இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
மிருதங்கச் சக்ரவர்த்தியான திரு உமையாள்புரம் சிவராமன் அவர்களது எண்பதாவது பிறந்த நாளை ஒட்டி அவரைப் பாராட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எம்.ஏ.பேபி அவர்கள் தேசாபிமானி நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.
திரு உமையாள்புரம் சிவராமன் அவர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் இசையை கேட்டு மகிழ்ந்துள்ளேன். அவரது சிறந்த குணம் பற்றி இக்கட்டுரை மூலமே அறிந்து கொண்டேன்.
அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள்.
தோழர் எம்.ஏ.பேபி அவர்களுக்குள் இருக்கிற கலா ரசிகனையும் இக்கட்டுரை மூலமாகவே அறிந்து கொண்டேன்.
காவிரிக் கரையின் நாதப் பிரவாகம்
எம்.ஏ.பேபி
கர்நாடக சங்கீதத்தின் சாந்தமான அகநிலை அழகை மிருதங்கத்தின் வாயிலாக
வெளிப்படுத்தும் கலைஞனாக இந்த 80 வயதுக்காரர் இன்றும் நம்முடன்
இருக்கிறார். ஆன்மாவுக்குரிய இன்ப - துன்பங்கள் மூலம் பெறும் ஒரு கலை
அனுபவமாகும் உமையாள்புரத்தின் மிருதங்கநாதம். கச்சேரியின் இறுதியில்
இசைக்கப்படுவது எனக் கருதும் ‘தனியாவர்த்தனம்‘ பலரது கைகளில் காதைப்
பிளக்கும் வெடிச் சத்தமாகும். ஆனால் காவிரி பிரவாகம் போல் சாந்தமாகத்
துவங்குகிறது உமையாள்புரத்தின் தனியாவர்த்தனங்கள்.
தாளத்தின்
தாழ்ந்தும், உயர்ந்துமுள்ள நாதத்தின் சுகமான புயலை உருவாக்கி, நிறை செய்து
ஒன்றும் நடக்காததுபோல் அவர் மேடையில் அமர்ந்திருப்பதைப் பார்ப்பவர்கள்
அதிசயித்துப் போவார்கள்.கர்நாடக இசைக் கச்சேரிகளின் பொற்காலமான இருபதாம்
நூற்றாண்டின் பின்பாதியில் பெரும் புகழ்பெற்ற பல்வேறு இசைக் கலைஞர்களுக்கு
மிருதங்கம் வாசித்ததன் மூலம் உமையாள்புரம் இசை உலகின் கவனத்தைத் தன் பக்கம்
திருப்பினார்,
முசிறி சுப்பிரமணிய ஐயர், ஜி.என்.பாலசுப்பிரமணியம்,
அரியாக்குடி ராமானுஜ அய்யங்கார், மதுரை மணி ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத
அய்யர், எம்பார் விஜயராகவாச்சாரி, சாத்தூர் கிருஷ்ணன், பல்லடம் சஞ்சீவராவ்,
பாப்பா வெங்கிடராமையா, துவாரம் வெங்கிடசாமி நாயுடு, டின்.என்.ராஜரத்தினம்
பிள்ளை, முடிகொண்டான் வெங்கிடராம ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், செம்மங்குடி
சீனிவாச ஐயர், வி.சௌடய்யா ஆகியோருக்கு மிருதங்கம் வாசித்தபோது உமையாள்புரம்
இளைஞனாக இருந்தார்.டாக்டர் பி.காசிவிஸ்வநாத ஐயர், கமலாம்பாள்
தம்பதியருக்கு மகனாகப்பிறந்த சிவராமனுக்கு சிறந்த கல்வி கிடைத்தது. இளங்கலை
பட்டமும், சட்டப்படிப்பும் பயின்ற பின்புதான் அவர் முழு நேரமும் இசைக்கென
செலவிடத் துவங்கினார். காசிவிஸ்வநாத ஐயர் டாக்டராக இருந்த போதிலும் ஒரு
சிறந்த இசை கலைஞராகவும் விளங்கினார். வாய்ப்பாட்டு மட்டுமல்லாது வயலின்
மற்றும் மிருதங்கமும் நன்றாக வாசிக்கக் கூடியவராகத் திகழ்ந்தார். இசைக்
கலைஞர்களுக்கு மருத்துவம் பார்ப்பவர் என்ற முறையில் அந்த காலத்தில்
புகழ்பெற்று விளங்கிய இசைக் கலைஞர்களுடன் நெருங்கிய தொடர்பு
கொண்டிருந்தார்.
கர்நாடக சங்கீதத்தில் புகழ்பெற்று விளங்கிய
திருக்கொடிக்காவல் கிருஷ்ணய்யரின் சீடர்தான் காசி விஸ்வநாத அய்யருக்கு இசை
பயிற்றுவித்தார். காசிவிஸ்வநாத அய்யரின் வீடு விருந்தினர்களாக வந்த இசைக்
கலைஞர்களால் எப்போதும் மனமகிழ்ச்சி தருவதாகவே இருந்தது.இசையால் நிரம்பி
வழிந்தது. இத்தகைய சூழலில்தான் சிவராமன் வளர்ந்தார். அவ்வாறு சங்கீதத்தை
விட்டுப் பிரிய இயலாத உறவு அங்கு துவங்கியது. பெரிய இசைக் கலைஞர்கள்
வீட்டின் பால்கனியிலிருந்து பாடும் வேளையில் சிறுவனான சிவராமன் அருகில்
உள்ள ஏதாவது ஒன்றில் தாளம் தட்டித் துவங்குவார். இதைக் கவனித்த அவரது
பாட்டி சிவராமனுக்கு ஒரு கஞ்சிராவைப் பரிசாக வழங்கினார். தாளமிடுவதில்தான்
சிவராமனுக்கு விருப்பம் என்பதைக் கண்டுகொண்ட அவரது தந்தை அவரை
மிருதங்கத்தின் பக்கம் திருப்பிவிட்டார். பின்னாளில் புகழ்பெற்ற மிருதங்க
வித்வானாக மாறிய போதிலும் அவருக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும்,
விமர்சகராகவும் விளங்கியது அவர் தந்தையே.சிவராமனின் ஏழாவது வயதில் ஆறுபதி
நடேச ஐயர்தான் அவருக்கு மிருதங்கத்தின் பாலபாடங்களைக் கற்றுக் கொடுத்தார்.
1945ம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள காளகஸ்தீஸ்வரசுவாமி கோவிலில் அரங்கேற்றம்
நடைபெற்றது. அன்று கும்பகோணம் சீனிவாச அய்யரின் கச்சேரிக்கு மிருதங்கம்
வாசித்தார்.
தொடர்ந்து தஞ்சாவூர் நடையில் மிருதங்கம் வாசிப்பதில்
வல்லவரான தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வாயிலாக மேலும் பல பாடங்களை
கற்றறிந்தார் சிவராமன். சங்கீதத்தின் அறிவு உலகம் சிவராமனுக்கு தனது
கதவுகளைத்திறந்துவிட்டது. 1948ல் வைத்தியநாத ஐயர் காலமான பிறகு பாலக்காடு
மணி ஐயரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டார். மிருதங்கத்திலிருந்து சரியான
நாதத்தை வெளிக்கொணரும் உத்திகளை மணி ஐயரிடமிருந்து கற்றுக் கொண்டார்.
அதன்பிறகு கும்பகோணம் ரகு ஐயரிடம் பாடங்கள் பயின்றார். இந்த காலகட்டத்தில்
பல புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் கச்சேரிகளுக்கு மிருதங்கம்
வாசித்தார்.16ம் வயதில் சிவராமன் தனது தாயை இழந்தார். 1951-ல் மணி ஐயரின்
ஆலோசனைப்படி தனது வசிப்பிடத்தை சென்னைக்கு மாற்றினார். இந்த காலகட்டத்தில்
கல்லிடைக்குறிச்சி மகாதேவ பாகவதரிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார்.
தனது
சொந்த கல்விக்குச் செலவழித்ததைவிட அதிக நேரம் தனது குருமார்களுடன்
செலவழித்து கலை ஆய்வு நடத்தினார் சிவராமன். மூத்த வழக்கறிஞர்களின் கீழ்
இளைய வழக்கறிஞர்கள் பயிற்சி பெறுவது போலத்தான் இதுவும் என்று ஒரு
வழக்கறிஞருமான உமையாள்புரம் ஒருமுறை குறிப்பிட்டார். உங்களுக்கு வழக்கறிஞர்
வேடம் தேவையில்லை என்று அவரது நலம் விரும்பிகள் கூறினார்கள். அதில்
வழக்கறிஞர்களும், இசைக் கலைஞர்களும் உட்படுவர். மிருதங்கம் வாசிப்பதில்
உறுதியுடன் நின்றால் பல உயரங்களைத் தொட இயலும் என்று அவர்கள் தங்களது
எண்ணங்களை வெளிப்படுத்தினர். அது உண்மையானது என்று இன்று உமையாள்புரம்
கருதுகிறார்.உமையாள்புரம் கையாண்ட முறைகள் மிருதங்கநாதத்தின் அடையாளங்களாக
மாறின. பெரிய அளவில் உடல் அசைவுகள் இல்லாமலேயே மிகச் சிறந்த நாதத்தை
வழங்குவதே அவரது முறையாக இருந்தது. மிருதங்கத்திலிருந்து எழ வேண்டியது
நாதம்தான். மாறாக, வெடி ஓசை அல்ல என்ற நம்பிக்கைதான் அவரை முன்னோக்கிச்
செலுத்தியது. தாளம் ஒரு இரைச்சல் அல்ல, அது நாத அதிசயமாகும் என்பதை
உணர்த்துவதற்குத்தான் உமையாள்புரம் முயற்சித்தார்.
மிருதங்கத்தைக் கையாளும்
முறையும், நிசப்தமும் இடையிடையே உள்ள அதிர்வுகளும் அவரது மிருதங்க
வாசிப்பிற்கு மெருகூட்டுகின்றன. பாடகர்களின் திறமையை மேலும்
வெளிக்கொணர்வதுதான் உமையாள்புரம் என்ற பக்கவாத்தியக்காரரின்
தனிச்சிறப்பு.தாளவாத்தியம் என்றில்லாமல், ஒரு நாதவாத்தியமாகத்தான்
மிருதங்கத்தை உமையாள்புரம் கருதுகிறார்.
அவர் மிருதங்கத்தின்
வாயிலாக இசையை வெளிப்படுத்துகிறார். வாய்ப்பாட்டுக் கச்சேரியில் பாடகருக்கு
முழுமையான சங்கீத ஆதரவும், மிருதங்கக் கச்சேரி நடத்தும்போது
மிருதங்கத்தின் மூலமாக ஒரு சங்கீதக் கச்சேரியையும் அவர் லட்சியமிடுகிறார்.
தனது நடையை ‘சிவராமன் பாணி’ என்று அவர் கூறுகிறார்.கற்பனை வளத்தின் சங்கீத
சொரூபமான எம்.டி.ராமநாதனுக்கும், அரியாக்குடியன் ப்ரியப்பட்ட சீடரான
பாலக்காடு கே.வி.நாராயணசாமிக்கும் உமையாள்புரம் மிருதங்கத்தை அர்ப்பணிப்பது
ரசிகர்களுக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு அனுபவமாகும்.
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோட்டில் நடைபெற்ற
செம்மங்குடியின் ஒரு கச்சேரி எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ஒரு சங்கீத
அதிசயமாகும். மிகப் பெரிய பாடகரின் ஆலாபனைத் திறமையோடு ஒத்திணைந்தும்,
சல்லாபித்தும் இசைக்கும் லால்குடியின் வயலினும், உமையாள்புரத்தின்
மிருதங்கமும் சேரும்போதுதான் ஒன்றுக்கொன்று ஒப்பிட இயலாத அனுபவங்கள்
ரசிகர்களுக்குக் கிடைக்கிறது.சமூகத்தில் ஏற்படும் சலனங்களைக்
கவனிப்பதற்கும், அன்பால் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும்
உமையாள்புரம் தயாரான சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்க்கிறேன்.
சென்னையில்
நடைபெற்ற கியூபா ஆதரவு மாநாட்டின் துவக்கமாக உமையாள்புரம், வழங்கிய
மிருதங்கவாசிப்பை ‘மிருதங்க சக்கரவர்த்தியாக நடித்த சிவாஜிகணேசன் உள்பட
சபையினரின் இடைவெளியில்லாத கைதட்டலைப் பெற்றது. அயோத்தியில் பாபர் மசூதி
தகர்க்கப்பட்ட பின்பு நடைபெற்ற முதலாவது மதச்சார்பற்ற கலாச்சார
சங்கமத்திலும் உமையாள்புரம் தனது தாள அர்ச்சனையுடன் பங்கேற்றார்.மதவாதம்
சமூகத்தில் ஏற்படுத்திய மாபெரும் தவறை திருத்திக் கொள்வதற்கு தனது மிருதங்க
இசையொலியின் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.நாடு பத்மவிபூஷன் விருது வழங்கி
உமையாள்புரத்தை கவுரவித்தது. அதற்கும் முன்பு பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய
விருதுகள் அவரைத் தேடி வந்தன. 2001ல் கர்நாடக சங்கீதத்தின் பெருமைக்குரிய
விருதான ‘சங்கீதகலாநிதி’ விருதை மதறாஸ் மியூசிக் அகாதெமி
உமையாள்புரத்திற்கு வழங்கிச் சிறப்பித்தது. கேரள பல்கலைக் கழகம் கவுரவ
டாக்டர் பட்டம் வழங்கியது.
மத்திய அரசின் சங்கீத - நாடக அகாதெமியின்
விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளையும், அங்கீகாரத்தையும் அவர்
பெற்றுள்ளார். கடைசியாக ‘ஸ்வரலயா’ விருதும் அவரைத் தேடி வந்தது.
உலகெங்குமுள்ள இந்திய சங்கீத கலா ரசிகர்களுக்கு முன்னால் அவர் மிருதங்கம்
வாசித்துள்ளார். கடந்த டிசம்பர் 17 அன்று 80 வயதைத் தொட்ட உமையாள்புரத்தின்
இசைச் சேவை மேலும் அதிக காலம் இவ்வுலகிற்குக் கிடைக்கட்டும் என்று
வாழ்த்துகிறேன்.
CPM leader writing about music - really surprise
ReplyDeletewhen red fades it appears as saffron..!!
ReplyDeletejaundiced eyes
Delete