இரு தினங்கள்
முன்பாக நான் பார்த்த ஒரு காட்சி இது.
வீட்டிற்குத்
தேவையான பொருட்களை ஒரு சின்ன சுயசேவைப் பிரிவு கடையில் வாங்கச் சென்றிருந்தேன்.
பில் போடும் இடத்தில் எனக்கு முன்பாக ஒரு சிறுவன் ( சிறுவன் என்று கூட சொல்ல
முடியாது. எல்.கே.ஜி படிக்கும் குழந்தை என்பதுதான் சரியாக இருக்கும் ) தன்
மாமாவுடன் வந்திருந்தான். அவனே பல பொருட்களை எடுத்து வாங்கச் சொல்லிக்
கொண்டிருந்தான். கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் அந்தக் குழந்தைக்கும்
மாமாவிற்குமான உரையாடல் ஆங்கிலத்தில்தான் நடந்து கொண்டிருந்தது.
பில் போடும்
நேரத்தில் ஒரு டப்பாவைக் கொண்டு வந்து இதை வாங்க வேண்டும் என்று சொல்ல மாமா
மறுக்கிறார். அது என்ன வஸ்து என்பது எனக்கு புரியவில்லை. உடனடியாக அந்தக் குழந்தை
தரையில் புரண்டு அழ அந்த மாமா கடைக்காரருக்கு ஜாடை காண்பித்து வாங்குவது போல
நடிக்கிறார். பையில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது அந்த குழந்தை. அடுத்து
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட ஒரு டின்னை வாங்கச் சொல்கிறது.
இது
குழந்தைகளுக்கானது இல்லை என்று மீண்டும் மறுக்கிறார் மாமா. அந்த டின்னில் உள்ள
சோட்டா பீம் படத்தைக் காண்பித்து ”இது குழந்தைகளுக்கானது இல்லையென்றால்
எதற்கு சோட்டா பீம் படத்தை
போட்டுள்ளார்கள்” என்று கேட்க எல்லோரும் வாயடைத்துப் போனார்கள்.
குழந்தை அசந்த
சந்தர்ப்பத்தில் அந்த டப்பாவையும் டின்னையும் கடைக்காரரிடமே கொடுத்து விட்டு தலை
தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று அவசரம் அவசரமாக பைக்கை ஸ்டார்ட் செய்கிறார்.
ஆனால் அந்த விவரமான குழந்தை மீண்டும் பையைக் காண்பிக்கச் சொல்கிறது.
அது கடைசியாக
வாங்கச் சொன்ன இரு பொருட்களூமே பையில் இல்லை.
ரோட்டிலேயே
அது மீண்டும் புரண்டு உருண்டு அழப் போகிறது என்று எல்லோரும் பார்த்துக்
கொண்டிருந்த சமயத்தில்தான் யாருமே எதிர்பாராத அந்த சம்பவம் நிகழ்ந்தது.
சுளிரென்று
மாமாவின் கன்னத்தில் அறைந்தது அந்த குழந்தை. “ யூ சீட், என்னை முட்டாளாக்க முயற்சிக்காதே”
(
You Chet. Don’t Try to Fool Me ) என்று
கர்ஜிக்க அந்த மாமாவிற்கு அந்தப் பொருட்களை வாங்குவதைத் வேறு வழியே இருக்கவில்லை.
இந்த காலத்து
குழந்தைகள் எவ்வளவு விவரமாக உள்ளார்கள் என்று அங்கே இருந்தவர்கள் எல்லோரும் பேசிக்
கொண்டாலும் நான் இந்த சம்பவத்தை மிகவும் கவலையோடு பார்க்கிறேன். குழந்தைகளுக்கு
அளிக்கிற அளவு கடந்த செல்லம் பிடிவாதமாகவே மாறுகிறது. என்ன நினைத்தாலும் அது
நடந்தேயாக வேண்டும் என்ற சிந்தனை ஊறிப்போகிறது. அதனால் யதார்த்தத்தை புரிந்து
கொள்ளும் பக்குவமே இல்லாமல் போய் விடுகிறது. குழந்தைப் பருவத்தில் சரி செய்யவில்லையென்றால்
வளர வளர முரடர்களாகவே மாறி விடுவார்கள். பெற்றோர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய
அவசியத்தை உணர்த்துகிறது.
ஊடகங்கள்
உருவாக்கும் புதிய நுகர்வோர்
கலாச்சாரத்தில் சிக்கிக் கொள்பவர்கள் குழந்தைகள்தான் என்பதும் இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாகிறது. விளம்பரங்களில்
காணும் அனைத்தையுமே வாங்க வேண்டும் என்ற சிந்தனையை ஊட்டுகின்றனர்.
இந்த நிலை மாற
வேண்டும்.
எப்படி?
ஒவ்வொருவரும்
சிந்திப்போமே,
குறை குழந்தைகளிடம் அல்ல... பெற்றோர்களிடம்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவாக உள்ளது பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறுவன் - குழந்தை செய்தியை பயத்துடன் படித்தேன்.
ReplyDelete//அந்தக் குழந்தைக்கும் மாமாவிற்குமான உரையாடல் ஆங்கிலத்தில்தான் நடந்து கொண்டிருந்தது//
தமிழகத்திற்கு உரிய எப்படியான பெருமை :(
கடந்த 20 ஆண்டுகளாக நாம் சிதைத்து வரும் தமிழ் கலாச்சாரத்தின் விளைவு இது
ReplyDelete