Thursday, August 22, 2013

சாமியார்களுக்கு பாலியல் வன் கொடுமைதான் முக்கியத் தகுதியா

இது  கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதிரான கட்டுரை அல்ல,
தங்களையே கடவுள் என்று சொல்லிக் கொண்டு காசு பார்க்கும்
மோசடிப் பேர்வழிகளை நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் அப்பாவி
மக்கள், இனியாவது சாமியார்கள் என்ற போர்வையில் உலா வரும்
ஆசாமிகளை நம்பி ஏமாறக் கூடாது என்பதற்காகத்தான்.

இதோ இந்த படத்தில் உள்ள சாமியார் யார் தெரியுமா?


இந்திய மக்களின் மனசாட்சியை உலுக்கிய புது டெல்லி மாணவி 
பாலியல் கொடுமை நிகழ்வு நினைவில் உள்ளதா?

அப்போது ஏராளமானவர்கள் பல்வேறு அபத்த மொழிகளை 
உளறிக் கொட்டினார்கள். சங் பரிவார குட்டி தேவதைகள் முதல்
தலைமை பீடத்தில் இருந்து மோகன் பகவத் வரை அப்போது
ஆணாதிக்க சிந்தனைகளை வெளிப்படுத்தி தங்களின் உண்மை
முகத்தை மேலும் ஒரு முறை வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள்.

தமிழகத்தின் காமெடி சாமியார் மதுரை ஆதீனம், பெண்கள் பர்தா
போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். அந்த சமயத்தில் ஒருவர்
கூறியது என்ன தெரியுமா?

" அந்தப் பெண் தன்னை கெடுக்க வந்தவர்கள் காலில் விழுந்து
அண்ணா, என்னை எதுவும் செய்யாதீர்கள் என்று கெஞ்சி இருக்க
வேண்டும், அண்ணா என்று கூப்பிட்டு ஒரு மந்திரத்தை ஜபித்திருந்தால்
அவருக்கு எதுவும் நிகழ்ந்திருக்காது. ஆகவே தவறு அந்தப் பெண்
மீதுதான்"

இதைச்சொன்ன புண்ணியவான்தான் மேலே படத்தில் இருக்கும்
ஆசாராம் பாபு. கோடிக்கணக்கில் சொத்துக்கள் கொண்ட ஒரு
மடத்தை நடத்தி வரும், கடவுளின் அவதாரம் என்று அழைக்கப்படும்
இந்த ஆசாராம் பாபு மீது டெல்லி மற்றும் ராஜஸ்தான் காவல்துறை
வழக்கு பதிவு செய்துள்ளது.

எதற்குத் தெரியுமா?

ஒரு பதினாறு வயது மாணவியை பாலியல் வன் கொடுமை செய்த
காரணத்திற்காக.

இந்த மனிதர் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, மோசடி,
நில அபகரிப்பு, பாலியல் புகார்கள் என்று ஏராளமான புகார்கள்
பல வட மாநிலங்களில் பதிவாகியுள்ளது.

ஆனாலும் அவர் தசாவாதாரம் கமல் போல, மசாலா கேப் இளவரசு
போல பல பல கெட்டப்புக்களில்  பக்தர்களுக்கு அருள் பாலித்துக்
கொண்டிருக்கிறார். அவர்களும் காணிக்கைகளை கொட்டிக்
கொண்டே இருக்கிறார்கள். இவர்களும் கொழித்துக் கொண்டே
இருக்கிறார்கள். 

எந்தவித குற்றச்சாட்டும் எழாத சாமியார்கள் யாராவது இப்போது
உள்ளார்களா? குற்றம் செய்வதுதான் தகுதியாக மாறிக் கொண்டு
வருகிறது.

என்னுடைய வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்.

கடவுளை வேண்டுமானால் நம்புங்கள்,
கடவுள் இல்லை என்று சொல்பவரை  வேண்டுமானால் நம்புங்கள்,
கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் எறு சொல்பவரைக் கூட
நம்புங்கள்.

ஆனால் நான்தான் கடவுள், கடவுளின் தூதன், கடவுளை நீங்கள்
சென்றடைய உதவும் மீடியம், என்றெல்லாம் சொல்பவர்களை மட்டும்
நம்பாதீர்கள். 

பாபா ராம்தேவ்களும் நித்தியானாந்தாக்களும் உங்களின் பலவீனத்தை
மூலதனமாக்கி வளர்ந்தவர்கள்.

இனியும் சாமியார்கள்  உங்கள்  பலவீனமானத்தை பயன்படுத்த
அனுமதிக்கப் போகின்றீர்களா?
 

3 comments:

  1. நல்ல பதிவு. உண்மை சாமியார்களை நம்பி எத்துணையோ பேர் ஏமாந்து கொண்டிருக்கிரார்கள்.

    ReplyDelete
  2. இந்த அவசர உலகத்தில் நிம்மதி வேண்டி இவர்களைப் போன்றவர்களிடம் நாடி செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இவர்களை போன்றோர் உண்டு கொழிப்பது நிற்கப்போவதில்லை.

    ReplyDelete
  3. நம்ம நித்திக்கு தந்தி தொலைக்காட்சி வாழ்வு கொடுத்துள்ளது.

    ReplyDelete