Thursday, August 15, 2013

சுதந்திர நாளில் தேசத்தை சுத்தம் செய்திடுவோம்.





கத்தியின்றி ரத்தமின்றி
வாங்கியதா நம் சுதந்திரம்?

குண்டாந்தடிகளில்
உடைந்த மண்டைகள்,
தோட்டாக்கள்
துளைத்த நெஞ்சங்கள்,
சிறைக் கொட்டடியில் இழந்த
இளமைகள்,
தூக்கில் தொங்கிய
கழுத்துக்கள்,

எத்தனை பேர் அறிவார்கள்?
வெகுண்டெழுந்த மாலுமிகளால்
ஆடிப் போனது
வெள்ளையர் கூட்டமென்று.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்
அஸ்தமனத்திற்கு
வெடிகுண்டுகளின் ஒசையும்
காரணம் என்று
இன்றைய தலைமுறையில்
எத்தனை பேர் அறிவார்கள்?

வரலாற்றின் நாயகர்கள்
வதைபட்ட காவியத்தை
திரை போட்டு மூடிவிட்டு
திரும்ப திரும்பக்
கதைத்தார்கள்
“ கத்தியின்றி ரத்தமின்றி
வாங்கிய சுதந்திரம்
இதுவென்று”

வாங்கியதாய் சொன்னவர்களின்
வாரிசுகள்
விற்பனைப் பிரதிநிதியாகி
தேசத்தை
விற்கவும் செய்கிறார்கள்.

வீணர்களின் கையில்
சுதந்திர வீணையோ
புழுதி படியப் படிய.


தியாகிகளின் குருதி
தண்ணீரில் கரைந்து
வீணாவதா?

கொடியேற்றி
மிட்டாய் திங்கவா
சுதந்திர தினம்?

மூவர்ணக்கொடியை
சட்டைப்பையில்
குத்தி வைத்து
அழகு பார்க்கவா
சுதந்திர தினம்?

அடிமையாய் மாறியவர்
நம்மையும்
அடிமையாய் மாற்றத்
துடிப்பவர்
செங்கோட்டைக் கொத்தளத்தில்
ஆர்ப்பரிக்கும் நாடகத்தை
மவுன சாட்சியாய்
வேடிக்கை பார்க்கும்
வெட்கக்கேடு
இனியும் தேவையா?

தியாகிகளைப் போற்றி
சுதந்திரம் காப்போம்.
எந்நாளும் நாம்
அடிமையில்லை
என்பதை
உரக்கச் சொல்வோம்.

தேசத்தை விற்பவர்களை
தேசம் விட்டு
வெளியேற்றுவோம்.

சுதந்திர நாளில்
தேசத்தை
சுத்தம் செய்திடுவோம்.


1 comment:

  1. சுதந்திர தினமும் குடியரசு தினமும் மற்றுமொரு விடுமுறை நாட்கள் என்பதே இன்றைய உண்மை. அதிலும் இந்த நாட்களுக்கு முன் தினம் டாஸ்மாக் விற்பனை உயர்வது?....... என்ன கொடுமை சரவணன் இது?

    ReplyDelete