சமீபத்தில் படித்த மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று. எங்களது மதுரைக் கோட்டத் தோழர் ச.சுப்பாராவ் அவர்கள் எழுதிய
“வன புத்திரி”. இந்தாண்டு வெண்மணி தினத்தன்று திருவாரூரில் நடைபெற்ற எங்கள் சங்க நிகழ்வின் போது புத்தகக் காட்சியும் அமைந்திருந்தது. அப்போது இப்புத்தகத்தை கையில் எடுத்து புரட்டிய போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த பொது இன்சூரன்ஸில் பணியாற்றும் ரமேஷ் என்ற இன்னொரு மதுரைத் தோழர் “அருமையான நூல் தோழர். இதன் கதைக்கரு உருவானதில் எனக்கும் பங்கு உண்டு. சுப்பாராவும் முன்னுரையில் அது பற்றி எழுதியுள்ளார் என்று சொன்னார்.
மதிய உணவு முடிந்து திருவாரூரிலிருந்து புறப்பட்ட போது படிக்கத்
தொடங்கினேன். மாலை இருள் வரும் வரை படித்துக்கொண்டிருந்தேன். ஏற்கனவே
கரகாட்டக்காரன் வண்டிப் பயணம் குறித்து எழுதியிருந்தேன். அதனால் மிகவும் களைப்பாக
இருந்த போதும் மறு நாள் சனிக்கிழமை மதியம் அலுவலகம் முடிந்து வந்தும்
ஓய்வெடுக்காமல் படித்து முடித்தேன். அவ்வளவு அருமையாகவும் விறுவிறுப்பாகவும்
இருக்கிறது இந்நூல்.
சரி, இப்போது அதன் உள்ளடக்கத்தைப் பார்ப்போம்.
நூல்
வன புத்திரி
ஆசிரியர்
ச.சுப்பாராவ்
வெளியீடு பாரதி
புத்தகாலயம்,
சென்னை – 18
விலை
ரூபாய் 80
ராமாயணத்தின் மறு வாசிப்பு இந்த நூல். இலங்கையில் தீக்குளித்த பின்பும்
மீண்டும் ஒரு முறை ராமனால் கானகத்திற்கு அனுப்பப்படுகின்ற சீதையின் கதை இது.
வழக்கமான ராமாயணத்தில் வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு அனுப்பப்படுகிற சீதை இந்நூலில் ராமாயணத்தை
எழுதிக் கொண்டிருக்கிற வால்மீகியின் ஆசிரமத்திற்கு செல்வதுதான் இக்கதையின் மிகப்
பெரிய மாற்றம். படைப்பாளியும் படைப்பின் பாத்திரமும் சந்தித்தால் என்ன நிகழும்
என்ற கற்பனையே இந்த நூலின் அடிப்படை. வித்தியாசமான இந்த கருவின் பின்னணியில்
நிகழும் சம்பவங்களும் எழுப்பப்படுகிற பல கேள்விகளும் உங்களை உலுக்கிக் கொண்டே
இருக்கும்.
வழிப்பறிக் கொள்ளைக்காரனாக இருந்து
முனிவராக மாறிய வால்மீகி, ராமாயண காவியத்தை எழுதி வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி
பட்டம் பெற ஆசைப்படுகிறார். தான் எழுதும் படைப்பை கதையின் நாயகி சீதை படித்து
கருத்து சொல்ல வேண்டும் என்றும் தான் அறியாத சம்பவங்களை சீதை சொன்னால் அதையும்
இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறார். அதனால் தான் எழுதியதை
படிக்குமாறு சீதையிடம் வற்புறுத்துகிறார்.
முதலில் ஆர்வம் காண்பிக்காத சீதையும் படிக்க துவங்குகிறார். சில கருத்துக்களையும்
முன்வைக்கிறார். சில கேள்விகளை முன்வைக்கிறார்.
“கதையின் நாயகன் ராமனின் குலப்பெருமையை விளக்க இருபத்தி நான்கு ஸ்லோகங்களை
எழுதிய நீங்கள் நாயகியான எனது குலப் பெருமையை விளக்க வெறும் பத்து ஸ்லோகங்கள்
மட்டுமே எழுதியுள்ளீர்களே” என்று தொடுக்கும் பாணத்தை சமாளிக்க வால்மீகி தடுமாறும்
போது “என் தாயார் பெயரைக் கூட சொல்லவில்லையே, ஏன் உங்களுக்குத் தெரியாதா” என்ற
அடுத்த பாணத்தில் நிலை குலைந்தே போகிறார்.
இப்படியாகச் செல்கிற நாவலில் சீதை சொல்கிற பல சம்பவங்கள் வால்மீகிக்கு
அதிர்ச்சியளிக்கிறது. கதையின் நாயகனின் பிம்பம் சில இடங்களில் தகர்ந்து போகிறது.
சீதையின் வேதனையையும் குமுறல்களையும் உணர முடிகிறது.
அவற்றையெல்லாம் வால்மீகி தான் இயற்றிய ராமாயணத்தில் சேர்த்தாரா இல்லை
மறைத்தாரா?
வெள்ளித் திரையில் காண்க என்று சொல்வதைப் போல நாவலை படித்து அறிந்து
கொள்ளுங்கள் என்று சொல்வதுதான் இக்கதாசிரியருக்கும் ஏன் சீதைக்குமே செய்கிற
நியாயமாக இருக்கும்.
அற்புதமான ஒரு நூலைப் படைத்த தோழர் சுப்பாராவ் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
பின் குறிப்பு : ராமாயணம் தொடர்பாக ஏராளமானவர்களை சந்தித்து விஷயங்களை திரட்டியதாக சொல்கிறீர்களே, கதையின் நாயகன் ராமனைச் சந்தித்து பேசினீர்களா என்று சீதை, வால்மீகியைக் கேட்கிற போது அவர் தன்னை பார்க்கவோ, பேசவோ மறுத்து விட்டார் என்று வால்மீகி பதில் சொல்வார். இக்காட்சியைப் படிக்கிற போது ஊடகங்களை சந்திக்க மறுக்கும் தமிழக முதல்வர் ஜெ தான் என் நினைவிற்கு வந்தார். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.
No comments:
Post a Comment