Tuesday, January 19, 2016

அம்பேத்கர் பெயரே அவர்களுக்கு பிரச்சினைஅந்த கடிதத்தை படிக்கிற போது மனம் கனக்கிறது. அக்கடிதத்தை படித்தும் மனதில் சிறு அசைவு கூட ஏற்படாதவர்கள் யாராவது இருப்பின் அவர்கள் மனிதர்களா என்று கூட யோசிக்க வேண்டியிருக்கும்.காவி பயங்கரவாதிகளின் ஆதிக்க வெறிக்கு சமீபத்திய பலி ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா. உரிமைகளுக்காக போராடியதும் அந்தப் போராட்டத்தை அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் உறுப்பினராக நடத்தியதும்தான் அந்த இளம் மாணவர் செய்த தவறு.

அண்ணல் அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே மோடி கூட்டத்திற்கு எரிச்சலாக இருக்கிறது. சென்னை ஐ.ஐ.டி யில் அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்த பேர்வழிகள் அல்லவா இவர்கள்!

யாகூப் மேனன் தூக்கிலப்பட்டதை கண்டித்த காரணத்தால் இந்த மாணவர் மீதும் இன்னும் நான்கு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது பல்கலைக் கழகம். உதவித் தொகையை நிறுத்துகிறது. விடுதியிலிருந்து துரத்துகிறது. போராட்டத்தின் மத்தியில் அந்த மாணவர் தற்கொலை செய்து கொள்கிறார். அவரது சடலத்தை அவசரம் அவசரமாக காவல்துறை எரித்துள்ளது. அந்த சாம்பலில் இருந்து நூற்றுக் கணக்கான ரோஹித்துகள் எழுந்து வருவார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. 
 
அவரின் கடிதம் கீழே உள்ளது.

அதற்கு முன்பாக இந்த கடிதத்தை படியுங்கள். ரோஹித் வெமுலாவை தற்கொலைக்கு துரத்தியதில் இந்த கடிதத்திற்கு முக்கிய பங்கு உண்டு.


தெலுங்குப்பட அடியாள் போல காட்சி தரும் இந்த பாவிதான் அந்த அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா. இப்படி ஒரு நிர்ப்பந்தம் கொடுத்து விட்டு தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று யோக்கியவான் போல அறிக்கையும் அளிக்கிறார்.

ஜாதி வெறி, மத வெறி, மொழி வெறி எல்லாவற்றையும் தூண்டி விட்டு அதிலே ரத்தம் குடிக்கிற ஓநாய்க் கூட்டப் பிரதிநிதி மாணவர்களை ஜாதிய சக்திகள் என்று கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் குற்றம் சுமத்துகிறார். அம்பேத்கர் பெயரில் ஒரு மாணவர் அமைப்பு இயங்குவதே இவர்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதை முடக்க எதையும் செய்வார்கள் போல.

காவிக்கூட்டத்திலிருந்து யாராவது கடிதம் எழுதினால் அதை அமலாக்கவே துடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்மிர்தி இராணி அம்மையார். அசைவ உணவில் தொடங்கி வாசகர் வட்டம் வரை அனைத்தும் அவரது கைங்கர்யமே. இப்போது ஒரு ஆய்வு மாணவரின் உயிர் தூக்கில் தொங்கி விட்டதே! என்ன செய்யப் போகிறார் அவர். இது என்ன அவர் முன்பு நடித்து வந்த தொலைக்காட்சித் தொடரா? இவருக்குப் பதில் அவர் என்று ஒருவர் நடித்த கதாபாத்திரத்திற்கு இன்னொருவரை மாற்றி நடிக்க வைக்க? போன உயிரை மீட்டுக் கொண்டு வர இவர்கள் அறிவியல் என்று கதையளக்கும் புராணங்களில் உள்ள சஞ்சீவி மருந்து இவர்களிடம் இருக்கிறதா என்ன?

சகிப்பின்மை சிறிதும் அற்ற ரத்த வெறி பிடித்த காவிக் கூட்டம் ஆர்.எஸ்.எஸையும் அதன் உதிரி அமைப்புக்களையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தாதவரை முகமது அக்லக்குகளும் ரோஹித்துகளும் இறந்து கொண்டே இருப்பார்கள். 
இப்போது அந்த மாணவரின் கடிதத்தைப் படியுங்கள். கண்ணீரை வரவழைக்கிற காவியம் அது. 


வணக்கம்..

இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் போது நான் உங்களுடன் இருக்கப் போவதில்லை. என் மீது ஆத்திரம் கொள்ளாதீர்கள். உங்களில் சிலர் என்மீது நிஜமான அன்பும், அக்கறையும் செலுத்தினீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னை மதிப்புடனும் நடத்தினீர்கள். யார் மீதும் எனக்கு எந்தப் புகாரும் இல்லை. அவை எப்போதும் என்மீதே எனக்கு இருந்தவைதான். எனக்குப் பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. எனது உடலுக்கும், ஆன்மாவுக்குமான இடைவெளி வளர்ந்து நான் பிசாசைப் போல உணர்கிறேன்.

எழுத்தாளனாக வேண்டும் என்பதுதான் எப்போதும் என்னுடைய விருப்பம். அதுவும் கார்ல் சாகனைப்போல ஒரு அறிவியல் எழுத்தாளனாக. ஆனால், நான் எழுதும் இந்த கடைசிக் கடிதம்தான் எனது எழுத்தாக ஆகிவிட்டது.

நான் அறிவியலை நேசித்தேன். நட்சத்திரங்களை, இயற்கையை நேசித்தேன். பிறகு மனிதர்களையும் நேசித்தேன்; அவர்கள் இயற்கையை விட்டு விலகி வெகு தூரம் வந்துவிட்டார்கள் என்று அறியாமல்.
எங்களுடைய உணர்வுகள் இரண்டாம்தரமானவை. எங்களுடைய அன்பு கட்டமைக்கப்பட்டது. எங்களுடைய நம்பிக்கைகள் வர்ணம் பூசப்பட்டவை. எங்களுடைய சுயம் செயற்கையான கலைகளின் வழியே மதிப்பிடப்படுகிறது. காயப்படாமல் அன்பு செலுத்துவதென்பது மிகக் கடினமான ஒன்றாக இருக்கிறது.

ஒரு வாக்குகாக,ஒரு எண்ணுக்காக,ஒரு பொருளுக்காக,என்று தேவைகளின் பொருட்டு மட்டுமே அளவிடப்படும் அளவிற்கு, ஒரு மனிதனின் மதிப்பு குறுகிவிட்டது.

கல்வி, அரசியல், என எந்த ஒரு துறையிலும், எந்தவொரு மனிதனும் அவனுடைய எண்ணத்திற்காக மதிக்கப்படுவதில்லை. வாழ்வதிலும் சாவதிலும் கூட.

இது போன்ற ஒரு கடிதத்தை முதன்முதலாக எழுதுகிறேன். முதல் முறையாக ஒரு இறுதி மடல். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.
ஒரு வேளை…. இதுநாள் வரையிலும் இந்த உலகை, அன்பை, வலியை, வாழ்வை, மரணத்தை எல்லாவற்றையும் புரிந்துகொள்வதில் நான் தவறு செய்திருக்கலாம். எதிலும் அவசரம் தேவையில்லைதான். அனால், நான் எப்போதும் அவசரப்படுபவனாகவே இருந்திருக்கிறேன்.

ஒரு வாழ்க்கையை தொடங்குவதற்கு தீவிரமாக இருந்திருக்கிறேன்.
சிலருக்கு அவர்களுடைய பிறப்பே சாபம்தான். என்னுடைய பிறப்பு ஒரு மோசமான விபத்து. எனது பால்யத்தின் தனிமையிலிருந்து எப்போதும் என்னால் வெளிவர முடிந்ததில்லை. தட்டிகொடுக்கப்படாத பால்யத்தின் தனிமையிலிருந்து.

எனக்கு எந்த வலியும் இல்லை இப்போது. எந்த வருத்தமும் இல்லை.வெறுமையாக உணர்கிறேன். என்னை பற்றிய எந்த கவலையுமில்லாத வெறுமை.அதுதான் மிகக் கொடுமையாக இருக்கிறது. அதனால்தான் இதைச் செய்கிறேன்.

நீங்கள் என்னை கோழை என்று அழைக்கக்கூடும். ஏன்.. முட்டாள், சுயநலவாதி என்றும் கூட சொல்லலாம். நான் இங்கிருந்து போய்விட்ட பிறகு, நீங்கள் சொல்வதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆவி, முக்தி போன்ற இறப்புக்குப் பின்னான கதைககளை நான் நம்பவில்லை. நான் ஏதோ ஒன்றை நம்புகிறேன் என்றால் அது நான் நட்சத்திரங்களுக்குள் பயணிப்பேன் என்பதைத்தான். எனக்கு அந்த உலகங்களைப் பற்றி தெரியும்.

இந்தக் கடிதத்தைப் படிக்கும் யாராவது எனக்காக ஏதாவது செய்யவேண்டும் என நினைத்தால் இந்த உதவியைச் செய்யுங்கள். என்னுடைய ஏழு மாத கல்வி உதவித்தொகையாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் எனக்கு வர வேண்டி இருக்கிறது. அந்த பணம் என் குடும்பத்தினருக்குப் போய்ச் சேருமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ராம்ஜிக்கு நாற்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். அவர் ஒரு போதும் என்னிடம் கேட்டதில்லை என்றாலும், தயவு செய்து அதை அவருக்குக் கொடுத்துவிடுங்கள்.

என்னுடைய இறுதிச் சடங்கு அமைதியாகவும், சுமூகவாகவும் இருக்கட்டும். ஏதோ தோன்றினேன் பிறகு மறைந்து விட்டேன் என்பதைப்போல நடந்துகொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். எனக்குத் தெரியும். நான் உயிர்த்திருப்பதை விட சாவில் சந்தோஷமாக இருப்பேன்.

நட்சத்திரங்களின் நிழலிருந்து…
போய் வருகிறேன்…
V.R.
17/01/2016

சில சம்பிராயாதயங்களை எழுத மறந்து விட்டேன்.
என்னுடைய தற்கொலைக்கு யாரும் பொறுப்பில்லை
யாரும் தங்களது வார்தைகளினாலோ,செயல்களினாலோ என்னை தற்கொலைக்குத் தூண்டவில்லை.

இது என்னுடைய முடிவு மட்டுமே. இதற்கு நான் மட்டுமே பொறுப்பு.
நான் போனபிறகு என்னுடைய நண்பர்களையோ, எதிரிகளையோ இதற்காகத் தொந்தரவு செய்யாதீர்கள்

Sincerely,
V.R.
17/01/2016

உமா அண்ணா… உங்கள் அறையை இதற்காக பயன்படுத்திக் கொண்டமைக்காக மன்னியுங்கள்…
கடைசியாக ஒரு முறை
ஜெய் பீம்
Bye…


No comments:

Post a Comment