Tuesday, April 4, 2017

“இந்திரன் சந்திரன்” முடிவதற்கு முன்பாகவே

காரைக்குடி கஜலட்சுமி சிட்பண்ட்ஸ் மோசடி பற்றி எழுதும் போதே லட்சுமி எனும் பெயரில் நடந்த இன்னொரு மோசடி பற்றி நினைவுக்கு வந்தது என்று எழுதியிருந்தேன்.

எண்பதுகளின் கடைசி வருடங்களில் புதிய வகை மோசடிப் பேர்வழிகள் உருவாகத் தொடங்கி இருந்தார்கள்.

சின்னஞ்சிறு ஊர்களில் தவணை விலை கடைகள் என்று தொடங்குவார்கள். மாதாந்திர பரிசுகள் கொடுப்பார்கள். ஐந்தாறு மாதம் ஒழுங்காகப் போகும். திடீரென ஒரு நாள் கடையை மூடி கம்பி நீட்டி விடுவார்கள். தவணை செலுத்தியவர்கள் கதி அதோகதி.

ஐந்தாறு மாதம் கூட காத்திருக்க முடியாத பேராசைக்காரர்கள் “பாதி விலையில் பொருட்கள்” என்று ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் மிக்ஸி, சோபா, பீரோ, கட்டில் போன்ற பொருட்கள்தான். முதல் ஒரு வாரம் பாதி விலையில் பொருட்கள் விற்கப்படுவது போல தெரியும். ஊரெங்கும் பரபரப்பு ஏற்பட அத்தனை பேரும் ஆசையோடு பணம் கட்டுவார்கள். ஸ்டாக் வரவேண்டும், ஒரு வாரம் பொறுமையாக இருங்கள் என்று புக்கிங் செய்வார்கள். பின்பு ஒரு சுபயோக சுபதினத்தில் பணத்தை சுருட்டிக் கொண்டு காணாமல் போய் விடுவார்கள்.

1990 ம் வருடம் என்று நினைக்கிறேன். அப்படித்தான் ஒரு கடை “லட்சுமி எண்டெர்பிரைஸஸ்” என்ற பெயரில் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் துவக்கினார்கள். அந்த பகுதி எல்லாம் ஒரே பரபரப்பு.

கடை துவங்கிய நான்காம் நாள் மந்தாரக்குப்பத்தில் உள்ள சந்தோஷ் குமார் பேலஸோ அல்லது சுரேஷ்குமார் பேலஸோ அல்லது ஷண்முகா பேலஸோ (தியேட்டரின் பெயர் மட்டும் மங்கலாகவே நினைவில் உள்ளது) அங்கே ரிலீஸாகி இருந்த கமலஹாசனின் “இந்திரன் சந்திரன்” திரைப்படம் பார்க்க நண்பர்கள் சென்றோம்.

லட்சுமி எண்டர்பிரைஸஸ் முன்பாக திருவிழாக் கூட்டம். ஏமாந்து போவதற்காகவே மக்கள் கியூவில் பொறுமையோடு நின்றிருந்தார்கள். “இந்த மாதிரி எத்தனை பேர் ஏமாத்தினதா படிக்கிறோம். மக்களுக்கு கொஞ்சம் கூட புத்தியே வரலையே” என்று சொல்லி விட்டு சினிமா டிக்கெட் வாங்கும் கியூவிற்கு நான் சென்று விட்டேன்.

படம் முடிந்து இரவு ஒன்பது மணி போல திரும்பி வரும் போது பார்த்தால் போகும் போது இருந்ததை விட இரட்டிப்புக் கூட்டம், ஓவர் கூச்சல், போலீஸ் வேறு குழுமி இருந்தார்கள்.

கடையில் முதலாளியோடு சேர்த்து நான்கு பேர். ஒருவர் ஒருவராக நழுவி விட ஒருவர் மட்டும் புக்கிங் செய்திருக்கிறார். அவரும் ஒரு கட்டத்தில் பின்பக்கம் இயற்கை அழைப்பிற்கு போய் விட்டு வருகிறேன் என்று போனவர் அரை மணி நேரமான பின்பும் வரவில்லை. சந்தேகப்பட்ட மக்கள் பின் பக்கம் போய் பார்த்தால் கழிவறைக் கதவு திறந்திருக்கிறது. ஆள் காணவில்லை. கல்லாப் பெட்டியிலும் பணமில்லை.

கடையில் கொஞ்சம் பொருட்கள் இருந்திருக்கிறது, ஆனால் அவர்கள் புக்கிங் செய்தது அதை விட ஏராளமாய்.

ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் ஏமாற்றி விட்டுப் போனதாக பின்பு பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. அன்றைய காலகட்டத்தில் அது பெரிய தொகைதான்.

சினிமாவுக்குப் போகும் முன்பு நாம் சொன்னது சினிமா முடியும் முன்பே பலித்து விட்டது என்பதில் எனக்கு நீண்ட நாள் வருத்தம் இருந்தது. இந்த வருத்தத்தால் “இந்திரன் சந்திரன்” எனும் தெலுங்கு டப்பிங் மொக்கைப் படம் பார்த்த கொடுமை கூட பெரிதாகத் தெரியவில்லை. 

1 comment:

  1. இந்திரன் சந்திரன்மொக்கை படமா? தப்பு தப்பு

    ReplyDelete