Tuesday, January 5, 2016

கச்சேரியை விட பேச்சு பிரமாதம்

நேற்று முன் தினம் திண்டுக்கல்லில் நிறைவுற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டை ஒட்டி நடைபெற்ற கருத்தரங்கில் பிரபல கர்னாடக இசைக் கலைஞர் திரு டி.எம்.கிருஷ்ணா அவர்கள் ஆற்றிய உரையை நேற்றைய தீக்கதிர் நாளிதழில் பிரசுரித்துள்ளனர். 

அதை உங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளேன். 
 சாதி, மதத்தில் இருந்து கலாச்சாரத்தை உடைக்கணும்

                                                                                 டி.எம்.கிருஷ்ணா

நான் ஒரு கவிஞனாக பேசப் போகிறேன். இப்போதெல்லாம் கலாச்சாரம் பற்றி அதிகமாக பேசுகிறார்கள். அது சுத்த பிராடு. நம் தேசத்துடைய கலாச்சாரம் என்ன என்று சிந்திக்கணும். எப்படியாவது மதம் என்ற ஒன்று வந்துவிடுகிறது. மதம் இல்லாத கலாச்சாரம் இருக்க முடியுமா? நான் பாடுகிற பாடல்கள் ராமா, கிருஷ்ணா, கோவிந்தா என்று தான். கலாச்சாரம் குறித்துப் பேச எனக்கு அருகதை இருக்கா?ஒரு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டதுதான் இசை.கர்நாடக கச்சேரி என்பது கோவிலில் தான். கருவறையில் உள்ள சிவனை, முருகனை பற்றிப் பாடணும். அந்த முருகனையும் தாண்டிப் போகும் போது தான் அது அழகு. அழகில் சாதி, மதம் கிடையாது. 

என்னுடைய பார்வையில், கலாச்சாரத்தை சாதி என்ற பூட்டுக்குள் பூட்டி வைத்திருக்கிறோம். கலாச்சாரத்தை சாதி, மதத்தில் இருந்து உடைக்கணும்.தங்கள் கருத்தை வெளியிட்ட 3 பேர் (தபோல்கர், பன்சாரே, கல்புர்கி) படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த சம்பவத்தால் நான் ரொம்ப கலவரமடைந்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆங்கிலத்தில் ஒரு நல்ல வார்த்தை இருக்கிறது. செக்யூலரிசம் என்பது தான் அந்த வார்த்தை.கடவுள் வழிபாட்டில் சமத்துவம் இருக்கிறதா? அப்படி இருந்தால் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தில் செக்யூலரிசம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கத் தேவையில்லை. எல்லாவற்றையும் கொண்டாடு. எல்லா மதத்தையும் கொண்டாடு. எல்லாம் சமம் என்று பேசுவது பொருத்தமல்ல. உண்மை, சத்தியம் என்ற ஒன்று இருக்கு. எனக்கான விசயம் உங்களிடம் இருந்து பெறும் போது தான் செக்யூலரிசம் என்பதற்கு அர்த்தம் இருக்கிறது. 

சமத்துவம் என்பது யாரும் கொடுக்கும் கிப்ட் கிடையாது. மனிதரா பிறந்த ஒவ்வொருவரும் சமம். நான் சமத்துவமாக இல்லை. நான் மேல்சாதி குடும்பத்தைச் சேர்ந்தவன். படித்தது ஆங்கிலம். மேல்சாதி பழக்க வழக்கம் எனக்கு உண்டு. ஆனால் இன்று கூட பேசும் போது எனக்குள்ள இருக்கிற சாதி பிரச்சனை உங்களுக்கு தெரிய வரும். நான் நிஜமா, சமமா பேசுகிறேனா என்று என்னை யோசிக்க வைக்க வேண்டும். அது தான் சமத்துவம். டிசம்பரில் வெள்ளம் வந்தது. பணக்காரன் ஏழை எல்லாம் சமத்துவமாக அடி வாங்கினார்கள். சாதி மதம் பாராமல் வெள்ள நிவாரணப்பணிகள் நடைபெற்றன. 

அனைவரும் பங்கேற்றார்கள். ஆனாலும் வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் சாதி மதம் பற்றுள்ள மனிதனாக ஆகிவிட்டார்கள்.ஏன் இந்த சாதியையும், மதத்தையும் நம்மால் மறக்கமுடியவில்லை?நான் சென்னையில் கொடுங்கையூரில் வசிக்கிறேன். அங்கே குப்பைஎல்லாம் இருக்கும். அங்குள்ள தலித் பற்றி இதற்கு முன்பு எனக்கு கவலை இல்லை. அங்குள்ள குப்பையை பற்றி கவலை இல்லை. இதனை ஆன்மீகம் மாதிரியும் யோசிக்கலாம், அரசியல் பாணியிலும் யோசிக்கலாம். மும்பையில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. நாட்டில் கருத்துச்சுதந்திரம் இல்லை என்று பேசினேன். அப்போது ஒருவர் எழுந்து இந்த மேடையில் நீங்கள் பேசுவதற்கு அனுமதித்தோமா இல்லையா என்று கேள்வி எழுப்பினார். ஓங்கிக் கத்தினார்கள். அதற்கு நானும் பதில் சொன்னேன். 

வெளியில் வந்த பிறகும் அந்த நபர்கள் மீண்டும் கத்தினார்கள். இது தான் கலாச்சார வன்முறையாகும். எனவே தான் இப்படிப்பட்ட மனிதர்கள் மத்தியில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.ஒருத்தன் இன்னொருவனின் எலும்பை உடைக்கும் வரை நாம் எதிர்ப்பதில்லை. முன்னதாகவே நாம் அதனை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். எந்த தேசமானாலும் அங்கு அரசியல் முழுமையாக இருக்க வேண்டும். மனிதநேயம் என்றால் சத்தியம் என்று தெரிந்து கொள்ளுங்கள். 

இந்த மாதிரி சிந்தனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான விழிப்புணர்வை வாலிபர் சங்கம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

(இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில மாநாட்டு கருத்தரங்கில் பேசிய உரைகளிலிருந்து)

நன்றி - தீக்கதிர் நாளிதழ் 04.01.2016
 

1 comment:

  1. T.M.Krishna ......very different open person. god will protect him.

    ReplyDelete