Thursday, January 21, 2016

பாஸிட்டிவான படம் இது


 
குத்துப்பாட்டுக்களும் வன்முறைக் காட்சிகளும் டாஸ்மாக் சீன்களும் அபத்தமான பஞ்ச் வசனங்களும் இருந்தால்தான் அது தமிழ்ப்படம் என்ற இலக்கணத்திற்கு மாறாக குடும்பத்தோடு ஒரு காட்சியில் கூட நெளிய வேண்டிய அவசியம் இல்லாத படம் என்பதற்காகவே பாராட்டுக்கள்.

எந்த படத்திற்கு என்று கேட்கிறீர்களா?

சூர்யா, அமலா பால் நடித்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள பசங்க 2 படம்தான்.

“யோவ் எப்பவோ வந்த படத்திற்கு இப்ப விமர்சனம் எழுதறியா” என்ற உங்கள் கோபக்குரல் காதில் விழத்தான் செய்கிறது.

என்ன செய்வது? எங்கள் பகுதி தியேட்டருக்கு இப்போதுதான் வந்தது. எனக்கும் ஒரு நிகழ்ச்சி எதிர்பாராத விதமாக ரத்தானதால் நேரமும் கிடைத்தது.

விஷமக்கார குழந்தையை சமாளிக்க முடியாமல் தத்தளிக்கிற இரு பெற்றோர்கள், அவர்களுக்கு சரியான துணையாக அமைகிற டாக்டர்-ஆசிரியர் தம்பதியினர் இவர்களைச் சுற்றி வருகிறது படம். அதற்குள்ளாக “கார்ப்பரேட் பள்ளிகளின் தன்மை, குழந்தைகளை புரிந்து கொள்ள முடியாத பெற்றோர், பொறுமை இல்லாத ஆசிரியர்கள்” ஆகியோர் பற்றிய அலசலாக அமைந்துள்ளது.

சில இடங்களில் டாகுமெண்டரி மாதிரி இழுக்கிறது. சில இடங்களில் சின்ன சின்ன சுவாரஸ்யங்கள். உதாரணத்திற்கு வார்டனாக வரும் மதராசபட்டிணம் ஆசிரியரைப் பார்த்து (மன்னிக்கவும் அவர் பெயர் எனக்கு தெரியவில்லை)  எ ஏ, பி பீ என்று ராகம் இழுப்பது, தொழிலதிபர் சஞ்சய் ராமசாமி என்று அறிமுகமாகும் சூரி சூர்யாவைப் பார்த்து பம்முவது ஆகிய காட்சிகளை சொல்லலாம். அது சரி, ஏன் எல்லா படங்களிலும் அபார்ட்மெண்ட் செகரட்டரி காமெடி பீஸாகவே இருக்கிறார்கள்?

கடைசி காட்சியில் அந்த சிறுமி கலக்கியிருக்கிறாள்.

கண்ணியமான ஒரு படம் என்பதற்காகவே பார்க்கலாம். திரை அரங்குகளை விட்டு ஒரு வேளை வெளியேறியிருந்தாலும் கூட “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” கண்டிப்பாக போடுவார்கள். அப்போது தவற விடாதீர்கள்.





2 comments: