபு
வெளியீடு            வம்சி பதிப்பகம்
                     திருவண்ணாமலை
விலை               ரூபாய் 100.00          

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் தமிழ் மாநிலத் தலைவரும், எனக்கு மிகவும் நெருக்கமான தோழருமான தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு எழுதிய கட்டுரைகள் அடங்கிய நூல் இது.

ஒளிரும் இந்தியா, துன்பத்தில் உழலும் இந்தியா என்று இரு வேறு இந்தியாக்கள் இந்தியாவிற்குள் உண்டு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி எப்போதும் சொல்வார். அந்த இரு வேறுபட்ட இந்தியாவை பார்க் டவுன் தொடங்கி வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் பயணத்திலேயே பார்க்க முடியும் என்ற “பயணக்குறிப்புக்கள் கட்டுரையோடு வேகமாக துவங்குகிறது இந்த நூல்.

சர்ச்சைகள் மிகுந்த சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சில நூறு ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடக்கும் தெற்கு வாயிலைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை, தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதி என்று அழுத்தமாகச் சொல்கிறது “நந்தன் புகுந்த பாதை

கட்டுமானப்பணிகளுக்காக வெளி மாநிலங்களிலிருந்து வந்து உழைக்கிற தொழிலாளர் பட்டாளம் படும் இன்னல்களையும் ஒரு பெரிய விபத்தின் போது மார்க்சிஸ்ட் கட்சி செய்த தலையீட்டையும் மொழி புரியாவிட்டாலும் அந்த ஜார்கண்ட் மாநிலத் தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்த்து என்பதை “தோழமைக்கு மொழியில்லை என்ற கட்டுரையில் சொல்கிறார்.

:மனிதர்களை உற்றுப் பார்ப்போம் என்ற கட்டுரையில் பேப்பர் பொறுக்கி வாழ்நாளைக் கடத்தும் ஒரு முதியவரோடு பிளாட்பாரத்தில் நடத்திய உரையாடல், அந்த அன்புப் பரிமாற்றம், எல்லாமே நெகிழ வைக்கும்.

உலகமயமாக்கலின் விளைவாக பறிபோகும், பாழாகும் இந்திய கடல் வளம், தொண்டு நிறுவன்ங்களின் அரசியல் ஆகியவற்றை விவரிக்கிறது “கடற்கரை- ஒரு அறிமுகம் கட்டுரை. சமீபத்தில் மறைந்த எழுச்சிக் கவிஞர் தோழர் இன்குலாப் அவர்களுடனான கட்டுரையும் சுவாரஸ்யம்.

செறிந்த போராட்ட கள அனுபவம் உள்ள துடிப்பான இளைஞரான தோழர் ரமேஷ்பாபு புனைவுக் களத்திற்குள்ளும் புகுந்து கலக்கக் கூடியவர் என்பது இந்த நூலில் உள்ள “சலீமா” மூலம் தெரிகிறது. அரசியல் சதுரங்க ஆட்டத்தில் பெண்கள் பகடைக்காய்களாக நகர்த்தப்பட்டனர் என்பதை மிக அழகாக இக்கதை சொல்கிறது.

சிலப்பதிகார மறு வாசிப்பாக ஆயிரம் பொற்கொல்லர்கள் கொல்லப்பட்ட நிகழ்வின் பின்னணியில் ஆதிக்க சக்திகளின் சதி இருக்கலாம் என்று புதிய கோணத்தில் அணுகுகிறது “இப்படியும் இருக்கலாம் சிலம்பு

சுவாரஸ்யமான எழுத்து நடை, நூலோடு எளிதில் ஒன்ற வைக்கிறது. களத்தில் நிற்பவருக்கு மட்டுமே இந்த நூல் சாத்தியம். 

மேலும் எதிர்பார்க்கிறோம் தோழர் ரமேஷ்பாபு

No comments:

Post a Comment