Friday, August 2, 2013

சிரிக்கக்கூடிய விஷயமா இது?



 

இன்று ஒரு பிரிவுபசார விழாவில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. ஓய்வு பெற்றவர் எங்கள் துறையைச் சேர்ந்தவர் கிடையாது. ஆனால் அவரது மகன் எங்களுக்கெல்லாம் பழக்கம் என்பதால் அழைத்திருந்தார். சென்றிருந்தோம்.

அது நிர்வாகம் நடத்திய கூட்டமா இல்லை ஓய்வு பெற்றவர் ஏற்பாடு செய்த கூட்டமா என்பது தெரியாது.மதிய உணவு ஓய்வு பெற்றவர் ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் சென்றது கூட அந்த விருந்திற்குத்தான்.

கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்களும் இருபத்தி ஐந்து பெண்களும் கலந்து கொண்டிருந்த கூட்டம் அது. அதிலே  பேசிய ஒருவர் “ இந்த விழா சிறப்பாக உள்ளது. ஆனால் எனக்கு ஒரு குறை. அண்ணன் வாங்கிக் கொடுத்த சரக்கு போதாது. இன்னும் கொஞ்சம் வாங்கிக் கொடுக்க வேண்டும். எனக்கு மட்டும் இல்லை. இன்னும் மூன்று பேருக்கும் கூட வேண்டும். “ என்று கூற பெண்கள் உட்பட அத்தனை பேரும் சிரிக்கத்தான் செய்தார்கள்.

எனக்குத்தான் மிகவும் கோபமாகவும் வருத்தமாகவும் வந்தது.

பெண்கள் பங்கேற்கிற ஒரு கூட்டத்தில் சரக்கடித்து வந்தது என்பதே தவறு. அது மட்டுமல்லாமல் அந்தக் கூட்டத்தில் சரக்கு போதாது என்று மைக் பிடித்து வேறு பேசுகிறார். அதைக் கண்டிப்பதற்கு பதிலாக எல்லோரும் சிரிக்கிறார்கள். முகம் சுளிக்க வேண்டிய பெண்கள் கூட சிரிக்கிறார்கள்.

இந்த சமூகம் எங்கே போகிறது என்று கவலையாக உள்ளது.

மது அருந்துவது தவறு என்ற கருத்தோட்டம் ஒரு காலத்தில் இருந்தது இப்போது மறைந்து விட்டது. யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மது அருந்திய காலம் இப்போது இல்லை.

இந்த நிலைக்கு யார் காரணம்?

அரசு எப்போது டாஸ்மாக் என்ற பெயரில் நேரடியாக ஒயின் ஷாப் திறந்து சீமைச் சாராயம் விற்க ஆரம்பித்ததோ அப்போதுதான் இந்த சீரழிவு தொடங்கியது.

இது எதிர்காலத்தில் இன்னும் மோசமாகும் என்பதுதான் மிகவும் கவலையளிக்கிறது.  

2 comments:

  1. தோழரே
    உழைப்பாளி தன்
    ஒரு மணி நேர ஊதியத்தில்
    ஒரு நாள் முழுவதும் பசியாற
    இதோ அம்மா உணவகம்!
    ஆனால் அவனின் ஒரு நாள் ஊதியம்
    முழுவதையும் கொள்ளையடிக்க
    இதோ டாஸ்மாக் நிறுவனம்!
    என் சதையை வெட்டி எனக்கே
    தின்ன கொடுக்கும் அவலம் இது அல்லவா

    ReplyDelete
  2. உண்மை தான்.ஏதோ மக்களுக்கு போக்குவரத்து சேவையை அரசே பொறுப்பேற்று குறைந்த விலையில் நடத்துவது போல் மதுவை அரசே விற்பனை செய்வது தான் சீரழிவுக்கு காரணம்.

    ReplyDelete