Thursday, August 8, 2013

வந்துட்டார்யா இன்னொரு அறிவாளி..... ஷங்கர் பட ஹீரோ மாதிரி




இரண்டு நாட்களாக எல்லா ஊடகங்களிலும் ரகுராம் ராஜன் புகழ்தான். ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள ரகுராம்ராஜன் பற்றி எப்படியெல்லாம் பாராட்ட முடியுமோ அப்படியெல்லாம் பாராட்டிக் கொண்டு வருகின்றார்கள்.

மிகப் பெரிய பொருளாதார மேதை, மிகப் பெரிய நிர்வாகி, உலக பொருளாதார நெருக்கடி வரப் போவதை முன்னரே கணித்துச் சொன்ன உலக மகா ஜோசியர், அப்பாடக்கர், இவர் ரிசர்வ் வங்கி ஆளுனரானால் இந்தியப் பொருளாதாரமே தலைகீழாய் மாறி விடும் என்றெல்லாம் வர்ணித்து வருகின்றனர்.

அடிப்படையில் யார் இவர்?

மன்மோகன்சிங், ப.சிதம்பரம், மாண்டெக்சிங் அலுவாலியா கூட்டணியில் ஏற்கனவே இருப்பவர். பிரதமரின் பொருளாதார ஆலோசகர் என்ற பதவியில் இது நாள் வரை குப்பை கொட்டிக் கொண்டு இருப்பவர்தான்.

புதிதாக இந்திய அரசிற்குள் நுழைந்து அற்புதங்கள் நிகழ்த்தப் போகும் அதிசயப் பிறவி இல்லை. எனவே சங்கர் படத்து கதாபாத்திரங்களான இந்தியன், முதல்வன், அன்னியன் போல உங்கள் வாழ்க்கையில் இவர் மாற்றங்களை உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்புக்களை அப்பாவி நடுத்தர இந்திய மக்கள் யாராவது வைத்திருந்தால் அதை உடனடியாக அழி ரப்பர் போட்டு அழித்து விடுங்கள்.

ஏனென்றால்

உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது.

உலகப் பொருளாதார நெருக்கடி வரும் என்று முன் கூட்டியே கணித்துச் சொன்ன அறிவாளியை இப்படி அபாண்டமாக சொல்கிறாயா, இந்த கம்யூனிஸ்டுகளே இப்படித்தான் என்று நீங்கள் சொல்வது என் காதில் நன்றாகவே எழுதுகிறது. பின்னூட்டம் எழுத பல அனாமதேயங்கள் தயாராகிக் கொண்டிருப்பதும் புரிகிறது.

சரி உலகப் பொருளாதார நெருக்கடி ஏன் ஏற்பட்டது?

தொழிற்சாலை தொடங்கி, பொருட்களை உற்பத்தி செய்து அதிலே லாபம் சம்பாதிப்பது  என்றால் அதற்கு கொஞ்சம் நாளாகும். அதுவரை பொறுத்திருக்க முடியாத முதலாளித்துவம் எந்த உற்பத்தியும் இல்லாமல் எந்த சேவையும் செய்யாமல் காசு பார்க்க ஆசைப்பட்டது. சேவை என நான் இங்கே சொல்வது சமூக சேவை இல்லை. வங்கி, காப்பீடு, தொலை தொடர்பு, துறைமுகம் போன்ற உற்பத்தி இல்லாமல் சேவை செய்து லாபம் ஈட்டும் நிறுவனங்கள்.

பங்குச்சந்தை என்பது இங்கே வருகிறது. ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு என்பது ஒரு காலத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி, செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இருந்ததுண்டு. குறுகிய காலத்தில் லாபம் சம்பாதிக்க ஆசைப்பட்ட சர்வ தேச நிதி மூலதனம் ஒவ்வொரு நாட்டின் பங்குச்சந்தைக்குள்ளும் நுழைந்து “ உள்ளே வெளியே” சூதாட்டம் நடத்தத் தொடங்கியது. அப்படிப்பட்ட சூதாடிகளுக்கு அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் ( Foreign Institutional Investors ) என்று கௌரவமான பெயர் வேறு உண்டு.

அவர்கள் நினைத்தால் ஒரு நிறுவனத்தின் பங்கின் மதிப்பு உயரும். திடீரென்று சரியும். ஒரு நிறுவனத்தின் பங்குகளை கோடிக்கணக்கில் முதலீடு செய்து வாங்குவார்கள். பங்கின் மதிப்பு உயரும். அதைப் பார்த்து சாதாரண முதலீட்டாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள். பங்கின் மதிப்பு  மேலும் மேலும் உயர்ந்து கொண்டிருக்கும் போது உயர்ந்து கொண்டிருக்கும் போது சரேலென்று தாங்கள் வாங்கிய பங்குகளை நல்ல விலைக்கு விற்று விட்டு மூட்டைக் கட்டிக் கொண்டு வேறு நாட்டு பங்குச்சந்தைக்கு சென்று விடுவார்கள். பங்கின் மதிப்பு குறைந்ததால் சாதாரண முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டு நடுத்தெருவிற்கு வந்து விடுவார்கள்.

இந்த பரமபத விளையாட்டில் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் நாற்பது லட்சம் ரூபாய் வரை இழந்து விட்டார். பெரும்பாலான தொகை பேராசையால் கடன் வாங்கி முதலீடு செய்ததுதான். அவர் ஒரு முறை என்னிடம் இருபது லட்ச ரூபாய் கடன் கேட்டார். அதில் ஒரு சதவிகித தொகை கூட கடன் கொடுப்பதற்கான சூழல் எனக்கு அப்போதும் கிடையாது, இப்போதும் கிடையாது.

இருபது லட்ச ரூபாய் கொண்டு என்ன செய்யப் போகிறாய் என கேட்ட போது “ எனக்கு பங்குச்சந்தையில் இப்போது ஆழ்ந்த ஞானம் வந்து விட்டது. இருபது லட்ச ரூபாய் முதலீடு செய்தால் ஆறே மாதத்தில் அதை ஒரு கோடியாக மாற்றி விடுவேன். உங்கள் கையில் பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டை அடமானம் வைத்து கொடுங்கள். நாற்பது லட்சமாக திருப்பிக் கொடுக்கிறேன் “ என்றார் அவர்.

“ இதுவரையில் நான் யாரையும் கெட்ட வார்த்தையில் திட்டியது கிடையாது. இனிமேலும் திட்டக் கூடாது என்று உள்ளேன். தயவு செய்து என் கண் முன்னால் நிற்காதே” என்று அவரை துரத்தி விட்டேன். வாங்கிய கடன்களுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவறு மேல் தவறு செய்து வேலையை இழந்து இப்போது காணாமலேயே போய் விட்டார்.

சாதாரண மனிதர்களை நடுத்தெருவில் நிறுத்துவதோடு சர்வதேச நிதி மூலதனம் திருப்தியடையவில்லை. பங்குச்சந்தை சூதாட்டத்தின் மூலம் அடிக்கும் கொள்ளை போதாமல் அடுத்த கட்ட சூதாட்டத்திலும் இறங்கியது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை சேமிப்பு என்பது கெட்ட வார்த்தை. கடன் என்பதே தாரக மந்திரம். கடன் அட்டைகள் இல்லாமல் அமெரிக்கர்களால் டீ கூட குடிக்க முடியாது. எதிர்காலம், அதற்கான சேமிப்பு ஆகியவையெல்லாம் அவர்களுக்கு தேவையற்ற வார்த்தைகள்.

அமெரிக்க வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு வசதிக் கடன் வழங்கியது. நம் ஊரில் ஏழைப்பட்ட மக்கள் கடன் வாங்குவது எவ்வளவு சிரமம் என்று எல்லோருக்கும் தெரியும். திருப்பி செலுத்தும் சக்தி உள்ளதா, ஜாமீன் கொடுப்பார்களா என்று ஆயிரத்து எட்டு விதிகள் பார்த்து கடன் கொடுப்பார்கள். அம்பானி, டாடா, பிர்லா வகையறாக்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் கோடிக்கணக்கில் கடன் பெறுவார்கள், திருப்பித் தரமாட்டார்கள் என்பது வேறு விஷயம்.

திருப்பிததரும் சக்தி உள்ளதா, இல்லையா என்ற கவலையே இல்லாமல் வீட்டு வசதிக் கடனை வாரி வாரி வழங்கியது. வீடுதான் உள்ளதே என்ற திமிர். ரியல் எஸ்டேட் வணிகம் பெருக வீடுகளின் மதிப்புக்கள் உயர உயர இன்னும் கொஞ்சம் வைத்துக் கொள், இன்னும் கொஞ்சம் வைத்துக் கொள் என்று மேலும் மேலும் கடன் வழங்கிக் கொண்டே இருந்தார்கள்.

கடன் வாங்கியவர்களால் தவணைகளை கட்ட முடியவில்லை. ஏனென்றால் அதைக்கட்டுவதற்கான சக்தி இல்லை. நீ கொடுத்தாய், நான் வாங்கினேன் என்ற ரீதியில் விவாதங்கள் நடந்தது. வங்கிகளில் வாராக்கடன்கள்  குவிந்தன.

இந்த வாராக்கடன்களையும் பத்திரங்களாக மாற்றி சிறிய வங்கிகளிடம் இருந்து பெரிய வங்கிகள் வாங்கிக் கொண்டு அதை ஊக வணிகத்தில் உலாவச் செய்தன. இந்த வாராக்கடன் பத்திரங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு வேறு செய்தன.

வீட்டுக் கடன் வாங்கியவர்களால் அந்த கடனை அடைக்க முடியவில்லை. அதனால் வீடுகளின் விலை வீழ்ச்சியடைந்தது. அதனால் வாராக்கடன் பத்திரங்களின் மதிப்பும் சரிந்தது. பெரிய வங்கி, சின்ன வங்கி என எல்லாமே தடுமாறியது. வங்கிகளின் திவால் தொடங்கியது. இந்தப் பத்திரங்களை காப்பீடு செய்த காப்பீட்டு நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்குச் சென்றது.

இந்த பொருளாதார நெருக்கடி அமெரிக்காவில் தொடங்கி ஐரோப்பா முழுதும் பரவியது. நிறுவனங்களின் நெருக்கடி நாடுகளின் நெருக்கடியாக மாறியது. வணிகத்தில் அரசின் தலையீடு கூடாது என்பது உலகமயத்தின் முக்கியக் கோட்பாடு. ஆனால் முதலாளித்துவம் சிக்கலில் தவித்தபோது அரசுகளை தலையிடச் சொன்னது. பல பில்லியன் டாலர் முதலீடு செய்து அமெரிக்க அரசு ஏ.ஐ.ஜி என்ற பெரிய காப்பீட்டு நிறுவனத்தை காப்பாற்றியது. அந்த நிறுவனத்தின் பங்குகளை அமெரிக்க அரசு வாங்கியிருந்தாலும் நிர்வாகம் என்னவோ முன்னர் இருந்த மோசடிப் பேர்வழிகள்வசமே தொடர்ந்தது. இன்னும் எவ்வளவோ எழுதலாம். ஆனால் தொடங்கிய பிரச்சினைக்கே மீண்டும் வருகிறேன்.

சோஷலிச நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் என்று எங்கு அமெரிக்காவின் நாட்டாண்மை செல்லுபடியாகாதோ அங்கே சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பாதிப்பில்லை. இந்தியாவில் பங்குச்சந்தை தவிர வேறு பாதிப்பு பெரிதாக இல்லை.

இப்படி ஒரு பொருளாதார நெருக்கடி வரும் என்று முன் கூட்டியே கணித்த ரகுராம்ராஜன் மேதையில்லையா என்று நீங்கள் கேட்கலாம்.

ஒன்று தெரியுமா உங்களுக்கு?

ரகுராம்ராஜன் பொருளாதார நெருக்கடி பற்றி 2005 ல் கணித்ததாக சொல்கிறார்.

எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 18 வது பொது மாநாடு 2000 ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலும் சரி, பின்னர் அறிக்கை மீது நடந்த விவாதத்திற்கு தொகுப்புரை வழங்கும்போதும் சரி எங்கள் சங்கத்தின் அன்றைய பொதுச்செயலாளர் தோழர் என்.எம்.,சுந்தரம் குறிப்பிட்டது எனக்கு நன்றாகவே நினைவில் உள்ளது.

“ அமெரிக்காவில் வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தடையற்ற வர்த்தகத்தால்தான் இந்த வளர்ச்சி, இது போல இந்தியாவின் நிதித்துறையின் கதவுகளும் திறந்து விடப் படவேண்டும் என்று சொல்கிறார்கள். உற்பத்தியால் ஏற்பட்ட வளர்ச்சி அல்ல. ஊக வணிக சூதாட்டத்தால் உருவான வளர்ச்சி இது. சோப் நுறை மூலம் உருவாகியுள்ள நீர்க்குமிழி போன்றது இது. காற்றடிக்கப்பட்ட பலூன் போன்றது. இந்த நீர்க்குமிழி எப்போது வேண்டுமானாலும் உடையும். ஆனால் இந்த நீர்க்குமிழி உடையும் போது அதன் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். பலூன் உடையும்போது அது ஒட்டுமொத்தமாக கிழிவது போல அந்தப் பொருளாதாரமே சிதைந்து விடும்”

அதே போல மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சீத்தாராம் யெச்சூரி இந்த நீர்க்குமிழி பொருளாதாரம் பற்றி பல முறை எச்சரித்துள்ளார்.

தோழர் சுந்தரமோ இல்லை யெச்சூரியோ தங்களை பொருளாதார மேதைகள் என்றோ இதை நாங்கள் முன்னமே கணித்தோம் என்றோ தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. மாறாக இந்த பாதையில் இந்தியா செல்லக்கூடாது என்று எச்சரிக்கிறார்கள்.

மாறாக அண்ணன் ரகுராம்ராஜன் என்ன சொல்கிறார்?

அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு வேறு சிலர் என்ன சொன்னார்கள் என்று பார்ப்போமா?

இந்தியாவில் நிதித்துறை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதில்தான் சர்வதேச பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்கவில்லை என்று தலப்பாகட்டு மன்மோகன்சிங்கும் சிவகங்கைச் சீமான் சிதம்பரமும் சொன்னார்கள்.

என் மாமியார் தனியார் வங்கிகளையெல்லாம் தேச உடமையாக்கினாங்க, அதனாலதான் இந்தியா ஃசேபா இருக்குது என்று அன்னை சோனியா சொன்னாங்க,

உங்க மாமியாருக்கே நான்தாம்மா ஐடியா குடுத்தேன் என்றார் கலைஞர்.

இந்தியாவில வங்கியெல்லாம் எப்படி செயல்படனும்னு ஒரு கமிட்டி போட்டாங்க,

அதுக்கு நம்ம ஜோசியர் ரகுராம்ராஜன்தான் தலிவரு.

அவர் கொடுத்த பரிந்துரையெல்லாம் என்ன தெரியுமா?

வெளிநாட்டு வங்கி முதலாளிங்கள கிட்ட இந்திய வங்கிங்களோட நிர்வாகப் பொறுப்பை கொடுக்கனும்.

இந்திய வங்கிகளும் வாராக்கடன் பத்திரங்கள் மாதிரி சூதாட்ட வணிகப் பத்திரங்களில வியாபாரம் செய்யனும்.

தேச உடமை வங்கிகளில் ஐம்பது சதவிகித பங்குகளை அரசு வித்துடனும்.

எது சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு காரணமா இருந்ததோ,
அதை இங்கயும் செய்யனும்னு சொல்றாரு ர.ரா.ரா.

யார் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் காரணமோ, அவிய்ங்க கிட்ட
இந்தியாவுல உள்ள வங்கியெல்லாம் கொடுத்திடுங்கப்பா என்று நம்ம ர.ரா.ரா ஐடியா கொடுத்திருக்காரு.

எது இந்திய பொருளாதாரத்துக்கு பாதுகாப்பா இருந்ததோ, அதையெல்லாம் தூரக் கடாசிடுங்கடானு ர.ரா.ரா கண்டிஷனா சொல்லிட்டாரு.

இப்ப சொல்லுங்க,

இவரை தலை மேல தூக்கி வச்சி கொண்டாடறதா

இல்லை

அதை உங்க வாயால நீங்களே சொல்லிடுங்க

1 comment: