Sunday, April 23, 2017

இப்போதும் இன்னும் புதிதாய்

நூல்                 வால்காவிலிருந்து முதல் கங்கை வரை”
ஆசிரியர்             ராகுல சாங்கிருத்தியான்
தமிழில்              முத்து மீனாட்சி
வெளியீடு            பாரதி புத்தகாலயம்
                      சென்னை - 18
விலை               ரூபாய் 280.00

நூலுக்குள் செல்லும் முன்பாக வேறு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. நெய்வேலியில் பணி புரிந்த காலம். அப்போது சங்கத்தின் முன்னணித் தலைவராக இருந்த தோழர் அ.சுப்பராயன் அவர்களைப் பார்க்க நல்ல உயரமும் தடித்த மீசையும் கொண்ட ஒருவர் அவ்வப்போது வருவார். ஒரு நாள் மாலை அவர்களுடைய விவாதத்தில் என்னையும் உட்கார வைத்தார். இவர்தான் தோழர் அஸ்வகோஷ் எனப்படும் ராஜேந்திரசோழன், தமிழின் முக்கியமான எழுத்தாளர் என்று அறிமுகமும் செய்து வைத்தார். அப்போது அவர்கள் பேசியதை விட “அதென்ன அஸ்வகோஷ் என்று ஒரு பெயர்? யாராவது மேற்கு வங்கத் தலைவரா?” என்ற கேள்விதான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதை தோழர் சுப்பராயன் அவர்களிடமே கேட்டு விட்டேன். மறு நாள் ஒரு புத்தகத்தை கொடுத்து இதைப்படித்தால் புரியும் என்றார். அந்த நூல் “வால்காவிலிருந்து கங்கை வரை .சீரியஸான வாசிப்புக்கு துவக்கமாக இந்த நூல் அமைந்திருந்த்து.

அஸ்வகோஷ் எனும் அழியாத கதாபாத்திரத்தை அப்போது அறிந்து கொண்டேன்.

அந்த நூலை அவர் மீண்டும் ஜாக்கிரதையாக கேட்டு வாங்கிக் கொண்டதால் அதை சுட்டு விட வேண்டும் என்ற திட்டம் நிறைவேறவில்லை என்பது கூடுதல் தகவல்.

அப்போது படித்த நூலின் புதிய பதிப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது. இந்தியிலிருந்து நேரடியாக தமிழாக்கம் செய்யப்பட்டது என்பது சிறப்பான ஒன்று. இந்த நூலிலும் எங்களுக்கு ஒரு பெருமிதம் உண்டு. அது கடைசியில்.

இப்போது நூலுக்குள் செல்வோம்.

ராகுல சாங்கிருத்தியான் மனித குல வரலாற்றை சுலபமாக புரிந்து கொள்ள கதைகள் மூலம் சொல்லியுள்ளார்.

கிமு 6000 ல் வால்கா நதிக்கரையில் தொடங்குகிற முதல் கதை தாய் வழிச் சமுதாயமாக சமூகம் இருந்தது என்றும் தாய் மகளுக்கு இடையே இருந்த பொறாமையையும் காண்பிக்கிறது.

கிமு 6000 தொடங்கி கி.பி 1942 வரை பல்வேறு காலக்கட்டங்களை குறிக்கும் இருபது கதைகள். நாகரீகங்கள் நதிக்கரையில்தான் வளர்ந்த்து என்பதை சொல்லும் விதமாக ஒவ்வொரு கதையிலும் ஒரு நதி பாத்திரமாக வந்து செல்கிறது.

தாய் வழிச்சமூகத்திலிருந்து வேட்டை சமுதாயமாக மாறுகிற போது பெண்களின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாய் பறி போகிறது. இரு கூட்டங்களுக்கிடையேயான மோதல்களே பின்னாளில் தேவ அசுர யுத்தமாக சித்தரிக்கப்பட்டது என்பதை ஆரம்பத்தில் இருந்த ஜன்நாயகம் பின்னாளில் அரசாட்சியாக அதிகாரக்குவியலாக மாறியது என்பதை, வேத மந்திரங்களை படிப்பது சுகபோக வாழ்வுக்கான அடித்தளம் என்பதை எல்லாம் துவக்க கால கதைகள் சித்தரிக்கிறது.

காலம் உருண்டோட அரசியல் மாற்றங்களை சொல்லும் கதைகள் தொடர்கின்றன. முகலாயர் ஆட்சிக்காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை கதைகள் நீள்கின்றன. நாமறிந்த புத்தர், அலெக்ஸாண்டர், சாணக்யர், அக்பர் எல்லாம் கதை மாந்தர்களாக வருகின்றனர்.

1857 சிப்பாய்ப் புரட்சிக்கு காரணமான மங்கள் பாண்டேவை லண்டனில் பயின்ற, மார்க்சியம் தேர்ச்சி பெற்றவராய் சித்தரிக்கையில் மனம் குளிர்கிறது. ஆனால் அவரது போர்த்தந்திரத்தை பயன்படுத்த நினைக்கும் அரசர்களோ, அவர் சொல்ல விழையும் ஆட்சி முறையை மட்டும் செவி மடுக்க மறுப்பதை படிக்கையில் எரிச்சலாகிறது.

முன்பு படித்த போதும் சரி, இப்போது படிக்கும் போதும் சரி, மனதை மிகவும் ஈர்க்கும் கதை “பிரபா. மகாகவியும் நாடகப் படைப்பாளியும் பின்னாளில் புத்த பிட்சுவான “அஸ்வகோஷ் அவரது காதலிபிரபா பற்றியும் சரயு நதியின் அலைகள் பற்றியும் ஓரிரு பத்திகளில் என்ன எழுத முடியும்? படித்து உள்வாங்க வேண்டிய படைப்பல்லவா இது?

முப்பதாண்டுகளுக்கு முன்பு படித்த ஒரு புத்தகத்தை இப்போது படிக்கும்போதும் இன்னும் புதிதாகவே இருக்கிறது. இந்த புதிய பதிப்பில் தமிழ் இன்னும் அழகாக வேறு இருக்கிறது. சிறிது நேரம் எடுத்துக் கொண்டு நிதானமாக படியுங்கள். அற்புதமான வாசிப்பனுபவம் நிச்சயம் கிடைக்கும்.

இந்த புதிய பதிப்புக்காக நேரடியாக இந்தியிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்த திருமதி முத்து மீனாட்சி, எங்களின் மூத்த தோழரும் தற்போது நாக்பூரில் வசித்து வரும் தோழர் சியாமளம் காஷ்யபன் அவர்களின் மனைவி என்பது எங்களுக்கு பெருமிதம் அளிக்கிறது.

4 comments:

 1. ...திரு காஷ்யபன் அவர்களின் மனைவியா இந்த மொழிபெயர்ப்பாளர்? காஷ்யபன் அவர்கள் பதிவுகளைப் படித்திருக்கிறேன். வால்கா முதல் கங்கை வரை - நூலைப் படிக்காத இளைஞர்கள் அந்நாளில் மிகச்சிலரே. அந்த அளவுக்கு நம்பகத்தன்மை யுள்ள நூல். முத்து மீனாட்சி மொழிபெயர்ப்பிலும் படிக்கவேண்டும். தங்கள் அறிமுகத்திற்கு நன்றி.
  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார். இந்த மொழிபெயர்ப்பு முந்தையதை விட இன்னும் சிறப்பாக இருக்கிறது

   Delete
 2. தோழர் ராமன் அவர்களுக்கு !
  முத்துமீனடசி என்ற வசந்தா சியாமளம் எழுதிக்கொள்வது. நூலை முழுவதுமாக படித்து எழுதி யுள்ளது மிகுந்த மன நிறைவைத் தருகிறது. மொழிபெய்ர்ப்புக்கு நான் ன் பொறுப்பு என்றாலும் அதன செம்மைபடுத்தி, பிழை திருத்தி, தமிழ் வார்த்தைகளை நவீனப்படுத்தியது பாரதி புத்தகாலயம். குறிப்பாக தோழர்கள் கமலாலயன் ,ஜீவ சுந்தரி பாலன் ஆகிய இருவருமே பெருமைக்குறியவர்கள்..நீங்கள் எழுதிய விமரிசனத்திற்கு நன்றி - தோழமயுடன். முத்து மீனட்சி?வசந்தா சியாமளம்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் பின்னூட்டமும் மின்னஞ்சலும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இப்போதுதான் தோழர் காஷ்யபன் தொலைபேசியில் பேசினார். 75 வயதில் ஒவ்வொரு நாளும் இரவு பத்து மணி வரை பனிரெண்டு மணி வரை மொழியாக்க வேலைகளை செய்து இந்த நூலை கொண்டு வந்தீர்கள் என்று அறியும் போது உங்கள் அயறாத உழைப்பு மலைப்பாக இருக்கிறது. நாங்கள் அல்லவா நன்றி சொல்லவேண்டும்! Really Inspiring

   Delete